‘நீட்’டை எதிர்ப்பது அரசியல் அல்ல – சமூக நீதிக்கான போராட்டம்!

2 Min Read

நண்பர் ஒருவர் அமெரிக்கா சென்றிருந்தபோது, அங்கு நடந்த ஒரு சம்பவத்தை என்னிடம் பகிர்ந்தார்.

ஒருவர் ஏணியில் ஏறி வேலை செய்துகொண்டி ருந்தபோது, திடீரென கால் தவறி கீழே விழுந்து விட்டாராம்.

நம்ம ஊரில் இப்படியொரு சம்பவம் நடந்தால் என்ன செய்வோம்?

“அய்யோ… அம்மா!” என்று கத்துவோம்.

ஆனால், அந்த மனிதர் விழுந்தவுடன் சொன்ன முதல் வார்த்தை…

“Please. Don‘t call the ambulance. I can’t afford it.’’

அந்த ஒரு வாக்கியம் என்னை ஆழமாக யோசிக்க வைத்தது.

உலகின் பல நாடுகளில், மருத்துவச் செலவுகள் மிக அதிகம். சில நாடுகளில் ஒரு மருத்துவரைப் பார்ப்பதற்கே, நீண்ட நாட்கள் காத்திருக்க வேண்டி யிருக்கிறது.

ஆனால், தமிழ்நாட்டில் நிலைமை வேறு. எந்த நேரத்திலும் அரசு மருத்துவமனையை மக்கள் நம்பிச் செல்ல முடிகிறது. 108 ஆம்புலன்ஸ் சேவை உயிர்களைக் காப்பாற்றுகிறது.

ஏழை, எளிய மக்கள்கூட மருத்துவச் செலவை நினைத்து, சிகிச்சையைத் தவிர்க்க வேண்டிய நிலை ஏற்படாமல் இருக்க, ‘கலைஞர் காப்பீட்டுத் திட்டம்’ போன்ற திட்டங்களையும், வலுவான பொதுச் சுகாதார அமைப்பையும் தமிழ்நாடு உருவாக்கியுள்ளது. அந்த அமைப்பின் ஒரு முக்கியமான தூண் என்ன தெரியுமா?

மருத்துவர்கள். அந்த மருத்துவர்களை உருவாக்கும் வாய்ப்பை, சமமாக வழங்கிய கல்விக் கொள்கையே தமிழ்நாட்டின் மிகப்பெரிய பலம். அந்த சம வாய்ப்பைச் சிதைத்ததுதான் நீட்.

நான் படித்த காலத்தில் நீட் இருந்திருந்தால், இன்று நான் டாக்டர் கோகிலாமணி அல்ல… வெறும் கோகிலாமணிதான்.

உடனே சிலர் கேட்பார்கள்…

“அப்படியென்றால் உங்களுக்குத் திறமை இல்லையா?”

திறமை இல்லாததால் அல்ல… வாய்ப்பு இல்லா ததால்.

இலட்சக்கணக்கில் செலவுசெய்து நீட் பயிற்சி மய்யம் செல்லும் வசதி இல்லாததால்.

இன்று யதார்த்தம் என்ன?

நீட்-இல் வெற்றி பெற்றவர்களில், பெரும்பா லோர் பயிற்சி மய்யங்களில் படித்தவர்கள். கிராமப்புற ஏழை, முதல் தலைமுறை மாணவர்களின் பிரதிநிதித்துவம் குறைந்திருப்பதாக, நீதிபதி ராஜன் கமிட்டி அறிக்கை கூறுகிறது. எல்லோராலும் இலட்சக்கணக்கில் பணம் கொடுத்து பயிற்சி மய்யம் செல்ல முடியாது.

ஒரு விவசாயியின் மகன், ஒரு தினக்கூலி தொழிலாளியின் மகள், ஒரு கிராமப்புற மாணவன், ஒரு அரசுப் பள்ளி மாணவி – இவர்களின் கனவைக் குடும்பத்தின் பொருளாதாரம் தீர்மானிக்கக் கூடாது.

ஒவ்வொரு கிராமத்திலிருந்தும், ஒவ்வொரு ஏழைக் குடும்பத்திலிருந்தும் மருத்துவர்கள் உருவாக வேண்டும். அப்போதுதான் அவர்கள் மீண்டும் தங்கள் மண்ணுக்குத் திரும்பி, தங்கள் மக்களுக்குச் சேவை செய்ய முடியும்.

ஆனால்… அந்த வாய்ப்பைத்தான் நீட்பறித்துக்கொண்டிருக்கிறது.

2010-லேயே, நீட் கொண்டு வர முயற்சி செய்யப்பட்டபோது, அன்றைய முதலமைச்சர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள், அதனை உறுதியாக எதிர்த்தார். அப்போது, மத்தியில் ஆட்சியில் இருந்த காங்கிரஸ் தலைமையிலான கூட்டணியில் இருந்தபோதும், ஒன்றிய அரசுக்கு எதிராகக் குரல்கொடுத்ததோடு மட்டுமல்லாமல், தமிழ்நாடு அரசின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் சட்டப்போராட்டத்தையும் முன்னெடுத்தார். அது தான் திராவிட மாடல் அரசியல். பதவிக்காக அமைதிகாக்கும் அரசியல் அல்ல, மக்களின் உரி மைக்காக, தேவைப்பட்டால் கூட்டணியிலிருந்தே எதிர்க்கும் அரசியல். நீட்டை எதிர்ப்பது அரசியல் அல்ல. இது சமூக நீதிக்கான போராட்டம்!

நன்றி: ‘முரசொலி’, 3.8.2026

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *