காங்கிரஸ் வேட்பாளருக்கு அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையை ரத்து செய்த நீதிமன்றம்
ஜெய்ப்பூர்,நவ.25- காங்கிரஸ் வேட்பாளர் மேவாராம் ஜெயினுக்கு அமலாக்கத்துறை அனுப்பிய அழைப்பாணையை ராஜஸ்தான் உயர்நீதிமன்றம் ரத்து செய்து உத்தரவிட்டது.
ராஜஸ்தானில் சட்டப்பேரவைத் தேர்தல் இன்று நடைபெறுகிறது. தேர்தல் நேரத்தில் வேட்பாளருக்கு அழைப்பாணை அனுப்புவது பொருத்தமற்றது என்று கூறி அமலாக்கத்துறையின் அழைப்பாணையை ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் நவம்பர் 22-ஆம் தேதி ரத்து செய்தது.
மூன்று முறை பார்மெர் தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக பணியாற்றிய மேவாராம் ஜெயின் மீண்டும் அத்தொகுதியில் போட்டியிடுகிறார். இந்நிலை யில் அவரது தொகுதியில் இருந்து 500 கிலோ மீட்டர் தொலைவில் ஜெய்ப்பூருக்கு அவரை அழைத்திருப் பதற்கான காரணத்தை அமலாக்கத்துறை தெளிவாக விளக்கவில்லை என்று நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
இந்த வழக்கில் மேவாராம் ஜெயின் சார்பாக ஆஜரான மூத்த வழக்குரைஞர் விகாஷ் பாலியா, “தேர்தல் நேரத்தில் வேட்பாளருக்கு அமலாக்கத்துறை அழைப்பாணை அனுப்பியுள்ளது. இதனை ஏழு நாட்களுக்கு ஒத்திவைத்தால் இந்த வழக்கில் எந்தச் சிக்கலும் ஏற்படாது. அது தேர்தலையும் எந்தவிதத்திலும் பாதிக்காது.” என்று வாதாடினார்.
அமலாக்கத்துறை அனுப்பியுள்ள அழைப் பாணையில் மேவாராம் ஜெயினை குற்றம் சாட்டப் பட்டவராக அழைத்துள்ளனரா அல்லது சாட்சியாக அழைத்துள்ளனரா என்பதே தெளிவாக இல்லை என்று கூறிய ராஜஸ்தான் உயர் நீதிமன்றம் அழைப்பாணையை ரத்து செய்து உத்தரவிட்டது.
ராஜஸ்தானில் இன்று (25.11.2023) காலை முதல் சட்டப்பேரவைத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கி நடைபெற்று வருகிறது.
ஆந்திராவில் ஜாதி வாரி கணக்கெடுப்பு டிசம்பர் ஒன்பதில் தொடக்கம்
அமராவதி, நவ.25 நாடு முழுவதும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை காங்கிரஸ் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் எழுப்பி வருகின்றன. அதேநேரம் பீகார் அரசு இந்த கணக்கெடுப்பை நடத்தி முடித்து இருக்கிறது. இந்த வரிசையில் ஆந்திராவும் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த முடிவு செய்திருக்கிறது. அங்கு அடுத்த மாதம் (டிசம்பர்) 9-ஆம் தேதி விரிவான ஜாதிவாரி கணக்கெடுப்பு தொடங்கும் என மாநில தகவல் மற்றும் மக்கள் தொடர்பு மந்திரி சீனிவாச வேணுகோபால கிருஷ்ணா தெரிவித்தார்.