சியோல், ஆக. 15- வரலாறு காணாத வெப்பத்தால் தென் கொரிய மக்கள் அவதிப்பட்டு வரும் நிலையில், அந் நாட்டு விவசாயிகளும் புதுவித பிரச்சினையால் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
அங்கு நிலவி வரும் வெப்ப அலை காரணமாக நிலத்தில் பயிரிடப்பட்டுள்ள உருளைக்கிழங்குகள் மண்ணுக்கு அடியிலேயே வெந்து நாசமாவதாக தென்கொரிய விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர்.
தென் கொரியா, ஜப் பான் மற்றும் ஹாங்காங் ஆகிய பகுதிகளில் சமீபத்திய வாரங்களில் வர லாறு காணாத வெப்பம் நிலவியது. கிழக்கு ஆசியா முழுவதும் கடும் பாதிப்பை ஏற்படுத்திய இந்த வெப்ப அலையின் ஒரு பகுதியாகவே, மேற்கண்ட பயிர் சேதம் பதிவாகி உள்ளது. உருளைக்கிழங்கு மட்டுமல்ல ஸ்ட்ராஃபெர்ரி, தர்பூசணி உள்ளிட்டவையும் பாதிக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு விவசாயிகள் தகவல் தெரிவித்துள்ளனர்.
குறிப்பாக சவுத் ஜியோல்லா மாகாணத்தில் உள்ள டாமியாங் மாகா ணத்தில் கடந்த மூன்று மாதங்களாகப் பாதுகாத்து வளர்க்கப்பட்ட ஸ்ட்ராபெர்ரி நாற்றுகள் வெப்ப அலை காரணமாக முழுமையாக கருகி நாசமாகி விட்டதாக விவசாயிகள் வேதனை தெரிவித்து உள்ளனர். தவிர கேரட் மற்றும் முட்டைக்கோஸ் போன்ற பயிர்கள் கருப்பு நிறமாக மாறிப் போனதால், அவற்றை அப்படியே நிலத்திலேயே உழுது அழிக்க வேண்டிய கட்டாயம் அந்நாட்டு விவசாயிகளுக்கு ஏற்பட்டு உள்ளது.
