ஒன்றிய அரசுக்குச் செலுத்தப்படும் வரிகளின் மூலம் ஒன்றிய அரசால் பகிர்ந்தளிக்கப்படும் வரித் தொகுப்பிலிருந்து –
மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதிப் பகிர்வும் –
தமிழ்நாட்டிற்குரிய நிதிப் பகிர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்!
மாநிலங்களுக்கு 50 சதவிகித நிதிப் பகிர்வும் –
தமிழ்நாட்டிற்குரிய நிதிப் பகிர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்!
சென்னை, ஆக. 9– ‘‘ஒன்றிய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளின் மூலம் மாநிலங்களுக்கு ஒன்றிய அரசால் பகிர்ந்து அளிக்கப்படக்கூடிய வரித் தொகுப்பில் இருந்து மாநிலங்களுக்கு 50 சதவிகிதம் நிதிப் பகிர்வு உறுதி செய்யப்படுவதுடன், அதில் தமிழ்நாட்டிற்கு உரிய நிதிப்பகிர்வும் உறுதி செய்யப்பட வேண்டும்” என்று சட்டப் பேரவையில் நிதி அமைச்சர் முன்மொழிந்த அரசினர் தனித் தீர்மானம் மீதான விவாதத்தில் பேசுகையில், தி.மு.க. சட்டப்பேரவை உறுப்பி னர் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாநிலங்க ளுக்கான நிதிப் பகிர்வு தொடர்பாக அரசு கொண்டு வந்த தீர்மானத்தின் மீதான விவாதத்தில் (7.8.2026) முன்னாள் நிதியமைச்சர் தங்கம் தென்னரசு பேசியதாவது:-
இன்று முத்தமிழறிஞர் கலைஞர் நினைவு நாள். மாநில சுயாட்சிக் கொள்கைகளுக்காகவும், மாநில உரிமைகளுக்காகவும் தன்னுடைய வாழ்நாளெல்லாம் போராடிய மகத்தான தலைவர் கலைஞர்.
வரித்தொகையில் 50 சதவீத நிதிப் பகிர்வை உறுதி செய்யவேண்டும்
மாநில அரசின் சார்பில் கொண்டு வரப்பட்டுள்ள தீர்மானத்தை திமுக வர வேற்கிறது. அதே நேரத்தில் அதில் முக்கிய மான திருத்தம் ஒன்றை முன்மொழிவது என்னுடைய கடமை. தீர்மானத்தின் நான்காவது பத்தியில் இந்திய அரசியலமைப்பின் நிதிசார் கூட்டாட்சிக் கொள்கைகளுக்கு இணங்க, ஒன்றிய அரசுக்கு செலுத்தப்படும் வரிகளின் மூலம் மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படும் வரித்தொகையில் 50 சதவீத நிதிப் பகிர்வை உறுதி செய்யவேண்டும் என்ற திருத்தம் இடம்பெற வேண்டும். அதனுடன் தமிழ் நாட்டிற்குரிய உரிய பங்கும் உறுதி செய்யப்பட வேண்டும்.
16 ஆவது நிதிக்குழுவிடம் தமிழ்நாடு அரசு ஏற்கனவே வலியுறுத்திய நிலைப்பாட்டை பிரதிபலிக்கும் வகையில், மாநிலங்களுக்கான 50 சதவீத நிதிப் பகிர்வு தீர்மானத்தில் வெளிப்படையாக இடம்பெற வேண்டும். தற்போதைய தீர்மானம் மிகவும் பொதுவான வடிவில் இருக்கிறது. இந்த விவாதம் தமிழ்நாட்டிற்கு கிடைக்கும் நிதியைப் பற்றிய விவாதம் மட்டுமல்ல, இந்திய கூட்டாட்சியின் எதிர்காலம்குறித்த விவாதமாகவும், மாநில உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டிய அவ சியத்தை வலியுறுத்தும் விவாதமாகவும் இது அமைந்துள்ளது.
மாநிலங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் இடையிலான அதிகார மற்றும் பொறுப்புகளின் சமநிலையே இந்திய கூட்டாட்சியின் அடித்த ளம். ஏனெனில், இந்திய கூட்டாட்சியின் வலிமை மாநிலங்களின் வலிமையில்தான் இருக்கிறது. அறிஞர் அண்ணா கூறி யதுபோல், ஒன்றிய அரசின் வலிமை என்பது தனிப்பட்ட அதிகாரத்தில் அல்ல; மாநிலங்களின் ஒட்டுமொத்த வலிமையின் வெளிப்பாடாகும். மாநில அதிகாரங்களை ஒன்றிய அரசு தொடர்ந்து குவித்துக் கொண்டால் மாநிலங்கள்பலவீனமடையும்; அதனால் ஒன்றிய அரசுக்கு புதிய வலிமை உருவாகாது என்ற அண்ணாவின் கருத்து இன்றும் பொருந்துகிறது.
வருவாய் ஆதாரங்கள் ஒன்றிய அரசிடம் குவிந்துள்ளன!
கடந்த ஆட்சியில் நிதி ஆயோக் கூட்டங்க ளிலும் தமிழ்நாட்டின் நிலைப்பாட்டை முன்னாள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெளிவாக எடுத்துரைத்தார். தற்போதைய சூழலில் மாநிலங்களின் வருவாய் ஆதா ரங்கள் தொடர்ந்து குறைந்து வருகிறது. மாநிலங்களின் சட்டப்பூர்வ அதிகாரங்கள் கட்டுப்படுத்தப்படுகிறது. அதே சமயம், மக்களின் அனைத்து எதிர்பார்ப்புகளும் மாநில அரசுகளையே நோக்கி அதிகரித்து வருகிறது. குறிப்பாக செலவுப் பொறுப்புகள் மாநிலங்களிடம் இருக்கின்றன. ஆனால், வருவாய் ஆதாரங்கள் ஒன்றிய அரசிடம் குவிந்துள்ளன. இந்த முரண்பாட்டை சரி செய்யாமல் தமிழ்நாட்டின் எதிர்கால வளர்ச்சியை உறுதி செய்ய முடியாது.
தமிழ்நாடு இன்று நாட்டின் இரண்டாவது பெரிய பொருளாதார மாநிலமாக திகழ்கிறது, நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 9 சதவீத பங்களிப்பையும், மொத்த ஏற்று மதியில் 11 சதவீத பங்களிப்பையும் வழங்கு கிறது. உற்பத்தித் துறையில் முன்னணி மாநிலமாக தமிழ்நாடு விளங்குவதோடு, தொழிற்சாலைகள், பெண் தொழிலாளர் பங்களிப்பு, மனிதவள மேம்பாடு, கல்வியறிவு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் தமிழ்நாடு முன்னணியில் இருக்கிறது.
தமிழ்நாடு மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது!
இந்த வளர்ச்சியே இந்திய பொருளாதா ரத்தின் முக்கிய தூணாக தமிழ்நாட்டை மாற்றியுள்ளது. தமிழ்நாட்டின் உண்மையான பொருளாதார வளர்ச்சி விகிதம் 11.19 சத வீதமாகவும், தனிநபர் வருமானம் ரூ.3.63 லட்சமாக உயர்ந்திருக்கிறது. மாநிலத்தின் சிறந்த நிதி ஒழுங்கு, வரி வசூல் திறன் உள்ளிட்ட அம்சங்கள் இருந்தபோதிலும், நிதிப்பகிர்வில் தமிழ்நாடு தொடர்ந்து புறக்கணிக்கப்படுகிறது.
ஒன்றிய அரசுக்கு தமிழ்நாடு செலுத்தும் ஒவ்வொரு ரூபாய்க்கும் வெறும் 29 பைசா மட்டுமே திரும்ப கிடைக்கிறது. அதே நேரத்தில் உத்தரபிரதேசத்திற்கு ரூ.2.73, பீகாருக்கு ரூ.7.06 வழங்கப்படுகிறது. மற்ற மாநிலங்களுக்கு நிதி வழங்குவதில் நமக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றாலும், தமிழ்நாடு மட்டும் ஏன் தொடர்ந்து புறக்கணிக்கப்படு கிறது என்பதே எங்களது கேள்வி.
தமிழ்நாடு முன்கூட்டியே எச்சரித்தது!
ஜிஎஸ்டி அமலுக்கு வந்த பிறகு மாநி லங்களின் நிதிசார் சுயாட்சி கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எந்த பொருளுக்கு எவ்வளவு வரி விதிக்க வேண்டும் என்ற அதிகாரத்தை மாநிலங்கள் இழந்துவிட்டது, வருவாய் அதிகாரங்கள் அனைத்தும் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டுள்ளது. ஜிஎஸ்டி கவுன்சிலில் விகிதக் குறைப்புகள் குறித்து ஆலோசிக்கப்பட்டபோது, மாநிலங்களின் வருவாய் பாதிக்கப்படும் என்று தமிழ்நாடு முன்கூட்டியே எச்சரித்தது,தற்போது அதுவே நடைமுறையில் உண்மையாகியுள்ளது.
ஒன்றிய அரசின் பங்களிப்புடன் செயல் படுத்தப்படும் திட்டங்களில் மாநிலங்களின் நிதிச்சுமை தொடர்ந்து அதிகரித்து வரு கிறது. முன்பு 25 சதவீதமாக இருந்த மாநில பங்களிப்பு தற்போது 40 சதவீதமாக உயர்ந்திருக்கிறது. இதனுடன், வரித்தொகை பகிர்விற்கு வெளியே செஸ் மற்றும் சர்சார்ஜ் வசூலின் மூலம் ஒன்றிய அரசு பெருமளவு நிதியை தன்னிடமே வைத்துக்கொள்கிறது, அதற்கான இழப்பீடு குறித்து இதுவரை தெளிவான விளக்கம் அளிக்கப்படவில்லை.
9 ஆவது நிதிக்குழு காலத்தில் தமிழ் நாட்டின் வரிப் பகிர்வு 7.93 சதவீதமாக இருந்த நிலையில், 15 ஆவது நிதிக்குழுவில் அது 4.079 சதவீதமாக குறைந்திருக்கிறது. 16 ஆவது நிதிக்குழுவிலும் தமிழ்நாடு வலுவான வாதங்களை முன்வைத்தபோதிலும், கிடைத்த உயர்வு வெறும் 0.018 சதவீத புள்ளியாகத்தான் இருந்தது.
தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை உறுதி செய்ய வேண்டும்!
கேரளா மற்றும் கருநாடகாவுக்கு அதி களவில் உயர்வு கிடைத்திருப்பதில் எந்த ஆட்சேபனையும் இல்லை என்றாலும், தமிழ்நாட்டின் நிதி ஒழுங்கு, வரி வசூல் திறன், மனிதவள மேம்பாடு, நகரமயமாக்கல், முதியோர் மக்கள் தொகை அதிகரிப்பு, ஓய்வூதியச் சுமை போன்ற தனித்துவமான அம்சங்கள் நிதிக்குழுவால் போதுமான அளவில் கருத்தில் கொள்ளப்படவில்லை. இந்த அனைத்து காரணங்களையும் கருத்தில் கொண்டு, மாநிலங்களுக்கு வழங்கப்படும் வரிப் பகிர்வு 50 சதவீதமாக உயர்த்தப்பட வேண்டும், அதில் தமிழ்நாட்டிற்கு உரிய பங்கை உறுதி செய்ய வேண்டும்.
இவ்வாறு சட்டப்பேரவையில் தங்கம் தென்னரசு குறிப்பிட்டார்.
