மதுரை உயர்நீதிமன்றம் உத்தரவு
மதுரை, மார்ச் 8 அரசு மருத்துவர்களுக்கு தமிழ் தகுதி தேர்வு கட்டாயம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவுக்கு தடை விதித்து மதுரை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்ச் உத்தரவிட்டது.
கன்னியாகுமரியைச் சேர்ந்தவர் மருத்துவர் ஜிஷா. மலையாளி. இவர் தமிழ்நாட்டைச் சேர்ந்த ஜானி என்பவரை திருமணம் செய்து கொண்டார். கரோனா காலத்தில் ஆசாரிபள்ளம் அரசு மருத்துவமனையில் ஒப்பந்த மருத்துவராக பணியாற்றினார். இந்த நிலையில் உதவி மருத்துவர் காலிப்பணியிடங்களை நிரப்புவ தற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசு வெளியிட்டது. அந்தப் பணிக்கு ஜிஷா விண்ணப்பித்தார். இந்தநிலையில் மருத்துவர் பணிக்கு தேர்வாகும்போது தமிழ் தகுதி தேர்விலும் வெற்றி பெற வேண்டும் என்ற நிபந்தனையும் விதிக்கப்பட்டு இருந்தது. இந்த நிபந்தனையை ரத்து செய்யக்கோரி மருத்துவர் ஜிஷா, மதுரை உயர்நீதி மன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். கட்டாயம் இல்லை இந்த வழக்கை விசாரித்த தனி நீதிபதி, அரசுப் பணியில் சேர்ந்த பின்பு 2 ஆண்டுக்குள் தமிழ்மொழியில் போதுமான திறன் பெற்று இருக்க வேண்டும் என்ற நிபந்தனையே போதுமானது.
எனவே தமிழ் தகுதித்தேர்வில் வெற்றி பெறுவது கட்டாயம் என்ற அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது என்று தனி நீதிபதி உத்தரவிட்டார்.
தனி நீதிபதியின் இந்த உத்தரவுக்கு எதிராக, தமிழ்நாடு அரசு சார்பில் மதுரை உயர்நீதிமன்ற டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு இந்த மனு நீதிபதிகள் கிருஷ்ணகுமார், ஆதிகேசவலு ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது அரசு வழக்குரைஞர் ஆஜராகி, அரசுப் பணிக்கு தேர்ந்தெடுக்கப்படுபவர்கள், தமிழ் தகுதித்தேர்வில் வெற்றிபெற வேண்டும் என்பது அரசின் கொள்கை முடிவு. இது தொடர்பாக சட்டப் பேரவையில் விவாதித்த பிறகே மசோதா நிறைவேற்றப்பட்டு உள்ளது. இதை தனி நீதிபதி கவனத்தில் கொள்ளாமல் மேற்கண்ட உத்தரவை பிறப்பித்து உள்ளார். எனவே அவரது உத்தரவை ரத்து செய்து, இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று வாதாடினார். இதை பதிவு செய்து கொண்ட நீதிபதிகள், இந்த விவகாரத்தில் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடைவிதித்து உத்தரவிட்டனர். மேலும் உதவி மருத்துவர்கள் காலிப்பணியிடங்களை அரசு நிரப்புவது தொடர்பான நடவடிக்கைகள், இந்த மேல்முறையீட்டு வழக்கின் தீர்ப்பை பொறுத்து அமையும் என்றும் அறிவுறுத்தி, விசாரணையை ஒத்திவைத்தனர்.