சென்னை, ஆக. 12 – சட்டப்பேரவையில் ‘நீட்’ தேர்வை ரத்து செய்யக்கோரும் தீர்மானத்தின் மீது உரையாற்றிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், ‘‘தமிழ்நாட்டில் நீட் தேர்வை நுழையவிடாமல் தடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர்’’ என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
நீட் தேர்வில் இருந்து விலக்கு பெற முந்தைய தி.மு.க. ஆட்சியில் தீவிர சட்டப்போராட்டம் நடத்தப்பட்டதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சட்டப்பேரவையில் நேற்று (11.8.2026) நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரும் தீர்மானத்தின் மீதான விவாதம் நடைபெற்றது.
அப்போது த.வெ.க. அமைச்சரின் குற்றச்சாட்டுக்குப் பதிலளித்து பேசிய எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின், நீட் நுழைவுத் தேர்வை தமிழ்நாட்டில் நுழைய விடாமல் தடுத்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்று பெருமிதம் தெரிவித்தார்.
பொதுப்பணித்துறை அமைச்சர் அப்போது குறுக்கிட்டு நீட் மசோதாவை நாடாளுமன்றத்தில் அறிமுகம் செய்தது குறித்துப் பேசினார்.
உடனே எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் ‘‘நீட் தேர்வை இந்தியா முழுவதும் கொண்டுவந்தாங்க; ஆனாலும் தமிழ் நாட்டிற்குள் அதனை ‘அலோவ்’ செய்யவில்லை. தமிழ் நாட்டிற்கு விதிவிலக்கு வாங்கித்தந்தவர் எங்கள் தலைவர் கலைஞர் அவர்கள்’’ என்று குறிப்பிட்டார்.
தி.மு.க. கொறடா எ.வ.வேலு கண்டனம்!
இதற்கிடையே, நீட் தேர்வு தொடர்பாக சட்டப்பேரவையில் பொய்யான தக வல்களை கூறிய அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவுக்கு தி.மு.க. கொறடா எ.வ.வேலு கண்டனம் தெரிவித்தார். நாடு முழுவதும் நீட் தேர்வைக் கொண்டு வந்தபோது, தமிழ்நாட்டில் நீட் தேர்வை ஏற்றுக்கொள்ள மாட்டோம் என உறுதியாக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்றும் அவர் கூறினார்.
‘நீட்’ தேர்வு ஓர் ஊழல்!
நீட் தேர்வு வந்தபோது, நாட்டிலேயே முதன்முதலாக எதிர்ப்புக் குரல் கொடுத்தது தி.மு.க. தான் என்றும், நீட் தேர்வை முதன்முதலில் எதிர்த்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் என்றும் தெரிவித்தார். நீட் தேர்வு ஓர் ஊழல் (Scam) என்பதை 10 ஆண்டுகளுக்கு முன்பே கூறியது தி.மு.க. தான் என்றும் அவை உறுப்பினர் முத்துராஜா எம்.எல்.ஏ. குறிப்பிட்டார்.
நீட் தேர்வு ஒரு குளறுபடி, ஒரு ஊழல் என தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. நீட் ஒரு தேசிய ஆபத்து என்பதைத் தி.மு.க. தொடர்ந்து கூறி வருகிறது. தி.மு.க. ஆட்சியில் நீட் தேர்வுக்கு எதிராக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டது. நீட் தேர்வுக்கு எதிராக 12 மாநில முதலமைச்சர் களுக்கு கடிதம் எழுதி ஆதரவு கோரினார் அப்போதைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள்.
மருத்துவம் மட்டுமா படிப்பு; நீட் மட்டுமா உலகம் என பேசியவர்தான் விஜய் – மருத்துவம் மட்டும்தான் படிப்பா…? எலக்ட்ரீசியன், பிளம்பர், கார்பெண்டர் வேலைக்குச்செல்லலாம் என கூறியவர்தான் த.வெ.க. அமைச்சர். நீட் தேர்வுக்கு எதிராக டில்லியில் நடந்த மாணவர்கள் போராட்டத்திற்கு த.வெ.க. ஏன் ஆதரவு தெரிவிக்கவில்லை? உயர்கல்வியில் நீட் உட்பட எந்த நுழைவுத்தேர்வும் இருக்கக்கூடாது என்பதே திமுகவின் நிலைப்பாடு எனவும் முத்துராஜா எம்.எல்.ஏ. தெரிவித்தார்.
இதனையடுத்து தி.மு.க., அதிமுக உள்ளிட்ட அனைத்து கட்சிகளின் ஆதரவுடன் நீட் நுழைவுத் தேர்வை ரத்து செய்யக்கோரும் தீர்மானம் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.
சட்டப்பேரவையில் த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததைத் தொடர்ந்து, த.வெ.க. உறுப்பினர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து பேரவைத் தலைவர் நீக்கினார். சட்டப்பேரவையில் த.வெ.க. உறுப்பினர் கண்ணியமாக பேச வேண்டும் என்றும் பேரவைத் தலைவர் கண்டித்தார்.
சட்டப்பேரவையில் நிதிநிலை அறிக்கை மீதான விவாதத்தில் தி.மு.க. முன்னாள் அமைச்சர்கள் குறித்து த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமார் அவதூறாக பேசியதற்கு எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தார்.
திராவிட மாடல் ஆட்சியில் அப்போ தைய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்களை தினமும் தொடர்பு கொண்டு மக்கள் பிரச்சினைகளை தீர்த்துவைக்குமாறு அறிவுறுத்தினார் என்றும், தி.மு.க. ஆட்சியில் ஓய்வு இல்லாமல் அமைச்சர்கள் உழைத்தார்கள் என்றும் உதயநிதி ஸ்டாலின் கூறினார்.
த.வெ.க. எம்.எல்.ஏ. சுகுமாரின் பேச்சுக்கு திமுக கொறடா எ.வ.வேலுவும் கண்டனம் தெரிவித்தார்.
சட்டப்பேரவையில் த.வெ.க.
எம்.எல்.ஏ. சுகுமாரின் பேச்சுக்கு தி.மு.க. உறுப்பினர்கள் கடும் கண்டனம் தெரிவித்ததை தொடர்ந்து, த.வெ.க. உறுப்பினர் பேச்சை அவைக்குறிப்பில் இருந்து நீக்குவதாக பேரவைத் தலைவர் அறிவித்தார். சட்டப்பேரவையில் த.வெ.க. உறுப்பினர் கண்ணியமாக பேச வேண்டும் என்றும் பேரவைத் தலைவர் அறிவுறுத்தினார்.
