சென்னை, ஆக.15- மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் மூலம் வரும் ஆக. 22-ஆம் தேதி (சனிக்கிழமை) தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என சென்னை ஆட்சியர் எஸ்.மாலதி ஹெலன் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் 13.8.2026 அன்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவித்ததாவது:
சென்னை மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மய்யம் சார்பில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் ஆக. 22-ஆம் தேதி (சனிக்கிழமை) அசோக் நகர் அரசினர் மகளிர் மேல்நிலைப் பள்ளியில் காலை 8 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை நடைபெறும்.
இந்த முகாமில் 300-க்கும் மேற்பட்ட முன்னணி தனியார் நிறுவனங்களில் 10,000-க்கும் மேற்பட்ட காலிப்பணியிடங்களுக்கு ஆள்களைத் தேர்வு செய்ய உள்ளனர். அனுமதி இலவசம்.
தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகத்தின் இலவச திறன் மேம்பாட்டு பயிற்சிகளுக்கான பதிவு, மாவட்ட தொழில் மய்யத்தின் தொழில் முனைவோருக்கான ஆலோசனைகள், மாவட்ட முன்னோடி வங்கியின் வாயிலாக வங்கி கடன் வழி காட்டுதல்கள் ஆகியன மேற்கொள்ளப் பட உள்ளது.
முகாமில் தேர்ந்தெடுக்கப் பட்டு தனியார் துறையில் பணியமர்த்தப் படுவோரின் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு எண் ரத்து செய்யப்பட மாட்டாது.
மேலும், இதில் கலந்து கொள்ள விருப்பம் உள்ள இளைஞர்கள் சென்னை, கிண்டியில் உள்ள மாவட்ட வேலை வாய்ப்பு மற்றும் தொழில் நெறி வழிகாட்டும் மய்யத்தை நேரில் அணுகியோ, அல்லது https://www.tnprivatejobs.tn.gov.in/ViewData/jobfair_view/222608100043 என்ற இணைப்பிலோ தங்களது விவரங்களைப் பதிவு செய்து பயன்பெறலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

