சென்னை, ஆக.13- சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் சமீரன் விளக்கம் அளித்துள்ளார். ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு அதன் அடிப்படையில் வரி செலுத்துவோருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளதாக கூறிய ஆணையர் சமீரன், ஆட்சேபணை இருப்பின் 15 நாட்களுக்குள் வட்டார துணை ஆணையரிடம் மேல்முறையீடு செய்ய வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ளாட்சி அமைப்புகளான மாநகராட்சி, பேரூராட்சி, நகராட்சி போன்றவற்றில் உள்ள கட்டடங்கள் மற்றும் காலி மனையிடங்கள் போன்றவற்றுக்கு சொத்து வரி விதிக்கப்பட்டு வருகிறது. உள்ளாட்சி அமைப்புகள் கட்டடங்களின் ஆண்டு வாடகை மதிப்பு அடிப்படையில் சொத்து வரிக் கணக்கீட்டு முறை பின்பற்றப்படுகிறது. அதேபோல் கட்டடம் பயன்படுத்தப்படும் தன்மைக்கேற்ப சொத்து வரி விதிக்கப்படுகிறது. சொந்த வீடு, கட்டடம், வணிக நிறுவனம் வைத்துள்ளவர்கள் சொத்து வரி செலுத்த வேண்டும். அந்த வகையில் சென்னை மாநகராட்சியின் முக்கிய வருவாயாக சொத்து வரி இருக்கிறது. இதனை வசூலிக்க சென்னை மாநகராட்சி சார்பாக முகாம் நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.
சென்னை மாநகராட்சியில் சொத்து வரி உயர்த்தப்படுவதாக எந்த அறிவிப்பும் வெளியாகவில்லை. ஆனால் கடந்த ஆண்டை ஒப்பிடும் போது 3 முதல் 4 மடங்கு அதிகரித்தது எப்படி என்று கேள்வி எழுந்துள்ளது. இந்த நிலையில் சென்னை மாநகராட்சி ஆணையம் சமீரன் விளக்கம் கொடுத்துள்ளார். அதன்படி மாநகராட்சி ஆணையர் சமீரன், சென்னை மாநகராட்சியில் சொத்து வரி எதுவும் உயர்த்தப்படவில்லை. ஏற்கனவே குறைவாக மதிப்பீடு செய்யப்பட்டு, அதன் அடிப்படையில் வரி செலுத்துவோருக்கு திருத்தம் செய்யப்பட்டுள்ளது என்கிறார் அவர்.
புதுச்சேரி நகரப் பகுதிகளுக்குள் கனரக வாகனங்கள் இயக்கத் தடை
புதுச்சேரி, ஆக. 13- புதுச்சேரி நகரப் பகுதிகளில் கனரக வாகனங்கள் காலை 7 மணி முதல் 10 மணி வரையிலும், மாலை 4 முதல் 7 மணி வரையிலும் இயக்கத் தடை விதித்து போக்குவரத்துத் துறையின் மூத்த கண்காணிப்பாளர் திவ்யா அறிவித்துள்ளார்.
புதுச்சேரியில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு போக்குவரத்து காவல் துறையினர் மற்றும் கனரக வாகன உரிமையாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கோரிமேடு காவலர் சமுதாய நலக்கூடத்தில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்துக்கு போக்குவரத்து மூத்த கண்காணிப்பாளர் திவ்யா தலைமை தாங்கினார்.
காவல்துறை கண்காணிப்பாளர் பக்தவச்சலம் முன்னிலை வகித்தார். காவல் ஆய்வாளர்கள் மற்றும் டிப்பர், லாரி, மினி லாரி உள்ளிட்ட கனரக வாகன உரிமையாளர்கள், சங்க நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர். கூட்டத்தில் பங்கேற்ற கனரக வாகன உரிமையாளர்கள் தங்களின் பல்வேறு குறைகள் மற்றும் கோரிக்கைகளை முன்வைத்து பேசினர்.
அதனை கேட்ட மூத்த காவல் கண்காணிப்பாளர் திவ்யா பேசும்போது, “புதுச்சேரியில் தற்போது சாலை விபத்துகள் அதிகரித்து உயிரிழப்புகள் ஏற்பட்டு வருகிறது. போக்குவரத்து மிகுதியான நேரங்களில் அதிவேகமாக இயக்கப்படும் கனரக வாகனங்களால் பள்ளி, கல்லூரி செல்லும் மாணவர்கள் விபத்தில் சிக்கி இறப்பது நடக்கிறது.
ஆகவே, பள்ளி, கல்லூரிகள் அமைந்துள்ள இடங்களில் குறிப்பிட்ட வேகத்தில் மட்டுமே வாகனங்களை இயக்க வேண்டும். சாலை பாதுகாப்பு விதிகளை முறையாக கடைப்பிடிக்க வேண்டும். மணல், ஜல்லி உள்ளிட்டவைகளை ஏற்றி செல்லும்போது அவற்றை மூடி எடுத்துச் செல்ல வேண்டும்.
லாரிகளில் ஓட்டுநர்களுடன் கிளீனர்களை பணியமர்த்த வேண்டும். ஓட்டுநர்கள் மது அருந்திவிட்டு வாகனங்களை ஓட்டக்கூடாது என உரிமையாளர்கள் கடுமையாக எச்சரிக்க வேண்டும். மீறினால், அவர்கள் மீது வழக்குப் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்படும்.
போக்குவரத்து காவல் துறையினரின் திடீர் ஆய்வின்போது, அதிவேகமாக இயக்கப்படும் கனரக வாகனங்களின் ஓட்டுநர்கள் மீது வழக்குப் பதிவு மற்றும் அபராதம் விதிக்கப்படும். நகரப்பகுதிகளில் சாலை விபத்துகளை தடுக்கும் பொருட்டு, அன்றாடம் காலை 7 முதல் 10 மணி வரையிலும், மாலை 4 மணி முதல் 7 மணி வரையிலும் டிப்பர், லாரி உள்ளிட்ட கனரக வாகனங்கள் இயக்க தடை விதிக்கப்படுகிறது. அதனை மீறி கனரக வாகனங்கள் இயக்கப்பட்டால், சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்” என்று தெரிவித்தார்.
