தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலராக இருந்த
என்.வி.நடராசன் நினைவுநாள் இன்று (3.8.1975)
பகுத்தறிவுப் பேராசான் தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலராக இருந்த திராவிடர் இயக்க தியாகச் செம்மல் என்.வி. நடராசன் சென்னை செங்குன்றம் அருகில் உள்ள ஞாயிறு என்ற ஊரில் விஜயரங்கம்- தனலட்சுமி இணையரின் 2 ஆவது மகனாக 1912 ஆம் ஆண்டு ஜூன் 12 ஆம் நாளில் பிறந்தவர் என்.வி.நடராசன்.
“குடிஅரசு” ஏட்டின் ஈர்ப்பால் தமிழ் உணர்வும், தன்மான உணர்வும் என்.வி.என். அவர் களைத் தொற்றிக் கொண்டது.
இதன் காரணமாக தமிழர்களே, ‘ஹிந்திக்கு அடிமை யாக மாட்டோம்’ என்று பகிரங்கமாகப் பேசினார். ஹிந்தி எதிர்ப்பு அறப்போரில் கலந்து கொண்டு தான் மட்டுமல்ல, தனது துணைவியார் புவனேஸ்வரி அம்மையாரையும், கைக் குழந்தை என்.வி.என். சோமு அவர்களையும் ஈடுபடச் செய்து சிறைச்சாலைக்கு அனுப்பி வைத்த இலட்சிய வீரர்.
சென்னை மாவட்ட திராவிடர் கழக செயற்குழு உறுப்பினர், பெரியாரின் அலுவலகச் செயலாளர் முதலான பொறுப்புகளில் சிறப்பாக செயல்பட்டதுடன், ஒன்பது ஆண்டுகாலம் தந்தை பெரியார் அவர்களின் தனிச் செயலாளராக கடமையாற்றினார்.
1969 ஆம் ஆண்டில், கலைஞர் கருணாநிதி தலைமை யிலான தி.மு.க. அரசு, பிற்படுத்தப் பட்டோர் நலனுக்காக தனித்துறையையே உருவாக்கி அதன் முதலாவது அமைச்சராக என்.வி.நடராசன் அவர்களை நியமித்தது.
இந்தச் சூழலில் தந்தை பெரியார் அவர்களிடம் வாழ்த்துகளைப் பெற வேலூர் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுக் கொண்டிருந்த தந்தை பெரியாரை அமைச்சர் என்.வி.என். சந்தித்தார். தந்தை பெரியார் அவர்கள் மகிழ்ச்சியுடன் வரவேற்று வாழ்த்துகளைத் தெரிவித்தார்.
அருகில் இருந்த மருத்துவர்களிடம் 9 ஆண்டுகாலம் என்னுடைய தனிச் செயலாளராக அக்கறையுடன் நேர்மையுடன் பணியாற்றிய பெருமை மிக்கவர் இவர் என்று மகிழ்ச்சியுடன் அறிமுகம் செய்து வைத்தார். அருகில் இருந்த அன்றைய திராவிடர் கழகப் பொதுச்செயலாளரும் இன்றைய கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், “The Honourable Minister was my secretary for 9 years, very sincere secretary” என ஆங்கிலத்தில் மொழிப் பெயர்த்துக் கூறினார். தந்தை பெரியார் அவர்கள் அப்போது மேலும், “Honest secretary” என்ற சொற்களையும் இணைத்துச் சொல்லி, என்.வி.என். அவர்களின் நேர்மைத் திறத்தை புகழ்ந்துரைத்தார்கள்.
என்.வி. நடராசன் பற்றி மேலும் தந்தை பெரியார் அவர்கள் இவ்வாறு கூறினார்
‘‘இவர் எனது தனிச் செயலாளராக இருந்ததோடு மட்டுமல்லாமல், உண்மையானவராகவும் இருந்து பணி புரிந்தவர்.’’ என்று கூறினார் என்றால், இந்தச் சுயமரியாதைச் சுடரொளியின் பெருமைக்கு வேறு நற்சான்றும் தேவையோ! இவரைப்பற்றி அண்ணாவும் சொல்கிறார்: ‘‘திராவிடர் கழகத்தின் வளர்ச்சிக்காக, தன்னலமற்று தம்மையே ஒப்படைத்துக் கொண்டு உழைத்தவர் என்.வி.என்! தந்தை பெரியார் அவர்கள், அவர்மீது அன்பைப் பொழிந்ததோடு நிற்கவில்லை. பெரும் நம்பிக்கை வைத்திருந்தார். எந்தளவுக்கு என்றால், தாம் எங்கே சென்றாலும், காரிலோ, வண்டியிலோ என்.வி.என்.னைத் தம்முடன் அழைத்துச் செல்லும் அளவுக்கு’’ என்றார்.
என்.வி.என். அவர்கள் கலைஞர் ஆட்சியில் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அமைச்சராக இருந்தார். அவர் அமைச்சராக இருந்தபோது கீழ்வேளூரில் தந்தை பெரியார் தன்மானப் பேரவையின் சார்பில் நடத்தப்பட்ட பெரியார் பிறந்த நாள் விருந்து விழாவில், தந்தை பெரியார் அவர்களைப் பக்கத்தில் வைத்துக்கொண்டே பேசினார். ‘‘அய்யா ஆணையிட்டால் இந்த அமைச்சர் பதவியைத் தூக்கி எறிந்துவிட்டு சமுதாயத் தொண்டு செய்யத் தயார்’’ என்றார்.
என்.வி.என். அவர்களுக்கு நாராயணி, சோமு, செல்வம், மணிமேகலை, ஆசைத்தம்பி, பாண்டியன், சாக்ரடீஸ் என ஏழு பிள்ளைகள். இவர்களோடு எட்டாவதாக அவர் நடத்திய ‘திராவிடன்’ என்ற வார இதழையும் குழந்தையாகவே நினைத்து பொறுப்புடன் நடத்தினார். 1947 ஆம் ஆண்டு முதல் 1966 ஆம் ஆண்டு வரை இன்னல்களுக்கும் இடையூறுகளுக்கும் இடையில் திராவிடன் இதழை எதிர் நீச்சலடித்து நடத்தி வந்தார். “எதையும் தாங்கும் இதயம் கொள்வோம்; எழில் சார் திராவிடம் பெற்றிட உழைப்போம்” என்ற வைர வரிகளுக்குக் கீழே, ‘திராவிடன்’ இதழின் ‘தலையங்கம்’ தனித் தன்மையுடன் திகழ்ந்தது.
கொண்ட கொள்கையில் இறுதிவரை சிறிதும் தளராமல் இருந்து வாழ்ந்த என்.வி.என் என்ற என்.வி.நடராசன் நினைவு நாளில் (3-8-1975) அவருடைய புகழைப் போற்றி நினைவு கூர்வோம்!
