தமிழ்நாடு அரசுக்கு, எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்! திட்டவட்டமாக, பிடிவாதமாக மறுக்கும் ஆளுங்கட்சி!!
திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பு!
சென்னை, ஆக.4 காவிரிப் பிரச்சினையில் ஒத்த கருத்தை ஏற்படுத்த தமிழ்நாடு அரசுக்கு, எதிர்க்கட்சிகள் வேண்டுகோள் விடுக்கின்றன! ஆனால், ஆளுங்கட்சி அதனைத் திட்டவட்டமாக, பிடிவாதமாக மறுக்கிறது என்றும், திராவிடர் கழகத்தின் இரு சக்கர வாகனப் பிரச்சாரத்திற்குத் தமிழ்நாடு அரசு அனுமதி மறுப்பை எதிர்த்து, மக்கள் மன்றம், வீதிமன்றம் மட்டுமல்ல, நீதிமன்றத்தின் மூலமாகவும் உரிமையைப் பெறுவோம் என்றும் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.
செய்தியாளர்களுக்குப் பேட்டி!
நேற்று (3.8.2026) சென்னை அண்ணா அறிவாலயத்திற்குச் சென்ற திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், தி.மு.க. தலைவர் தளபதி மு.க.ஸ்டாலின் அவர்களைச் சந்தித்தார். பிறகு செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்தார்.
அப்பேட்டியின் விவரம் வருமாறு:
தாய்க்கழகமான திராவிடர் கழகம் என்றைக்கும் அதனுடைய பணியைச் செய்து கொண்டிருக்கும்!
மரியாதை நிமித்தமான ஒரு சந்திப்பு இது. பொதுவான செய்திகளைப்பற்றிப் பேசினோம். தஞ்சாவூரில் நடைபெற்ற இன்றைய போராட்டம் மிகப்பெரிய அளவிற்குச் சிறப்பான முறையில் நடைபெற்றிருக்கிறது. வரவேற்கப்படவேண்டிய ஒன்றாகும்.
இன்றைக்கும், என்றைக்குமே தாய்க்கழகமான திராவிடர் கழகம், இரட்டைக் குழல் துப்பாக்கிபோல, அதனுடைய பணியைச் செய்து கொண்டிருக்கும்.
முக்கியமான ஒரு காலகட்டத்தில், குறிப்பாகத் தமிழ்நாட்டு விவசாயிகள் எல்லாம், டெல்டா பகுதிகளை வறண்ட பாலைவனமாக ஆகிவிடும் நிலையை கருநாடகம் ஏற்படுத்துகின்றது என்கிற கவலையோடு இருக்கிறார்கள்.
தமிழ்நாடு அரசுக்கு,
எதிர்க்கட்சிகள் வேண்டுகோள்!
இப்படிப்பட்ட சூழ்நிலையில், தமிழ்நாட்டில், ஆளுங்கட்சியைத் தவிர, மற்ற அனைத்து எதிர்க்கட்சி களும், ‘‘அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டத்தைக் கூட்டுங்கள்’’ என்று முதலமைச்சரிடம் திரும்பத் திரும்ப வேண்டுகோள் விடுக்கிறார்கள்.
ஆனால், அவரோ, கருநாடக முதலமைச்சரை நேரில் சந்திக்கத் திட்டமிட்டிருந்தார். ஆனால், கருநாடக முதலமைச்சரை நேரில் சந்திப்பதினால், எந்தவிதமான பலனும் இல்லை. ஏற்கெனவே கசப்பான அனுபவங்கள் பெற்றுள்ளோம். பேச்சு வார்த்தையினால் இந்தப் பிரச்சினை தீராது, தீர்க்க முடியாது.
சரியான ஜனநாயக முறை அல்ல!
நாம் கேட்பது சலுகையல்ல; உரிமைதான் என்பதை வலியுறுத்தவேண்டும். அந்த வகையில், தமிழ்நாடு ஒன்றுபட்டு இருக்கிறது என்பதைக் காட்டவேண்டும். அதற்காகவே, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டி, அதன்மூலமாக அனைத்துக் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டு, அதற்குப் பிறகு முதலமைச்சர், தன்னுடைய கருத்தைச் சொன்னால், சிறப்பாக இருக்கும் என்ற நோக்கில், மேகதாது அணை கட்டுவதைத் தடுக்கவும், காவிரி நதிநீர்ப் பங்கீட்டினை உரிய முறை யில் செய்ய வலியுறுத்தியும் சொல்வதற்கு, அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டுங்கள் என்று எதிர்க்கட்சித் தலைவர்கள் அத்துணை பேரும் சொல்கிறார்கள்.
ஆனால், திட்டவட்டமாக, பிடிவாதமாக, ‘‘தாங்கள் அனைத்துக் கட்சிக் கூட்டத்தைக் கூட்டமாட்டோம்’’ என்று ஆளுங்கட்சி கூறுவது, சரியான ஜனநாயக முறை அல்ல.
ஓரணியில், ஒரே குரலில் ஒலிக்கும்
கருநாடக மாநிலம்!
அதுமட்டுமல்ல, கருநாடகத்தைப் பாருங்கள். நேற்று அங்கு நடந்த கூட்டத்தில், அனைத்து முதலமைச்சர்கள், இந்நாள் அமைச்சர்கள், ஒன்றிய அமைச்சர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்பட, ‘‘தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் கொடுப்பது, அதுவும் நெருக்கடி காலத்தில் தண்ணீர் கொடுப்பதைக்கூட, எதிர்த்து மேல்முறையீடு செய்யவேண்டும்’’ என்று ஒரே குரலில், அவர்களுடைய உணர்வுகளை, உரிமைகளை நிலைநாட்டவேண்டும் என்று நினைக்கிறார்கள்.
கருநாடக அரசு உச்சநீதிமன்றத்தினுடைய தீர்ப்பை நடைமுறைப்படுத்தவேண்டும். அதேபோல, காவிரி நீர் மேலாண்மைத் தீர்ப்பை மதிக்கவேண்டும் என்று நாம் சொல்கிறோம். ஆனால், அதனை மதிக்க அவர்கள் தயாராக இல்லை.
கபினி அணைக்கட்டுப் பகுதியில், நிறைய மழை பொழிகிறது. அதனால், வெள்ளம் ஏற்பட்டு, அணை உடையக்கூடிய ஆபத்து வருகிறது என்றவுடன், கருநாடக முதலமைச்சர் டி.கே.சிவக்குமார் அவர்கள் சொல்கிறார், ‘‘அவர்களுக்காக நாம் தண்ணீர் திறந்துவிடவில்லை; நாம், நம்மைக் காப்பாற்றிக் கொள்வதற்காக, வடிகாலாக தண்ணீரைத் திறந்து விடவேண்டும்’’ என்று.
தமிழ்நாட்டை வடிகாலாக ஆக்கிக் கொண்டி ருக்கிறார்கள்.
எனவே, சட்டத்தை மதித்தோ, மனிதாபிமா னத்தோடோ இப்போது அவர்கள் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் திறந்துவிடவில்லை. மாறாக, அணை உடைந்தால், நமக்கு ஆபத்து என்று, அந்த மாநில முதலமைச்சரே ஒப்புக் கொண்டு வாக்குமூலம் போன்று சொல்லியிருக்கிறார்.
ஜனநாயகம், காட்சியாக இருக்கக் கூடாது, ஆட்சியாக இருக்கவேண்டும்!
ஆனால், இங்கோ, தமிழ்நாட்டிலோ ஜனநாயகம் என்பது முழுக்க முழுக்க காட்சியாக இருக்கிறதே தவிர, ஆட்சியாக இல்லை.
மக்கள் வாக்களித்திருப்பது ஜனநாயக அடிப்படையில்! ஜனநாயகம், காட்சியாக இருக்கக் கூடாது, ஆட்சியாக இருக்கவேண்டும்.
செய்தியாளர்: நீட் தேர்வு பற்றிய விழிப்புணர்வுப் பிரச்சாரத்தை, திராவிடர் கழகம் சார்பில் இரு சக்கர வாகனப் பரப்புரைக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில், பெரியார் திடலில், ஏராளமான காவல்துறையினர் குவிக்கப்பட்டு, கடைசி நேரத்தில், தமிழ்நாடு அரசின் அனுமதி மறுக்கப்பட்டதே, அதுகுறித்து உங்கள் கருத்து என்ன?
தமிழர் தலைவர்: நீட் தேர்வை எதிர்க்கிறோம் என்று எல்லோரும் சொல்கிறார்கள். குறிப்பாக, ஆளுங்கட்சி நிலைப்பாடும் அப்படித்தான் இருக்கிறது என்று சொல்கிறார்கள். ஒரு பக்கத்தில் இப்படி சொல்லிக்கொண்டு, இன்னொரு பக்கத்தில், நீட் தேர்வைப்பற்றிய போராட்டம்கூட அல்ல; விழிப்புணர்வுப் பிரச்சாரம் – அந்தப் பிரச்சாரத்தை நடத்தத் தடை செய்திருக்கிறார்கள்.
அந்த உரிமையை நிலைநாட்டுவதற்காக நீதி மன்றத்திற்குச் செல்வோம் என்று தெளிவாகச் சொல்லி யிருந்தோம். நீதிமன்றத்திலும் வழக்குத் தாக்கலாகி இருக்கிறது. அநேகமாக ஓரிரு நாள்களில் அந்த வழக்கு விசாரணைக்கு வருவதற்கு வாய்ப்பு இருக்கிறது.
எனவேதான், மக்கள் மன்றம், வீதிமன்றம் மட்டு மல்ல, நீதிமன்றத்தின் மூலமாக அந்த உரிமையை நாங்கள் தெளிவாகப் பெறுவோம். தமிழ்நாடு அரசின் நிலைப்பாடு தவறு என்று இங்கே சுட்டிக்காட்டுவதற்கு, எங்களைவிட, நீதிமன்றம் மிகப் பொருத்தமானது.
எனவேதான், நீதி கேட்டு, நீதிமன்றத்தை அணுகி யிருக்கிறோம். விரைவில் முடிவு தெரியும்.
– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் செய்தியாளர்களிடம்
கூறினார்.
