கேள்வி 1: “மானமும் அறிவும் மனிதனுக்கு அழகு” என்றார் தந்தை பெரியார். தற்போது தமிழ்நாடு அரசு நடத்துகிற டாஸ்மாக் மதுக்கடைகளால் பெரும்பாலான தமிழ்நாட்டு இளைஞர்கள், பெரியவர்கள் என மதுவில் வீழ்ந்து மானத்தையும், அறிவையும் இழந்து வருகிறார்களே… இதற்கு என்னதான் தீர்வு …?
– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்
பதில் 1: மதுபோதையை விட ஆபத்தானவை மத போதையும், பிற போதைகளான ஜாதி போதை, கஞ்சா, அபின் போதை, சினிமா, ஊடக, தொலைக்காட்சி போதை! அவற்றையும் தாண்டிப் பதவி போதை போன்ற பல போதைகளும் இருக்கின்றன. டாஸ்மாக் கடை போதை, கள்ளச் சாராய போதை போன்றவற்றை வராமல் தடுக்க, இந்தியா முழுமையும் ஒன்றிய அரசு அவற்றைத் தடை செய்தால் மட்டுமே முழுமையாக இதனை ஒழிக்க முடியும். அண்டை மாநிலத்தில் நேரடியாகவோ, மறைமுகமாகவோ மது விற்பனை நடந்தால் அதை ஒரு மாநில அரசு தடுத்து வெற்றி பெற முடியாது என்பதே யதார்த்தம். அதுதான் நிரந்தரத் தீர்வு – பிரச்சாரம், முழுமையான சட்டம், தண்டனை மூலம் தீர்வு காணலாம்.
கேள்வி 2: அன்று ஒன்றியப் பாதுகாப்பு அமைச்சராக இருந்த மறைந்த பாபு ஜெகஜீவன்ராம் அவர்கள் சம்பூர்ணந்தா சிலையைத் திறந்து வைத்ததால் சிலை தீட்டாகிவிட்டது எனக் கூறி ஸநாதனவாதிகள் கங்கை நீரைக் கொண்டுவந்து அந்தச் சிலையை சுத்தம் செய்தார்கள். இன்று, உத்தரகாண்டில் காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே பங்கேற்றுப் பேசிய மேடை தீட்டாகிவிட்டது எனக் கூறி ஹோமம் நடத்தி சுத்திகரிப்புச் செய்துள்ளார்களே?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 2: அமிர்தகால ஆட்சியின் 80ஆம் ஆண்டு அபாரமான சாதனையோ, சாதனை! இந்த லட்சணத்தில் அரசியலமைப்புச் சட்டம் என்பது வெறும் ஏட்டுச்சுரைக்காயாகவும், நீதிமன்றங்களை வெறும் கொலு பொம்மைக் காட்சியாகவும் ஆக்கும் மோசமான நிலை!
கேள்வி 3: நாட்டில் தற்போது 500 ரூபாய்த் தாள்தான் அதிக அளவு புழக்கத்தில் உள்ளது. இதனால் சில்லறைத் தட்டுப்பாடு நிலவுகிறது. இயந்திரப் பணப் பரிமாற்றத்தில் மாற்றம் செய்து, சில்லறைத் தட்டுப்பாடு நீங்க 10, 20, 50, 100 ரூபாய்த் தாள்கள் அதிக அளவில் அச்சிட ஒன்றிய அரசு முன் வருமா?
– மு.சு. அன்புமணி, மதிச்சியம், மதுரை
பதில் 3: ஒன்றிய நிதியமைச்சர் பதில் கூறவேண்டிய கேள்வியை என்னிடம் கேட்கிறீர்களே!
கேள்வி 4: பாதுகாப்புக் (இராணுவ) கண்ணோட்டத்தில் நாட்டின் இறையாண்மைக் கொள்கை பாதிப்பு காணும் என்பதால் விண்வெளித் துறையை ஒன்றிய அரசு தனியாருக்குத் திறந்துவிடக் கூடாது என தாங்கள் உள்பட பல்வேறு தரப்பினர் கருத்துத் தெரிவித்துள்ள நிலையில், இதில் தனியார்த் துறை வந்தால் இன்னும் ஆரோக்கியமான போட்டிகள் வந்து அதிக தயாரிப்புகளை நாம் செய்ய முடியும். ஆகையால், விண்வெளித் துறையில் தனியார் வருவது என்பது தவறு கிடையாது; வரவேற்கத்தக்கது என இஸ்ரோ முன்னாள் தலைவர் மயில்சாமி அண்ணாதுரை அவர்கள் தெரிவித்துள்ளாரே?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 4: அது அவரது கருத்து. அவர் கண்ணோட்டம் வேறு. பாதுகாப்புக் கண்ணோட்டம் வேறு! அரசுத் துறையில் இருப்பதே சாலச் சிறந்தது!
கேள்வி 5: திராவிடம் என்பது என்ன? திராவிடர்கள் யார்? அவர்கள் தமிழர்களா இல்லையா?
– முனைவர் மு.தவமூர்த்தி, தஞ்சாவூர்
பதில் 5: “திராவிடம்” என்பது வெறும் நிலப்பரப்பு அல்ல! அது ஒரு பண்பாட்டுத் தத்துவம் – சமத்துவக் கொள்கைத் தத்துவம். திராவிடர்கள் நம் நாட்டின் பூர்வீகக் குடிகள். ஆரியர் போல் வந்தேறிகள் அல்லர். நாம் மொழியால் தமிழர்கள். வழியால், விழியால் (பார்வை கண்ணோட்டம் வழிமுறையால் தமிழர்கள். தமிழர் என்னும்போது பெருமை; திராவிடர் என்னும்போது உரிமை; முழுப் பண்பாட்டு உரிமை – சமத்துவ, சுதந்திர, சமூகநீதிப் பார்வையுடையது.)
கேள்வி 6: பெரியாரின் சுயமரியாதை இயக்கத்திற்கும், பகுத்தறிவுச் சிந்தனைகளுக்கும் உள்ள தொடர்பு என்ன?
– ஜி.ரோஜா, கோவை

பதில் 6: மூளைக்கும், இதயத்திற்குமான தொடர்பு – உடலில் உள்ளதுபோல்… புரிந்துகொள்ளுங்கள்!
கேள்வி 7: பெண்களின் முன்னேற்றத்தில் பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் எவ்வாறு உதவின?
– கே.ஜீவா, பிள்ளையார்பட்டி
பதில் 7: கரண்டி, அடுப்பாங்கரையை விட்டு வெளியேறி, பெண்கள் பேனா பிடித்து, ஆட்சியில் அமர்ந்து ஆணையிடுவதும், தேவையெனில் இராணுவம், காவல் துறை ஆகியவற்றில் இணைந்து துப்பாக்கி பிடித்து வீரம் கொண்ட விவேகிகளாக வியக்க வைக்கும் அளவிற்குத் தந்தை பெரியாரின் பகுத்தறிவுச் சிந்தனைகள் உதவின அல்லவா… ஜீவா அவர்களே!
கேள்வி 8: இன்றைய தலைமுறைக்கு பெரியாரின் சிந்தனைகள் தரும் முக்கியமான பாடங்கள் எவை?
– பி.சாந்தி, வல்லம்
பதில் 8: பகுத்தறிவு, சுதந்திரச் சிந்தனை, சமத்துவ, சமூகநீதி – தன்மானம், தன்னம்பிக்கை, தன்னிறைவு ஆகியவற்றை அடையும் முக்கிய துணிவும், அறிவும்!

கேள்வி 9: பெரியாரின் சிந்தனைகளில் இன்றைய இளைஞர்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய ஒரு கருத்து எது? ஏன்?
– பி.முத்துக்குமாரபதி, மருத்துவக்கல்லூரி, தஞ்சை
பதில் 9: ஜாதி ஒழிந்த சுயமரியாதை வாழ்வு – சமதர்ம மானிட நேயம்!
கேள்வி 10: அறிவியல் மனப்பான்மையை வளர்ப்பதில் கல்வியின் பங்கு என்ன?
– கே.ராஜம், நீலகிரி, தஞ்சை
பதில் 10: தற்போது பூஜ்யம்! அதற்கு முன்னே ‘நடைமுறை அறிவியல்’ என்பதை ‘1’ எனப் போட்டு அதன்பின் 0000… என்று போட்டு பூஜ்யத்தவர்களைக் கொண்டு ராஜ்யங்களை ஆள முடியும் என்ற சாதனைகளின் உச்சம்!
