ஓட்டுக்கண்ணோட்டத்தைவிட, நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டமே முக்கியம்! பரந்தூர் விமான நிலைய ரத்தை மறுபரிசீலனை செய்யவேண்டும்!

இணையவழி கையெழுத்து இயக்கம்

 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விமான நிலையங்கள் மிக முக்கியமானவை என்பது பொருளாதாரம் தெரிந்தவர்களின் கருத்து
 பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, பரந்தூர் விமான நிலையம் உறுதி செய்யப்பட்டு– பணிகளும் தொடங்கும் ஒரு காலகட்டத்தில் திட்டத்தை ரத்து செய்வதா?
தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வற்புறுத்தல்!

பல்வேறு வகையில், அறிவியல் ரீதியாக பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு, பரந்தூரில் அமையவிருந்த விமான நிலையத் திட்டத்தைத் தமிழ்நாடு அரசு கைவிடுவது சரியானதல்ல. தமிழ்நாட்டின் வளர்ச்சிக்குப் பெரிய அளவில் உதவும் பரந்தூர் விமான நிலைய உருவாக்கத்தைக் கைவிடும் முடிவை தமிழ்நாடு அரசு மறுபரிசீலனை செய்யவேண்டும்; ஓட்டுக்கண்ணோட்டத்தைவிட, நாட்டு வளர்ச்சிக் கண்ணோட்டமே முக்கியம்  என்று  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள அறிக்கை வருமாறு:

Contents
 தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு விமான நிலையங்கள் மிக முக்கியமானவை என்பது பொருளாதாரம் தெரிந்தவர்களின் கருத்து  பல கட்ட ஆய்வுகளுக்குப் பிறகு, பரந்தூர் விமான நிலையம் உறுதி செய்யப்பட்டு– பணிகளும் தொடங்கும் ஒரு காலகட்டத்தில் திட்டத்தை ரத்து செய்வதா? தமிழ்நாடு அரசுக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் வற்புறுத்தல்!குடியிருப்புப் பகுதிகள்  பாதிக்கப்படும் என்பதால் தான், மாற்றுத் திட்டங்கள் யோசிக்கப்பட்டன!விவசாய நிலங்கள் எல்லாம் ‘பிளாட்’ போடப்பட்டு விற்பனைக்கு வந்துவிடவில்லையா?முன்னோக்குத் திட்டமிடுவதைத் தடுத்தால், முறையான வளர்ச்சி இருக்காது!நம்முடன் போட்டிபோட்டு வருகின்றன!அரசின் ஒத்துழைப்பும், வரவேற்பும் இன்மையால் கைவிட்டுப் போகும் நிறுவனங்கள்!5000 ஏக்கர் நிலத்தைப் புதிதாக இனி அடையாளம் காண முடியுமா?மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும்!

பரந்தூர் விமான நிலையத் திட்டம் கைவிடப்படு வதாகத் தமிழ்நாட்டின் தற்போதைய அரசு அறிவித்தி ருப்பது தவறான முடிவாகும். தயாரிப்பு நிறுவனங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் பெருகிவருவது – தமிழ்நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு அடிப்படை யானதாகும். அதற்குப் பன்னாட்டுத் தொடர்புகளும், வான்வழிப் பயண வசதிகளும் இன்றியமையாதவை. உலகம் முழுவதும் உடனடி சரக்குப் போக்குவரத்துக்கும், மக்கள் போக்குவரத்துக்கும் வான்வழியே விரைவான தாகவும், இன்றைய உலகின் தேவைகளுக்கு ஈடு கொடுப்பதாகவும் அமைகிறது.

குடியிருப்புப் பகுதிகள்  பாதிக்கப்படும் என்பதால் தான், மாற்றுத் திட்டங்கள் யோசிக்கப்பட்டன!

இவற்றையெல்லாம் கருத்தில் கொண்டுதான் முன்னோக்கோடு தி.மு.க. தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருக்கும்போது 2007 ஆம் ஆண்டு முதலே, சென்னையில் இரண்டாவது ஓடுதளம் அமைக்க வேண்டும் என்ற முயற்சி மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அப்போதும் இதே போல் சிலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இன்றுள்ள அளவு நெருக்கடியான நிலையில்லை என்றாலும், குடியிருப்புப் பகுதிகள்  பாதிக்கப்படும் என்பதால் தான், மாற்றுத் திட்டங்கள் யோசிக்கப்பட்டன.

மீனம்பாக்கத்தில் தற்போதுள்ள சென்னை விமான நிலையத்தில்  பின்னாட்களில் விரிவாக்கம் செய்யப்பட்டு, புதிய முனையங்கள் உருவாக்கப்பட்டாலும் கூட, புதிய ஓடுதளம் அமைக்க இயலாத நிலையில்தான், வேறோர் இடத்தில் இரண்டாவது விமானநிலையத்தை அமைக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டது.

புதிய விமானநிலையத்திற்குத் தேவையானது அளவு சுமார் 5000 ஏக்கர்; சென்னை நகரத்துக்குள் அப்படியொரு இடத்தைத் தேர்வு செய்ய முடியாது என்பதால் சுற்றுவட்டார மாவட்டங்களில் தேடும் பணி நடைபெற்றது. பின்னர் இரண்டு முறை ஆட்சி செய்த அ.தி.மு.க. ஆட்சியால், கிடப்பில் போடப்பட்ட பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுள் இந்த விமான நிலையத் திட்டமும் ஒன்று. 10 ஆண்டுகாலம் தமிழ்நாட்டின் வளர்ச்சி, குறிப்பாகச் சென்னையின் வளர்ச்சி (மெட்ரோ ரயில் விரிவாக்கம், பாலங்கள், மதுரவாயல் – துறைமுகம் பறக்கும் சாலை, புதிய கட்டமைப்புகள் உள்பட) பல்வேறு வகையிலும் முடக்கப்பட்டது.

விவசாய நிலங்கள் எல்லாம் ‘பிளாட்’ போடப்பட்டு விற்பனைக்கு வந்துவிடவில்லையா?

இந்தக் காலகட்டத்தில் சென்னையில் மக்கள் தொகையும், வீடுகளும் பெருகிவிட்டன. இவற்றை யெல்லாம் முன் கணித்து, திருமழிசையில் துணை நகரம் அமைக்கும் திட்டத்தை 2006-2011 ஆட்சிக் காலத்தில் கலைஞர் அறிவித்தார். அப்போதும், நன்செய், புன்செய் விவசாய நிலங்கள் பாதிக்கப்படும் என்று பல கட்சியினரும் எதிர்ப்பு தெரிவித்தனர். அதனால், அந்தத் திட்டம் கைவிடப்பட வேண்டியதானதே தவிர, அந்த விவசாய நிலங்கள் காப்பாற்றப்பட்டனவா? அப்படியே இன்றும் இருக்கின்றனவா? விவசாய நிலங்கள் எல்லாம் ‘பிளாட்’ போடப்பட்டு விற்பனைக்கு வந்துவிடவில்லையா?

முன்னோக்குத் திட்டமிடுவதைத் தடுத்தால், முறையான வளர்ச்சி இருக்காது!

சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகள் முழுவதை யும் எடுத்துக் கொள்ளுங்கள். திட்டமிட்டு, சரியான சாலை, உள்கட்டமைப்பு வசதிகளுடன் உருவாகியிருக்க வேண்டிய சென்னையின் விரிவாக்கப் பகுதிகள், இன்றும் குறுகலான, கோணலான சாலைகள், போதிய உள்கட்டமைப்பு இன்மை, நீர் தேங்குமிடங்களாக மாறிப் போயிருக்கின்றன. இதனால் நட்டம் யாருக்கு? பெருகிவரும் மக்கள் தொகைக்கேற்ப அரசு முன்னோக்குத் திட்டமிடுவதைத் தடுத்தால், முறையான வளர்ச்சி இருக்காது; ஆங்காங்கு வீக்கமே இருக்கும். அதுதான் இப்போது சென்னையின் நிலைமை. வளர்ச்சியை முறைப்படுத்தாமல், தேவைகளைத் தீர்க்காமல், முன்னோக்குப் பார்வையுடன் அடிப்படை வசதிகளை உருவாக்காமல் போனால், உருவாக்குவதைத் தடுத்தால் இதுதான் நடக்கும்.

வளர்ச்சிக்கென சில கசப்பு மருந்துகள் தேவை. நிரந்தர முன்னேற்றம், வளர்ச்சியை, தற்காலிக ‘வாக்கு வங்கி லாபம்’ காரணமாகத் தொலைத்துவிட அனுமதிக்கக் கூடாது! எனவே, சரியான முடிவுகள் (சுற்றுச்சூழல் பாதுகாப்புக்காக மாற்று வழிகளை யோசித்து செய்வது) அவசியம்!

நவீன சிங்கப்பூரை உருவாக்கிய சிற்பியான பெரு மதிப்பிற்குரிய லீ குவான் யூ, இந்தியாவின் உண்மையான வளர்ச்சிக்கான சவால்களாக இரு பெரும் காரணங்களைக் குறிப்பிட்டார். ஒன்று – ஜாதி! (அதுகுறித்துப் பல முறை நாம் உரைகளில் எடுத்துக்காட்டியிருக்கிறோம்) மற்றொன்று முறையான போதுமான உள்கட்டமைப்பு வசதிகள் இன்மை; அதற்கு முதன்மையிடம் கொடுத்து உருவாக்காமை! இப்போது அவற்றுடன், உள்கட்டமைப்பு வசதிகள் உருவாக்க விடாமல் தடுப்பதையும் சேர்க்க வேண்டும்.

நம்முடன் போட்டிபோட்டு வருகின்றன!

தமிழ்நாட்டைச் சுற்றியுள்ள கருநாடகா, ஆந்திரா போன்ற மாநிலங்கள் உள்கட்டமைப்புத் திட்டங்களைப் பெருக்குவதிலும், புதிய நகரங்களை உருவாக்குவதிலும் வேகம் காட்டிவருகின்றன. நம் கண் முன்பே பெங்களூரு புதிய விமான நிலையம் உருவாக்கியதையும், அய்தராபாத் புதிய விமான நிலையத்தை உருவாக்கி விரிவாக்கி வருவதையும் பார்க்கிறோம். தொழில் துறையிலும், தகவல்தொழில்நுட்பத் துறையிலும் இரு மாநிலங்களும் நம்முடன் போட்டிபோட்டு வருகின்றன.

அரசின் ஒத்துழைப்பும், வரவேற்பும் இன்மையால் கைவிட்டுப் போகும் நிறுவனங்கள்!

பெரும் தொழில் நிறுவனங்கள் ஒரு நாட்டில் அல்லது மாநிலத்தில் முதலீடு செய்ய வருகிறார்கள் என்றால், அவர்களுக்குத் தேவை நிலையான, அமைதியான, கலவரங்களற்ற சூழலும், போதுமான போக்குவரத்து, உள்கட்டமைப்பு வசதிகளும் தான். அண்மைக் காலத்தில் தமிழ்நாட்டுக்கு வரவேண்டிய தொழிற்சாலைகள் பிற மாநிலங்களை நோக்கிச் சென்றுவிட்டன. இவற்றில் ஒன்றிய அரசு மடைமாற்றும் நிறுவனங்கள் ஒருபுறம் என்றால், முறையான வசதிகளும், அனுமதிகளும், அரசின் ஒத்துழைப்பும், வரவேற்பும் இன்மையால் கைவிட்டுப் போகும் நிறுவனங்கள் மறுபுறம்.

சென்னையின் வளர்ச்சியையும், மீனம்பாக்கம் விமான நிலையத்தின் இடப்போதாமையையும் கருத்தில் கொண்டு சென்னைக்கு அருகில் இரண்டாவது விமான நிலையம் அமைப்பதற்காகப் பரந்தூர், பன்னூர், படாளம் மற்றும் திருப்போரூர் ஆகிய 4 இடங்கள் இந்திய விமான நிலையங்கள் ஆணையத்தால் (AAI) முதற்கட்டமாகப் பரிசீலிக்கப்பட்டு, அவற்றில் பல்வேறு வகையிலும் ஏற்றதாக இருப்பதால் பரந்தூர் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதற்குத் தேவையான 4,970 ஏக்கர் நிலப்பரப்பில் பெருமளவிலான நிலங்கள் கையகப்படுத்தப்பட்டு, கடந்த தி.மு.க. ஆட்சிக் காலத்திலேயே அம் மக்களுக்கு உரிய தொகை வழங்கப்பட்டுவிட்டது. பரந்தூர் – ஏகானபுரம் பகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன. இந்நிலை யில் விவசாயத்தைக் காரணம் காட்டி, இத் திட்டத்தைச் சிலர் எதிர்க்கிறார்கள் என்று அரசியல் நோக்கத்திற்காகக் கடந்த ஆட்சியில் பேசிவந்தனர்.

ஆட்சி மாற்றம் ஏற்பட்ட சூழலில், இப்போது அதே காரணத்திற்காக புதிதாக அமைந்துள்ள த.வெ.க. அரசும் அத் திட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளது. மக்களுக்குப் பாதிப்பில்லாமல் ஓர் இடத்தைத் தேர்வு செய்து அங்கு விமான நிலையம் அமைக்கப்படும் என்று அறிவித்துள்ளனர்.

5000 ஏக்கர் நிலத்தைப் புதிதாக
இனி அடையாளம் காண முடியுமா?

ஒரு விமான நிலையத்தை நினைத்த மாத்திரத்தில் உருவாக்கிவிட முடியுமா? கட்டத் தொடங்கினால், அதன் கட்டுமானத்திற்கே எட்டு முதல் பத்து ஆண்டு கள் தேவைப்படும். அதற்கு உரிய இடத்தைத் தேர்வு செய்ய எவ்வளவு காலம் ஆகும்? சென்னையைச் சுற்றி, மக்களோ, விவசாயமோ, நீர்நிலைகளோ பாதிப்படையாமல் 5000 ஏக்கர் நிலத்தைப் புதிதாக  இனி அடையாளம் காண முடியுமா? மக்கள் வசிக்காத, நீர்நிலைகள் இல்லாத வறண்ட நிலங்கள் சென்னையைச் சுற்றி இருக்கின்றனவா? அப்படி கண்டு பிடிக்கப்பட்டால், அந்த இடத்துக்கு இந்திய விமான நிலைய ஆணையத்தின் விதிகளின்படி ஒப்புதல் கிடைக்க வேண்டும். அப்போது அந்த இடத்தில் உள்ள மக்கள் எதிர்ப்பு தெரிவித்தால், அதற்குப் பதில் என்ன? இப்பகுதிகளில் புதிதாக சில சட்டச் சிக்கல், வழக்குகளும் ஏற்படக் கூடுமே!

நீர்பிடிப்புப் பகுதிகள் பாதிக்கப்படாமல், சூழலியல் பாதிக்கப்படாமல் இருக்க மாற்று ஏற்பாடுகளைத் திட்டமிட வேண்டுமே தவிர, அதற்கான அறிவியல் அடிப்படையிலான அணுகுமுறைகளை மேற்கொள்ள வேண்டுமே தவிர, விமான நிலையம் போன்ற உள்கட்ட மைப்புத் திட்டங்களைத் தடுப்பது எப்படி சரியாக இருக்க முடியும்?

சென்னையின் வளர்ச்சி, தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கு அடிப்படையானது. தமிழ்நாட்டு இளைஞர்களின் வேலைவாய்ப்புக்கும், தொழில் வளர்ச்சிக்கும் இன்றியமையாதது. இவ் விமான நிலையத் திட்டம் கைவிடப்பட்டதன் மூலம் மேலும் பல தொழில் நிறுவனங்களின் வரவு தடைப்படும். அதற்குள் அண்டை மாநிலங்கள் தங்கள் உள்கட்டமைப்பைப் பெருமளவு உருவாக்கியிருப்பார்கள். இவற்றையெல்லாம் முறை யாகக் கையாளாமல், திட்டமிடாமல் 1.5 டிரில்லியன் டாலர் பொருளாதாரம் என்றெல்லாம் பேசிக் கொண்டி ருப்பதால் பயன் என்ன?

மறுபரிசீலனை
செய்யப்பட வேண்டும்!

தமிழ்நாடு அரசின் இந்த முடிவு மறுபரிசீலனை செய்யப்பட வேண்டும். காலம் கழிந்துவிடவில்லை. பொருளாதார, உள்கட்டமைப்பு, சூழலியல் வல்லுநர்களைக் கொண்டு குழு அமைத்துப் பரிசீலித்து, பரந்தூர் விமானநிலையத் திட்டம் மீண்டும் ஏற்கப்பட வேண்டும்.

 

கி.வீரமணி

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை   

28.8.2026       

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *