கருநாடகாவில் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம்! வனத்துறையினர் மீது கொலை வழக்கு!

3 Min Read

சிறப்பு புத்தக சலுகைகள்

பெங்களூரு, ஆக. 17- கர்நாடக வனப்பகுதியில் சுட்டுக் கொல்லப்பட்ட தமிழர்கள் 3 பேரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.15 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த சம்பவத்தில் தொடர்புடைய வனத்துறையினர் மீதும் கொலை வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருநாடக மாநிலம் சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள ஹனூர் அருகில் காவிரி வனவிலங்கு சரணாலயத்துக்குட்பட்ட ஷாக்யா வனப்பகுதி உள்ளது. நேற்று முன்தினம் (15.8.2026) அதிகாலையில் மானை வேட்டையாடியதாக வனத்துறையினர் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோணி சாமி (50), ஜான்ரோஸ் பீட்டர் (42), லாசர் குமார் (33) ஆகிய மூவரும் உயிரிழந்தனர். காயமடைந்த‌ மகிமைதாஸ் (48) மைசூரு மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளார். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

குடும்பத்தினருடன் பேச்சுவார்த்தை: உயிரிழந்தவர்களின் உடல் வைக்கப்பட்டிருந்த மைசூரு கே.ஆர்.மருத்துவமனை வாசலிலும், அவர்களின் உறவினர்கள் போராட் டத்தில் ஈடுபட்டனர். உடற்கூராய்வு செய்ய மறுத்தும், உடல்களை வாங்க மறுத்தும் வழக்குரைஞர்களுடன் முழக்கம் எழுப்பினர்.

அப்போது ஹனூர் மஜத சட்டமன்ற உறுப்பினர் மஞ்சுநாதா, மைசூரு மண்டல அய்ஜி போரலிங்கையா ஆகியோர் உயிரிழந்தோரின் குடும்பத்தினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். கருநாடக வனத்துறை அமைச்சர் ராமலிங்கம் கைப்பேசி வாயிலாக அவர்களிடம் பேசினார். அப்போது, பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்கு உரிய நீதி வாங்கி தருவதாகவும், வனத்துறையினர் மீது நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார்.

இதையடுத்து, அய்ஜி போர லிங்கையா செய்தியாளர்களிடம் கூறுகையில், ‘‘உயிரிழந்த அந்தோணிசாமியின் மனைவி லூர்துமேரி அளித்த புகாரின்பேரில் வனத்துறையில் பணியாற்றும் ஷிவராஜ், சேகரையா, அனில் குமார் உள்ளிட்ட 7 பேர் மீது கொலைவழக்குப் பதிவு செய்யப் பட்டுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் விசாரணை நடத்தி, முதல் கட்ட அறிக்கை தாக்கல் செய்யப்படும். தவறு செய்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.

ஹனூர் மஜத சட்டமன்ற உறுப்பினர் மஞ்சுநாதா கூறுகையில், ”நான் பாதிக்கப்பட்ட மக்களுடன் நிற்கிறேன். அரசிடம் பேசி உயிரிழந்த வர்களின் குடும்பத்தினருக்கு தலா ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்க ஒப்புதல் பெற்றுள்ளேன். என் சார்பாக ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் தலா ரூ.10 லட்சம் வழங்குகிறேன்.

அந்தோனிசாமி, லாசர் குமார், ஜான்ரோஸ் பீட்டர் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலையும், அவர்களது குழந்தைகளின் கல்விச் செலவையும் அரசே ஏற்க கோரியுள்ளேன். அரசு தரப்பில் இந்த கோரிக்கைகளை ஏற்பதாக கூறியுள்ளார்கள். அதேபோல சம்பந்தப்பட்ட வனத்துறையினர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கவும் ஒப்புக் கொண்டிருக் கிறார்கள்” என்றார்.

போராட்டம் திரும்பப் பெறுதல்: ஹனூர் மஜத சட்டமன்ற உறுப்பினர் மஞ்சுநாதா, அய்ஜி போரலிங்கையா, விவசாய சங்கத்தினர், கிறிஸ்துவ அருட்தந்தையர்கள் நடத்திய பேச்சுவார்த்தையை போராட்டக் காரர்கள் ஏற்பதாக தெரிவித்தனர். இதையடுத்து உயிரிழந்தோரின் குடும்பத்தினர் பிரேத பரிசோத னைக்கும், உடல்களை பெற்றுக் கொள்ளவும் ஒப்புதல் அளித்தனர். இதையடுத்து ஹனூர், கொள்ளேகால் ஆகிய சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 நாட்களாக நடந்துவந்த போராட்டங்கள் முடிவுக்கு வந்தது குறிப்பிடத்தக்கது.

தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம்: கருநாடக வனத் துறையினரால் 3 தமிழர்கள் சுட்டுக் கொல்லப்பட்டதற்கு தமிழ்நாடு முதலமைச்சர் ஜோசப் விஜய் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து எக்ஸ் தளத்தில் அவர் கூறியுள்ளதாவது:

கருநாடகாவின் சாம்ராஜ் நகர் மாவட்டம், ஹனூர் தாலுகாவில் உள்ள கிராமங்களில் வசித்து வந்த 3 தமிழர்கள் கருநாடக வனத் துறையினரால் சுட்டுக் கொல்லப் பட்டது வேதனை அளிக்கிறது. இதை வன்மையாகக் கண்டிக்கிறேன். சம்பவம் தொடர்பாக கருநாடக வனத்துறை கொடுத்த விளக்கம் ஏற்புடையதல்ல.

இந்தக் கொடூர சம்பவம் தொடர் பாக நேர்மையான விசாரணை நடைபெற வேண்டும். உயர்நிலை விசாரணைக் குழு அமைத்து, தவறு இழைத்தவர்களுக்கு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் கருநாடக அரசு வழங்க வேண்டும். இதுபோன்று இனியொரு சம்பவம் நடக்காமல் இருக்க, கருநாடக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *