சென்னை, ஆக. 28– காவிரி நதிநீர்ப் பங்கீட்டு சிக்கலில் இருமாநில முதலமைச் சர்களின் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் ஏற்படப் போவதில்லை என்று தமிழ்நாடு துறைசார் வல்லுநர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
பாசனப்பகுதியை விரிவுபடுத்த திட்டம்
தமிழ்நாடுதுறைசார்வல்லுநர் கூட்ட மைப்பு சார்பில் பொதுப்பணித்துறையில் ஓய்வுபெற்ற மூத்த பொறியாளர் அ.வீரப்பன், நீரியல் வல்லுநர் எஸ்.ஜனகராஜன், பொதுப்பள்ளிகளுக்கான மாநில மேடை பொதுச்செயலாளர் பிரின்ஸ் கஜேந்திர பாபு, பூவுலகின் நண்பர்கள் அமைப்பைச் சேர்ந்த வழக்குரைஞர் வெற்றிச்செல்வன், மின்துறை பொறியாளர்கள் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் சா. காந்தி ஆகியோர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
தமிழ்நாட்டின் தலையாய சிக்கல் களான மேகதாது அணை கட்டுதல், ராசிமணலில் புதிய அணை மற்றும் மேட்டூர் நீர்த்தேக்கத்தை உயர்த்துவது குறித்துபேசினர். பெங்களூரு குடிநீருக்காக மேகதாது அணை கட்டு வதாக கருநாடக கூறுவதில் உண்மை இல்லை என்றும், பாசனப் பகுதியை விரிவுபடுத்தவே அவர்கள் திட்டமிட்டுள் ளனர் என்றும் கள ஆய்வு மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது என்றனர்.
தமிழ்நாட்டிற்கு பாதகம்
காவிரியின் குறுக்கே புதிய அணை கட்ட வேண்டுமெனில், தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கேரளம் ஆகிய மாநிலங்களின் ஒப்புதல் அவசியம் தேவை என்று உச்சநீதிமன்றம் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே, காவிரி நதி நீர்ப் பங்கீட்டு சிக்கலில் இரு மாநில முதலமைச்சர்களின் பேச்சுவார்த்தையால் எந்தப் பயனும் ஏற்படாது. அது தமிழ்நாட்டிற்கு பாதகமாகவே அமையும் என்று அவர்கள் எச்சரித்தனர். 1990-ஆம் ஆண்டில் 50-க்கும் மேற்பட்ட பேச்சுவார்த்தைகள் நடத்தியும் பலன் கிடைக்காததை அவர்கள் சுட்டிக்காட்டினர்.
ராசிமணல் மற்றும் ஒகேனக்கலில் புதிய அணை கட்டுவது உடனடி சாத்தியமில்லை என்றும், கோதாவரி-காவிரி இணைப்பு திட்டம் ஒரு கனவுத்திட்டம் மட்டுமே என்றும் தெரிவித்தனர். மேலும், தமிழ்நாடு அரசு புதிய நடுவர் மன்றம் அமைக்க நிறைவேற்றிய தீர்மானத்தை திரும்பப்பெறவேண்டுமென்றும், காவிரிப்படுகையில் உள்ள 200-க்கும் மேற்பட்ட ஏரிகள் மற்றும் கண்மாய்களில் நீரேற்றம் மூலம் வறட்சியான பகுதிகளை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
