அறுவடை நெருங்கியும் குறுவை தொகுப்பு நிதி வராததால் டெல்டா விவசாயிகள் கவலை!

2 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

தஞ்சாவூர், ஆக. 22- குறுவை தொகுப்பு நிதிக்கான அரசாணை வெளியிடப்பட்டு 2 மாதங்களாகியும் இன்னும் வழங்கப்படாததால் டெல்டா விவசாயிகள் கவலையடைந்துள்ளனர்.

தமிழ்நாட்டில் ஒவ்வொரு ஆண்டும் நெல் சாகுபடியை ஊக்குவிக்கும் வகையில், குறுவை, சம்பா சிறப்பு தொகுப்பு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் உர மானியம், இடுபொருட்கள், ரொக்கம் ஆகியவை வழங்கப்படுவது வழக்கம்.

இந்நிலையில் இந்தாண்டு தமிழ்நாடு அரசு குறுவைத் தொகுப்புத் திட்டத்தை அறிவித்தது. இதற்காக ரூ.134.83 கோடி நிதியை ஒதுக்கீடு செய்தது. குறுவைத் தொகுப்புத் திட்டத்தின் கீழ் பயன்பெற வேண்டுமானால், விவசாயிகள் வரிசை நடவு செய்திருக்க வேண்டும், ஒரு குடும்பத்தில் ஒருவருக்கு மட்டும், அதிகபட்சமாக 2 ஏக்கர் வரை ஏக்கருக்கு ரூ.4 ஆயிரம் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி விவசாயிகளும் இயந்திரம் மூலம் நடவு செய்ததற்கான ரசீது, கிராம நிர்வாக அலுவலரிடம் அடங்கல், கணினி சிட்டா உள்ளிட்ட பல்வேறு ஆவணங்களுடன் அந்தந்த வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் அலுவலகத்தில் விண்ணப்பித்தனர். இந்தத் திட்டத்துக்கு நிதியை ஒதுக்கீடு செய்து கடந்த 12.6.2026 அன்று தமிழ்நாடு அரசு அரசாணையும் வெளியிட்டது.

இதற்கிடையே, குறுவை சாகுபடி செய்த விவசாயிகள் அடுத்த மாதம் முதல் அறுவடையைத் தொடங்க உள்ளனர். ஆனால் குறுவை தொகுப்பு நிதியை இன்னும் வழங்காததால் விவசாயிகள் அதிருப்தியடைந்துள்ளனர்.

இதுகுறித்து காவிரி உரிமை விவசாயிகள் செயற்பாட்டாளர் வெ.ஜீவக்குமார் கூறும்போது, “குறுவைத் தொகுப்புத் திட்டம் ஜூன் மாதம் அறிவிக்கப்பட்டு,அரசாணையும் வெளியிடப்பட்டது.

குறுவைத் தொகுப்புத் திட்டத்துக்கான நிதியை விவசாயிகளுக்கு வழங்கி விட்டதாக சட்டப்பேரவையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் தெரிவித்தார். ஆனால், இதுவரை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் இந்த திட்டத்துக்கான நிதி வரவு வைக்கப்படவில்லை. குறுவை சாகுபடியும் முடிந்து இன்னும் ஒரு மாதத்தில் அறுவடை தொடங்கி விடும். ஆனால் நிதி மட்டும் இதுவரை வரவில்லை. எனவே நிதியை உடனே விடுவிக்க வேண்டும்” என்றார்.

இதுகுறித்து வேளாண்மை துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “குறுவை தொகுப்பு திட்டத்தில் விவசாயிகளிடமிருந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. விரைவில் அதற்கான நிதி வங்கி மூலம் வரவு வைக்கப்படும்” என்றனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *