பொதுவாக ஒரு நாட்டின் எதிர்காலம் அந்த நாட்டின் வகுப் பறைகளிலும் விளையாட்டு மைதானங் களிலும் தான் செதுக்கப்படுக்கிறது. ஆனால், இன்றைய காலகட்டத்தில் நாட்டின் மிகப்பெரிய மாநிலமான உத்தரப் பிரதேசத்தின் தலைநகரிலேயே சிறுவர்கள் போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுத்தப்படும் அவலம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இரயில் நிலையங்கள் போன்ற பொது இடங்களில் அடிப்படைத் தேவைகளான குடிநீர் மற்றும் சிற்றுண்டிகள் விற்பனை செய்யப்படுவதைத் தாண்டி, மென் போதைப் பொருட்களான குட்கா, சிகரெட் மற்றும் கஞ்சா போன்ற கடுமையான போதைப்பொருட்கள் வரை மிகச் சாதாரணமாகக் கிடைப்பது கவலைக்குரிய விசயமாக மாறியுள்ளது.
13 வயதில் கஞ்சா பொட்டலம்
உத்தரப் பிரதேச மாநிலத்தின் தலைநகரான லக்னோ இரயில் நிலையத்திற்கு வெளியே வெறும் 13 வயதே நிரம்பிய ஒரு சிறுவன் மிகச் சாதாரணமாக கஞ்சா பொட்டலங்களை கைகளில் வைத்துக் கொண்டு விற்பனை செய்யும் காட்சி வெளிவந்துள்ளது.
கையில் புத்தகப் பையைச் சுமந்து பள்ளிக்குச் செல்ல வேண்டிய ஒரு பிஞ்சுப் பருவம், சீரழிவதை இந்தக் காட்சி அப்பட்டமாகக் காட்டுகிறது. சட்டம்-ஒழுங்கு(?) மற்றும் பாதுகாப்புப் பணியில் (?) இருக்கும் காவல்துறை மற்றும் உள்ளூர் நிர்வாகத்தின் கண் முன்னே இத்தகைய சட்டவிரோத விற்பனைகள் எப்படி சாத்தியமாகிறது என்ற கேள்வி பொதுமக்களிடையே எழுந்துள்ளது.
மறுபுறம், ஆன்மிக மற்றும் துறவற ஆட்சியாகக் கருதப்படும் தற்போதைய உத்தரப் பிரதேச அரசில், ஏழை எளிய பள்ளி மாணவர்களுக்கான அடிப்படைத் தேவைகள் கூட முறையாகச் சென்றடைவதில்லை என்ற குற்றச்சாட்டுகள் தொடர்ந்து எழுந்து வருகின்றன.
மதிய உணவு அவலங்கள்: அரசுப் பள்ளிகளில் மாணவர்களுக்கு வழங்கப்படும் சத்துணவில் போதிய ஊட்டச்சத்துக்கள் இல்லாதது மட்டுமன்றி, வெறும் சோற்றுடன் மஞ்சள் தண்ணீரில் மிளகாய்ப் பொடியைக் கரைத்துக் கொடுக்கும் அவலங்களும், ரொட்டிக்குத் தொட்டுக் கொள்ள வெறும் உப்பை மட்டுமே வழங்கும் அவல நிலைகளும் கடந்த காலங்களில் செய்திகளாக வெளிவந்துள்ளன.
நிர்வாகத்தின் பாராமுகம்: மாணவர்களின் அடிப்படை உணவுத் தேவையைக்கூட தகுந்த தரத்துடன் வழங்க முடியாத நிர்வாகம்,
அதே சிறுவர்கள் கஞ்சா போன்ற போதைப்பொருள் கடத்தலுக்குப் பயன்படுத்தப்படுவதையும், பள்ளி மாணவர்களுக்கே போதைப்பொருள் பொட்டலங்கள் தங்கு தடையின்றி விற்பனை செய்யப்படுவதையும் கண்டுகொள்ளாமல் இருப்பது பெரும் முரண்பாடாகப் பார்க்கப்படுகிறது.
ஒரு சிறுவன் போதைப்பொருள் விற்பனை செய்கிறான் என்றால், அது அந்தச் சிறுவனின் குற்றமல்ல; மாறாக, அவனுக்கு முறையான கல்வியையும் பாதுகாப்பான வாழ்வாதாரத்தையும் வழங்கத் தவறிய சமூகத்தினதும், அரசினதும் தோல்வியாகும்.
இளைய தலைமுறையினரை போதையின் பிடியிலிருந்து மீட்கவும், பள்ளி மாணவர்களின் கல்வி மற்றும் உணவுத் தரத்தை மேம்படுத்தவும் அரசு கடுமையான மற்றும் உடனடி நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் ஆனால் சாமியார்கள் ஆளும் மாநிலத்தில் ‘ஜெய் சிறீராம்’ கூச்சல் போடவும் மசூதிகளின் முன்பு ஆட்டம் போடவும் மதக்கலவரம் செய்யவும் தயார்செய்ய இது போன்ற வழிகளைத் தான் அவர்களின் திட்டங்களாக உள்ளன. எப்போது மாறும் இந்நிலை?
