கேள்வி 1: சுயமரியாதை, மொழி உணர்வு, தேசியம், பொதுவுடைமை ஆகியவற்றில் இறுதிவரை கொள்கை மாறாப் பற்றோடு சிறந்த தமிழ்நாட்டில் தற்போது, கொள்கை என்னவென்றே தெரியாமல் கட்சிகள் மாறும் அவலநிலை பற்றி தங்கள் கருத்து என்ன?
– அன்புமணி சுந்தரராசன், மதிச்சியம், மதுரை
பதில் 1: முந்தைய கொள்கை அரசியல் மறைந்து, பதவி வெறி அரசியல் உணர்வு மேலோங்கி, “ஆசை வெட்கமறியாது, பதவியாசை மானமும் அறியாது” என்பதால்தான் இந்த வெட்கக்கேடான நிலை!
- • • •
கேள்வி 2: பெரியாரைப் பற்றி சமூகவலை தளங்களில் விவாதிக்கும்போது – நம்மை சேர்ந்தவர்களே – விவாதம் செய்வோர் வீட்டுப் பெண்களை தவறாகப் பேசுவது சரியா? இத்தகைய விமர்சனங்கள் தவிர்க்கப்பட வேண்டியவை தானே. தங்கள் கருத்து என்ன?
– ர.மணியம்மை செல்வி, நிலக்கோட்டை.
பதில் 2: நீங்கள் சொல்வது என்ன பேச்சு, எதனைப் பற்றியது என்று தெரியவில்லை; யாராயினும் இப்படிப் பேசினால் அவர்கள் “நம்மைச் சேர்ந்தவர்கள்” என்ற தகுதியை என்றும் இழந்தவர்களேயாவர்!
- • • •
கேள்வி 3: தி.மு.க., அ.தி.மு.க. மீதான வெறுப்பு ஓட்டுக்கள்தான், ஜோசப் விஜய்க்குக் கிடைத்து அவர் முதலமைச்சராகி உள்ளார் என்று கருதலாமா ஆசிரியர் அவர்களே.. ?
– மு.அய்யூப்கான், மேலக்காவேரி,
பதில் 3: அது ஒரு ‘பகுதியாக’ இருக்கக் கூடும். மற்றபடி ஒருவித சினிமா போதையால் இளைய தலைமுறையினரும், பெண்களும் ‘மாற்றம்’ என்ற நிலையை ஏற்றதால் ஏற்பட்ட முடிவுகள் என்றும் கூறலாம்!
- • •
கேள்வி 4: “சமூக நீதி காத்த வீராங்கனை ” என்று முதலமைச்சராக இருந்த ஜெயலலிதாவிற்கு விருது அளித்து சிறப்பித்தீர்களே …. அது குறித்து இப்போது தாங்கள் என்ன கருதுகிறீர்கள்?
– மு.அய்யூப்கான், மேலக்காவேரி, கும்பகோணம்
பதில் 4: 69 சதவிகித இடஒதுக்கீடு தமிழ்நாட்டு சமூகநீதி வரலாற்றில் ஒரு தனிப்பெரும் சாதனை. இதைச் செய்ய வாய்ப்பளித்ததும், நமது யோசனையை அப்படியே 100க்கு 100 ஏற்றுச் செயல்பட்டு – சாதித்தவருக்கு – மற்ற விசயங்களில் மாறுபட்ட நிலைப்பாடுகள் இருந்தபோதிலும், “சமூகநீதி காத்த வீராங்கனை” என்று நமது கழகம் அளித்த விருது அன்றும் – இன்றும் – என்றும் அவருக்குப் பொருந்தவே செய்யும்; அவரைத் தவிர மற்றவர்களால் அவ்வளவு எளிதாக நம் அறிவுரையை ஏற்று இதனைச் சரித்திர சாதனையாக ஆக்கியிருக்கவே முடியாது என்ற நன்றிக்குரிய நமது உறுதியின் மாறாத கருத்து.
- • • •
கேள்வி 5: நிலைமை இப்படியே போனால் தமிழ்நாடு சட்டமன்றத்தில் த.வெ.க. முதலமைச்சர், அமைச்சர்கள், உறுப்பினர்கள் பேசுவதைத் தமிழில் மொழிமாற்றம் செய்யும் நிலை ஆகிவிடுமோ?
– மன்னை சித்து, மன்னார்குடி-1
பதில் 5: கவலைப்படாதீர்கள் சித்து, நாளடைவில் இது சரியாகக் கூடும். ஆனால், இப்போது சட்டமன்றத்தில் – ஒரு சிலரைத் தவிர – தமிங்கிலத்தில் அல்லவா கேள்வி – பதில் – விளக்கவுரை (ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி) வேறுபாடின்றி பயன்படுத்தும் புதிய முறை புகுந்து வருகிறது. அதை எப்போது மாற்றிச் செம்மொழித் தமிழில் சொல்லும் நாள் எந்த நாளோ?
- • • •
கேள்வி 6: இன்றைய தமிழ்நாடு சட்டப்பேரவை நடைபெறுவதற்கும், அன்றைய ‘திராவிட மாடல்’ ஆட்சியில் சட்டப்பேரவை நடைபெறுவதற்கும் உள்ள வேறுபாடு என்ன?
– வழக்குரைஞர் த.வீரன், தென்காசி
பதில் 6: ‘அனுபவம்’ என்ற மலைக்கும், ‘அனுபவமின்மை’ என்ற மடுவுக்குமானது. எடுத்துக் காட்டாக, வேறு பல நடவடிக்கைகளில்! பல மரபுகள் வேகமாக விடை பெற்றுச் செல்லுகின்ற வியப்பு மிச்சம்.
- • • •
கேள்வி 7: சாலைப் பெயர்ப் பலகைகளில் உள்ள ஜாதிப் பெயர்களை நீக்க அரசு உத்தரவு (1998) உள்ளது. ஒரு குறிப்பிட்ட ஜாதிப் பெயருள்ள சாலையின் பெயரை முதல் தகவல் அறிக்கையில் கண்டதும் மாண்பமை நீதிபதி என்.ரமேஷ் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துள்ளதாகக் கூறப்படுகிறது – ஜாதிப் பெயர்ப் பலகைகள் எப்போதுதான் ஒழியும்?

– ந.சின்னசாமி, பூம்புகார் நகர், சென்னை
பதில் 7: மாண்புமிகு நீதிபதி ரமேஷ் அவர்களுக்கு நமது பாராட்டும் வாழ்த்தும்! தீர்ப்பு வெகுவிரைவில் செயல்மலர்களாக ஆவதைத் தொடர்ந்து கண்காணிக்க வேண்டும்! 1929இல் தொடங்கிய இந்த அமைதிச் சமூகப் புரட்சியின் அடையாளம், வரலாற்றில் இன்னமும் அடைய வேண்டிய இலக்கு – இப்படித் தள்ளிப் போகலாமா?
- • • •
கேள்வி 8: காகித நோட்டுகளில் மக்களிடையே சண்டை – சச்சரவுகள் பலவகையில் இருக்கும் நிலையில் ரூ.10, ரூ.20 நோட்டுகளை மட்டும் பிளாஸ்டிக் (பாலிமர்) நோட்டுகளாக மாற்றுவது சரியா? அனைத்து ரூபாய் நோட்டுகளையும் அவ்வாறு மாற்றாதது ஏன்? இவ்வளவு ஆண்டுகள் காலம் தாழ்த்தி இவ்வாறு வருவது ஏற்றுக்கொள்ளக் கூடியதா?
– மு.சந்தானம், சென்னை-82
பதில் 8: நல்ல கேள்வி – ஒன்றிய நிதியமைச்சரை நோக்கி…!
- • • •
கேள்வி 9: உள்நாட்டுப் போர் காரணமாக இந்தியாவிற்கு அகதிகளாக வந்த ஈழத்தமிழர்கள் தாயகம் திரும்ப இலங்கை நாடாளுமன்றம் அனுமதித்துள்ளதைப் பற்றித் தங்களின் கருத்து?
– ஓவியன், அரும்பாக்கம்

பதில் 9: இந்த நல்ல வாய்ப்பை ஈழத்தமிழ் தொப்புள்கொடி உறவுகள் பயன்படுத்தி, உள்ளத்தால் ஒருவராகவே மாறி, தங்களது நியாயமான உரிமைகளை வென்றெடுக்க ஓர் அணியாக நிற்பது அவசரம்.
- • • •
கேள்வி 10: சென்னை பூவிருந்தவல்லி – வடபழனி வழித்தடத்தில் பயணிக்க மெட்ரோ ரயிலுக்குப் பாதுகாப்பு அனுமதி கிடைத்து 5 மாதங்களுக்கு மேல் ஆகிறது. இரு வாரங்களுக்கு முன்புகூட முதலமைச்சர் ஜோசப் விஜய் மெட்ரோ ரயிலில் பயணம் செய்து ஆய்வு செய்துள்ளார். ஆனாலும் இன்னும் ரயில் சேவை தொடங்கப்படவில்லையே? ஒன்றிய அரசு காலம் தாழ்த்தி வருவது ஏன்?
– திவ்யபாரதி, வடபழனி
பதில் 10: பிரதமர் வருகைக்காகக் காத்திருக்கிறது போலும்!
