வெட்டிக்காடு, ஆக. 4– வெட்டிக் காடு, பெரியார் மெட்ரிகுலேஷன் பள்ளி தமது 19ஆவது விளையாட்டு விழாவினை கடந்த சனிக்கிழமை 01.08.2026 அன்று மாலை 2.45 மணியளவில் தொடங்கி சிறப்பாக கொண்டாடியது.
விழாவிற்கு தஞ்சாவூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலத்துறை அலுவலர் (District Sports and Youth Welfare Officer) டி.செந்தில்குமார் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தார். விழா சரியாக 3 மணி அளவில் தமிழ்த்தாய் வாழ்த்துடன் இனிதே தொடங்கி மாணவர்களின் அணிவகுப்பு மரியாதையை சிறப்பு விருந்தினர் ஏற்றுக் கொண்டதோடு, ஒலிம்பிக் தீபத்தையும் ஏற்றி பலூன் பறக்க விட்டு விழாவினை தொடங்கி வைத்தார்.
பள்ளி முதல்வர் சு.சாந்தி வரவேற்புரை நல்கினார். அதனைத் தொடர்ந்து சிறப்பு விருந்தினர் உட்பட கலந்து கொண்ட மற்ற விருந்தினருக்கும் பொன்னாடை அணிவித்து சிறப்பு செய்யப்பட்டது. பள்ளியின் ஆண்டறிக்கையை உடற்கல்வி ஆசிரியை மா.நித்யா வாசித்தவுடன் விளையாட்டுப் போட்டிகள் தொடங்கப்பட்டது. விளையாட்டுப் போட்டிகள் முடிந்தவுடன் மாணவர்களுடைய மாஸ் டிரில் தொடங்கியது. சிறப்பு விருந்தினர் முன்னிலையில் 1 முதல் 3ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவியர்கள் சூரியகாந்தி மலரை வைத்தும், 4 மற்றும் 5ஆம் வகுப்பு வரை உள்ள மாணவ மாணவிகள் கொடிகளை கையில் சுமந்தும், 6 முதல் 10ம் வகுப்பு மாணவிகள் கையுறை தொப்பி அணிந்து எளிய நடன முறையிலும், 6 முதல் 10ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்கள் BAM BOOM STICK வைத்தும் உடற்பயிற்சி செய்து காட்டி பெற்றோர்களையும் சிறப்பு விருந்தினரையும் உளமகிழ செய்தனர். பிறகு நமது பள்ளியில் சிலம்பம் பயிற்சி பெறும் மாணவர்களில் வட்டார அளவிலும் மாவட்ட அளவிலும் பரிசு பெற்ற மாணவ மாணவிகளில் சிலர் சிலம்பம் சுற்றி பெற்றோர் முன்னிலையில் அனைவரையும் மகிழ்வித்தனர்.

நிகழ்ச்சிகள் முடிந்தவுடன் சிறப்பு விருந்தினர் தனது சிறப்புரையில் முதலில் அனைவரையும் பாராட்டி, முதல்வர் அழைத்த முறையிலேயே இந்தப் பள்ளி விளையாட்டு துறைக்கு முக்கியத்துவம் அளிக் கின்றது என்பதை அறிந்து கொண் டேன். பள்ளியை பார்க்கும்போது பள்ளியானது விளையாடுவதற்கு போதிய விளையாட்டு மைதானம் வசதியாக அமைந்துள்ளது என்று கூறினார். மேலும் விளை யாட்டுப் போட்டியில் வென்ற மாணவர்களுக்கு அரசிடமிருந்து என்னென்ன வசதிகள் மற்றும் வேலைவாய்ப்புகள் பெறுவர் என்றும் படிக்கும் போதே ஊக்கத்தொகையும் எந்தவித செலவு இன்றி மாணவர்கள் கல்வி கற்கலாம் என்றும் படித்த முடித்தவுடன் அவர்கள் தகுதிக்கேற்ப வேலை வாய்ப்பினை பெறலாம் என்றும் கூறினார்.
மேலும் மாணவர்களுக்கு அரசு வழங்கப்படும் உணவானது சத்துக்கள் நிறைந்ததாகவும் விளையாடும் போது எவ்வகையான சத்துக்கள் வேண்டுமோ அவ்வகையான சத்து நிறைந்த உணவுகளை அரசு எந்தவித கட்டணமும் இன்றி வழங்கி வருகிறது 1 ரூபாய் செலவில்லாமல் மாணவர்கள் படித்து முடிக்கலாம் என்று கூறி பெற்றோர்களிடம் விளையாட்டில் ஈடுபாடு உள்ள மாணவர்களை ஊக்குவிக்குமாறு கேட்டுக் கொண்டார்.
இறுதியாக போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது. நமது பள்ளி அறிவியல் ஆசிரியை நன்றியுரை நவில நாட்டு பண்ணுடன் விழா இனிதே நிறைவடைந்தது.
சிறப்பு விருந்தினரோடு நமது சில்லத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் அய்ஸ்வர்யா பாரதியும், வெட்டிக்காடு ஊராட்சி மன்ற தலைவர் ரேவதி மைனரும் நமது பள்ளியின் ஒருங்கிணைப்பாளர் டாக்டர் டி.கிருஷ்ணகுமார் மற்றும் பெற்றோர் திரளாக கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர்.
