‘‘அரிமனம் சென்றேன் செட்டியார் ஊருக்கு. சாப்பாட்டிற்கு, பிராமணன் இருக்கிறானா, என்று கேட்டு, ஏற்பாடு செய்துவிட்டுத்தான் ஒப்புக் கொள்வது. அப்படியில்லையானால், ஆத்துக்காரி கூட வருகிறாள், நாங்களே சமைத்துக் கொள்கிறோம் என்பேன். ஆகாரச் சுத்தி முக்கியம்.
விவரம் தெரியாமல் ஒருத்தன் சொல்றான், பரமாச்சாரியாள், இந்திரா காந்தியோடு பேசுறப்போ, கிணறுக்கு அந்தப் பக்கம் உட்கார வைத்துப் பேசினார். ஏனென்றால், அவ சிகை எடுக்காத சிறீ. அதனால், பாக்கப்படாது என்று.
அந்தத் தர்மம் அவனுக்குத் தெரியவில்லை.
சில தர்மங்களை நாம் கடைப்பிடித்துத்தான் ஆகவேண்டும்.
நான் ஓட்டலில் சாப்பிடமாட்டேன்; வெங்காயம் போட்டுச் சாப்பிடமாட்டேன். கல்யாண ஆத்திலேயும் சாப்பிட மாட்டேன்.
ஏன், இங்கே தங்க வைத்திருப்பவர் கவுண்டர்தான். அவா ஆத்திலேதான் தங்குகிறேன். ஆனால், சாப்பாடு மட்டும், நம்மளவா ஆத்திலே இருந்துதான் வருது.
தூத்துக்குடிக்கு உபன்யாசத்திற்குப் போயிருந்தேன்.
ஒரு நாடார் பையன் வந்தான், ‘‘அடுத்த ஜென்மம் நான் பிராமணனாகப் பொறக்கவேண்டும்’’ என்றான்.
வேண்டாம், வேண்டாம், நீ நாடாராகவே பொற என்றேன்.
ஏன்? அப்படி என்றான்.
பிராமணனாகப் பொறந்தால், கஷ்டம்தான். ஆச்சாரத்தைக் கடைப்பிடிக்க வேண்டும்; நிறைய பிரச்சினை இருக்கிறது என்றேன். ஆகவே, நீ நாடாராகவே இரு.
இல்ல சாமி, நாங்கள் பாவம் பண்றோமே,
நீ பாவம் பண்ணாலும் உனக்கு அருகதை இருக்கிறது. நீ குடிக்கலாம், கொள்ளையடிக்கலாம், கூத்தியாள்கூட இருக்கலாம், சீட்டாடலாம் என்றேன்.
இதெல்லாம் பாவம் இல்லையா?
பாவம்தான்!
பின், இந்தப் பாவத்தை எப்படி போக்குவது?
மாசா மாசம் அமாவாசை வருதுபத்தியா, 100 ரூபாய் வைச்சுக்கோ, ஒரு 9 முழம் வேட்டி வைச்சுக்கோ, என்னை மாதிரி பிராமணன் யாராவது இருப்பான். அவனிடம் கொடுத்து, நமஸ்காரம் பண்ணு! சகல பாவமும் அவனுக்குப் போய்விடும் என்றேன்.’’
முகநூலில் இப்படி ஒரு உபந்நியாசம்!
எவ்வளவு சாமர்த்தியம் பார்த்தேளா!
இதில், ‘‘நான் பிராமணன்’’ என்ற ஜாதி ஆதிக்கம் தொனிக்கவில்லையா?
இவாள் தோஷம் செய்தாலும் குற்றமில்லை. ஆனால், மற்றவாள் பாவம் செய்யலாமாம். அப்படி பாவம் செய்தால், அதிலிருந்து வெளியேறி, புண்ணியம் சம்பாதிக்க பிராமணனுக்கு 9 முழ வேட்டியும், மாதம் நூறு ரூபாயைப் பிராமணனுக்குக் கொடுத்து, ‘நமஸ்காரம்’ வேறு செய்யவேண்டுமாம் – அப்படிச் செய்தால், சகல பாவமும் சடுதியில் பறந்தோடி விடுமாம்!
பிராமணனாக இல்லை என்றால், குடிக்கலாம், கொள்ளை அடிக்கலாம், கூத்தியாள்கூட இருக்கலாமாம்! கூறுவது ஒரு குல்லுகபட்டர்.
எப்படிச் சுற்றி வந்தாலும், கடைசியில் பார்ப்பனர் வயிற்றில் அறுத்துக் கட்டுவதில்தான் காரியம் முடியும்!
இதேபோல்தான், காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ஓர் இடத்தில் சொல்கிறார்,
‘‘இப்பொழுது ஏற்பட்டிருக்கின்றபடி ஒரு பெரிய தப்பபிப்ராயம் என்னவென்றால், சாஸ்திரோத்தமான வர்ணாசிரம தர்மத்தில், பிராமணனுக்குத்தான் சவுகர்யம் ஜாஸ்தி, வருமானம் ஜாஸ்தி, சிரமம் குறைவு என்கிற எண்ணம் இருக்கிறது. இது சுத்தப் பிசகு!
நம் சாஸ்திரம் பண்ணிக் கொடுத்துள்ள ஏற்பாட்டில், பிராமணன் சரீரத்தில் உழைத்த உழைப்பு, ஒரு குடியானவனின் உழைப்புக்கு குறைச்சலானதல்ல. இவனுக்கு எத்தனை விரதானுஷ்டானங்கள், உபவாசம் என்று எத்தனை நாள் வயிற்றைக் காயப் போட்டாக வேண்டும்? எத்தனை ஸ்நானம்? இந்தச் சிரமங்கள் இதர ஜாதியாருக்கு இல்லை. ஒரு குடியானவன் விழித்தெழுந்ததும், வயிறு ரொம்ப ஜில்லென்று பழையது சாப்பிடுகிற மாதிரி செய்ய பிராமணனுக்கு ‘ரைட்’ ஏது? (காஞ்சி சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி ‘தெய்வத்தின் குரல்’ இரண்டாம் பாகம், பக்கம் 1013–1014).
எவ்வளவு சாமர்த்தியமான எழுத்துகள். காலையில் விழித்தவுடன் ஜில்லென்று வயிறு ரொம்ப பழைய சாதத்தைச் சாப்பிடக் கூடாது என்று எந்தப் பார்ப்பானை, யார் கையைப் பிடித்து இழுத்துத் தடுத்தது? சரி, சங்கராச்சாரியார் சொன்னதுபோல், நாள்தோறும் விரதானுஷ்டானங்கள், உபவாசங்களை விடாமல் அனுசரிக்கும் பார்ப்பனர்கள் எத்தனைப் பேர்?
இதில் கூடப் பாருங்கள் – இவாள் பிராமணர்களாம் – மற்றவர்கள் குடியானவர்களாம்! எவ்வளவு மண்டைக் கொழுப்பு!
‘நரியை நனையாமல் குளிப்பாட்டுவது’ என்பார்களே, அதற்குக் கண்கண்ட உதாரணம்தான் சங்கராச்சாரி உள்ளிட்ட பார்ப்பனர்களும், (அதிக) பிரசங்கிகளும்!
– மயிலாடன்
