டோக்கியோ, ஆக. 9- தெற்கு ஜப்பானின் ஒகினாவா, ககோஷிமா மாகாணங்களை ‘டால்பின்’ புயல் நேற்று (8.8.2026) பலத்த காற்றுடன் தாக்கியது. அப்போது, மணிக்கு 216 கி.மீ. வேகத்தில் வீசிய புயல் காற்றால் ஏற்பட்ட விபத்துகளில் 6 போ் காயமடைந்தனா்.
பல இடங்களில் மரங்களும், மின் கம்பங்களும் சாய்ந்ததால், 50,000-க்கும் மேற்பட்ட கட்டடங்களில் மின் விநியோகம் முற்றிலும் துண்டிக்கப்பட்டது. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக, ஒகினாவாவுக்கான விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டன.
இப்புயல் இன்று (9.8.2026) இரவு அல்லது நாளை (10.8.2026) அதிகாலைக்குள் சீனாவின் கிழக்குக் கரையைக் கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன்காரணமாக, அந்நாட்டு அரசும் தீவிர வானிலை எச்சரிக்கைகளை விடுத்துள்ளது.
இதற்கு மத்தியில், புயலையொட்டி தைவான் நீரிணை வழியாகச் செல்லும் கப்பல்கள் தங்களின் கட்டுப்பாடுகளைப் பின்பற்றுமாறு சீனா அறிவுறுத்தியதற்கு தைவான் அரசு எதிர்ப்பு தெரிவித்துள்ளது.
அமெரிக்கா நடவடிக்கையை மாற்றும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது ஈரான் திட்ட வட்டம்
வாசிங்டன், ஆக. 9- அமெரிக்கா தனது நடவடிக்கைகளை மாற்றிக் கொள்ளும் வரை ஹார்முஸ் நீரிணை திறக்கப்படாது என்று ஈரான் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக ஈரானின் உச்ச தேசிய பாதுகாப்பு கவுன்சில் புதிய நிபந்தனைகளை விதித்துள்ளது.
“ஈரானை இனி ஒருபோதும் அச்சுறுத்தக்கூடாது; போரை நிரந்தரமாக முடிவுக்கு கொண்டு வர வேண்டும். ஈரான் துறைமுகங்கள் மீதான கடற்படை முற்றுகையை நீக்கி, பிராந்தியத்தில் இருந்து அமெரிக்க படைகளை திரும்பப் பெற வேண்டும்” என்றும் வலியுறுத்தியுள்ளது.
மேலும், போரால் ஏற்பட்ட சேதங்களுக்கு முழுமையாக இழப்பீடு வழங்குவதுடன், பொருளாதார தடைகளை நீக்கி, முடக்கப் பட்ட ஈரான் சொத்துகளை நிபந்தனையின்றி விடுவிக்க வேண்டும் என்றும் கோரியுள்ளது. இதுகுறித்து அமெரிக்கா உடனடியாக பதிலளிக்கவில்லை. ஒமன் முன்னிலையில் பேச்சுவார்த்தை தொடர்கிறது.
