சென்னை, ஆக.14 ஒன்றிய அரசின் கனிம வளங்கள் திருத்த மசோதாவால் தமிழ்நாட்டிற்கு ரூ.3,200 கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது என்று முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு – கனிமொழி எம்.பி., ஆகியோர் குற்றச்சாட்டியுள்ளனர்.
ஒரு மாநிலம் கொண்டிருக்கும் கனிம வளங்கள் மூலம் எவ்வித வரி வரி வருவாயும் அந்த மாநிலம் ஈட்ட முடியாத வகையில் திருத்தம் மேற்கொள்ளபட்டுள்ள இந்த மசோதாவானது, கடந்த 2024 ஆம் ஆண்டு ஜூலையில் உச்ச நீதிமன்றத்தின் ஒன்பது நீதிபதிகள் அடங்கிய அரசிய லமைப்பு அமர்வு, பட்டியல் II-இன் 50 ஆவது பிரிவின் கீழ், ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ராயல்டியிலிருந்து தனித்து, கனிம வளங்கள் மற்றும் கனிமம் நிறைந்த நிலங்கள் மீது வரி விதிக்கும் அதிகாரம் மாநிலங்களுக்கு உண்டு என்று தெளிவாக உறுதி செய்த தீர்ப்பை மறுக்கிறது.
வருவாய் ஈட்டும் அதிகாரத்தை மாநிலங்களிடமிருந்து பறிக்கும் வகையில் இந்த சட்ட மசோதா கொண்டுவரப்பட்டுள்ளது. இந்தச் சட்டம் நடைமுறைக்கு வந்தால், தமிழ்நாடு சுமார் ரூ.3,200 கோடி வருவாயை இழக்கும் அபாயம் உள்ளது. அந்த வருவாய் மாநிலத்தின் வளர்ச்சித் திட்டங்களுக்கும் மக்கள் நலப் பணிகளுக்கும் பயன்படுத்தப்பட வேண்டியதாகும்.
மாநிலங்களின் இயற்கை வளங்களை மாநிலங்களே நிர்வகித்து, அதிலிருந்து கிடைக்கும் வருவாயை அந்தந்த மாநிலங்களே பயன்படுத்தும் உரிமையைப் பறித்து, அதிகாரத்தை ஒன்றியத்தில் குவிப்பது கூட்டாட்சியின் அடித்தளத்தையே பலவீனப்படுத்தும்.
சீர்திருத்தம் என்ற பெயரில் மாநி லங்களின் நிதி உரிமையைப் பறிப்பதை ஒருபோதும் நாம் ஏற்க முடியாது. தமிழ்நாட்டின் உரிமையையும், வருவாய் ஆதாரத்தையும் பாதிக்கும் இந்த மசோதாவை எதிர்த்து, மாநிலங்களின் நிதி சுயாட்சி மேலும் பறிபோகாமல் நாம் பாதுகாக்க வேண்டும்.
இவ்வாறு முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு தனது அறிக்கையில் கூறியுள்ளார்.
கனிமொழி
கருணாநிதி எம்.பி.
நாடாளுமன்ற தி.மு.க. குழுத் தலைவர் கனிமொழி கருணாநிதி, வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவில்,
கனிம வளங்கள் மீது மாநில அரசுகளுக்கு உள்ள செஸ் வரி உள்ளிட்ட நிதி அதிகாரங்களைப் பறிக்கும் வகையில், மக்களவையில் முறையான விவாதங்கள் ஏதுமின்றி ஒன்றிய பா.ஜ.க. அரசு நிறைவேற்றியுள்ள MMDRசட்டத் திருத்தமசோதா,மாநில உரிமைகள் மீதான நேரடித் தாக்குதலாகும் என்று குறிப்பிட்டுள்ளார்.
2024 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் உறுதி செய்த மாநிலங்களின் கனிம வளங்கள் மீதான வரிவிதிக்கும் அதிகாரத்தையே இத்திருத்தச் சட்டம் நீர்த்துப்போகச் செய்வதோடு, சுற்றுச் சூழலுக்கு பேராபத்தை விளைவித்து, மாநிலங்களின் நிதி சுயாட்சியை பறிக்கும் நோக்கத்தோடு அமைந்துள்ளது என்றும் தெரிவித்துள்ள கனிமொழி கருணாநிதி எம்.பி., ஒன்றிய பா.ஜ.க.அரசு இச்சட்டத் திருத்தத்தை திரும்ப பெற வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
