பெ. சண்முகம்
திராவிடர் கழகத்தின் இருசக்கர வாகனப் பிரசாரப் பயணத்துக்கு அனுமதி மறுக்கப்பட்டதற்கு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செய லாளர் பெ. சண்முகம் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுபற்றி, அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப் பதிவில்,
“திராவிடர் கழகம் மேற்கொள்ளவிருந்த பரப்புரைப் பயணத்திற்குத் தமிழ்நாடு அரசு தடை விதித்திருப்பது வன்மையான கண்டனத்திற்குரியது.
கருத்துரிமை, பேச்சுரிமை என்பது அரசியல் சாசனம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை. அதனை மறுக்கும் வகையில் தமிழ்நாடு அரசு நடந்துகொள்வது சரியல்ல என்பதைச் சுட்டிக்காட்டுகிறோம்.
திராவிடர் கழகம் பிரச்சாரம் செய்வதற்குத் தமிழ்நாடு அரசு உடனடியாக அனுமதி வழங்க வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்துகிறது” எனக் கூறியுள்ளார்.
மு. வீரபாண்டியன்
திராவிடர் கழகம் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவிருந்த நிலையில், அந்த பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்ததற்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் தெரிவித் துள்ளது.
இது தொடர்பாக, இந்தியக் கம்யூனிஸ்டு கட்சியின் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:-
திராவிடர் கழகம் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்தை மேற்கொள்ளவிருந்த நிலையில், அந்த பரப்புரைக்கு தமிழ்நாடு அரசு தடைவிதித்தது வன்மையாக கண்டிக்கத்தக்கது. அரசியல் சட்டம் வழங்கியுள்ள பேச்சுரிமை, கருத்துரிமைக்கு எதிராக தமிழ்நாடு அரசு செயல்படுவது கூடாது. திராவிடர் கழகம் மேற்கொள்ள உள்ள பரப்புரைக்கு உடனடியாக அனுமதி வழங்கிட வேண்டுமென, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாடு மாநில செயற்குழு , தமிழ்நாடு அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறது.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தொல். திருமாவளவன்
‘நீட்’ தேர்வையும், முன்னேறிய சமூகத்தினருக்கான (EWS) இட ஒதுக்கீட்டையும் முழுமையாக இரத்து செய்ய வேண்டுமென 30-07-2026 முதல் 02-08-2026 வரை இந்திய ஒன்றிய அரசை வலியுறுத்தி, திராவிடர் கழகத்தின் இளைஞரணி, மாணவர் அணி, மற்றும் மகளிர் பாசறை ஆகியவற்றின் சார்பில் தமிழ்நாடு முழுவதும் இரு சக்கர வாகன பரப்புரைப் பயணம் மேற்கொள்ள அனுமதி கோரி விண்ணப்பித்திருந்தனர். உரிய முறைப்படி முன்கூட்டியே விண்ணப்பித்திருந்தும் அதற்குக் காவல்துறை அனுமதி மறுத்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இது அரசமைப்புச் சட்டம் வழங்கியுள்ள கருத்துரிமையைப் பறிக்கும் ஜனநாயக விரோத நடவடிக்கை ஆகும்.
‘நீட்’ தேர்வு வேண்டாமென்பதுதான் தவெக அரசின் கொள்கை என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கு வலு சேர்க்கக்கூடிய திராவிடர் கழகத்தின் பரப்புரைக்கு அனுமதி மறுப்பது வியப்பளிக்கிறது.
திராவிடர் கழகத்தின் இந்தப் பரப்புரைக்கு அனுமதி வழங்குமாறு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூறியுள்ளார்.
டி.டி.வி. தினகரன்
நீட் தேர்வையும், பொருளாதாரத்தில் பின் தங்கியவர்களுக்கான இட ஒதுக்கீட்டையும் (EWS) முழுமையாக ரத்து செய்யுமாறு ஒன்றிய அரசை வலியுறுத்தி திராவிடர் கழக இளைஞரணி, மாணவர் கழகம், மகளிர் பாசறை சார்பில் (30.7.2026) நடைபெறவிருந்த இருசக்கர வாகன பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்திருக்கும் தவெக அரசின் செயல்பாடு கடும் கண்டனத்திற்குரியது.
தமிழ்நாடு முழுவதும் எந்தெந்தப் பகுதிகளில் இருசக்கர வாகனப் பிரச்சாரம் நடைபெற உள்ளது என்பது குறித்த முழுமையான பட்டியலை முன்கூட்டியே காவல்துறையிடம் வழங்கப்பட்டு, அந்தந்த காவல்நிலையங்களில் அனுமதியைப் பெற்றுக் கொள்ளுமாறு காவல்துறைத் தலைவர் திராவிடர் கழகத்தினருக்கு அறிவுறுத்திய நிலையில் , பிரச்சாரம் தொடங்கும் அன்று (30.7.2026) காலை அதற்கான அனுமதியை மறுத்திருப்பதோடு, பெரியார் திடலை காவல்துறையின் மூலம் முடக்க முயற்சித்திருப்பது ஜனநாயக நடைமுறைகளுக்கு முற்றிலும் எதிரானது.
தந்தைப் பெரியாரை தன் கொள்கைத் தலைவர்களில் ஒருவராக முன்னிறுத்தி அரசியல் செய்யும் தவெக, பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு அவரின் வழியில் நிர்வகிக்கப்பட்டு வரும் திராவிடர் கழகத்தின் பிரச்சாரத்திற்கு அனுமதி மறுத்திருப்பதன் மூலம், தவெக ஆட்சி என்பது திராவிடக் கொள்கைகளைப் பின்பற்றும் ஆட்சி அல்ல என்பது தெள்ளத் தெளிவாகத் தெரிகிறது.
அறவழிப் போராட்டம் நடத்துவதற்கு அரசியலமைப்புச் சட்டம் வழங்கியிருக்கும் அடிப்படை உரிமைகளை மதித்துச் செயல்பட வேண்டிய தவெக அரசு, தனது அதிகாரங்களைப் பயன்படுத்தி காவல்துறையிடம் அனுமதி கேட்டு அமைதியான முறையில் நடத்தத் திட்டமிடப்பட்டிருந்த திராவிடர் கழகத்தினரின் இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு அனுமதியை மறுத்திருப்பது தவெக அரசின் சகிப்புத்தன்மையின்மையையே வெளிப்படுத்துகிறது.
எனவே, திராவிடர் கழகம் திட்டமிட்ட இருசக்கர வாகனப் பிரச்சாரத்திற்கு உடனடியாக அனுமதி வழக்கிடுவதோடு, இனிவரும் காலங்களில் அரசியல் பாகுபாடின்றி அனைவருக்கும் அமைதியான முறையில் பிரச்சாரம் மற்றும் போராட்டங்களை நடத்திடுவதற்கான அனுமதியை வழங்கி ஜனநாயக உரிமைகளைப் பாதுகாத்திட வேண்டும் என தவெக அரசை வலியுறுத்துகிறேன்.
இவ்வாறு அ.ம.மு.க. தலைவர் டி.டி.வி. தினகரன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
கு.இராமகிருட்டிணன்
நீட் தேர்வை தடை செய்! ‘உயர் ஜாதி இடஒதுக்கீட்டைத் தடை செய்! என்ற முழக்கத்துடன் தமிழ்நாடு முழுவதும் பிரச்சாரப் பயணம் செய்ய திராவிடர் கழகத்தினர் திட்டமிட்டு அதற்கான அனுமதி கடிதம் காவல்துறையினரிடம் விண்ணப்பித்திருந்தனர். இரு சக்கர வாகன பிரச்சாரத்திற்கு தமிழ்நாடு அரசு அனுமதி அளிக்காமல் தடை செய்துள்ளதை தந்தை பெரியார் திராவிட கழகம் வன்மையாக கண்டிக்கிறது. தத்துவ தலைவர்களாக தந்தை பெரியார், புரட்சியாளர் அம்பேத்கர், பெருந்தலைவர் காமராஜர் ஆகியோரை வைத்துள்ள இன்றைய தமிழ்நாடு அரசு சமூக நீதிக்காக நடைபெறவிருந்த பிரச்சாரப் பயணத்தை தடுத்துள்ளது. தந்தை பெரியார் அவர்கள் திராவிடர் கழகத்தை தொடங்கிய காலத்தில் இருந்து பிரச்சாரப் பயணங்கள் நடந்து வருகிறது. முன்பு ஆண்ட எந்த அரசும் பிரச்சார பயணத்திற்கு தடை விதித்ததில்லை சமூக நீதி பிரச்சாரத்தை தடை செய்த எந்த அரசும் தமிழ்நாட்டில் நிலைத்ததில்லை.
இவ்வாறு கோவை கு.இராமகிருட்டிணன் கூறியுள்ளார்.
விடுதலை இராசேந்திரன்
திராவிடர் கழகம் நடத்தும் நீட் எதிர்ப்பு பரப்புரை ஏன் தவெக ஆட்சியை பதற வைக்கிறது? நீட்டை திணிக்காதே என்று ஒன்றிய பாஜக ஆட்சிக்கு எதிராக பரப்புரை செய்வதை தனது ஆட்சிக்கு எதிரான பரப்புரையாக ஏன் இந்த ஆட்சி கருதுகிறது?
ஒன்றிய ஆட்சியுடன் அனுசரித்துப் போவது என்பது அவர்கள் திணிக்கும் கொள்கைகளோடு அனுசரித்தல் தானா?
கருத்துரிமை பறிப்புகள் எல்லை மீறுவது கண்டனத்துக்குரியது. இவ்வாறு விடுதலை இராசேந்திரன் கூறியுள்ளார்.
திருமுருகன் காந்தி
நீட் எதிர்ப்பு தான் முதலமைச்சர் விஜய் அவர்களின் கொள்கையெனில், நீட் எதிர்ப்பு பரப்புரை செய்ய திராவிடர் கழகத்திற்கான அனுமதியை ஏன் மறுத்தது தவெக அரசு?
பெரியார் திடலுக்குள் காவல்துறையை அனுப்ப வேண்டிய தேவை ஏன் ஏற்பட்டது?
யாரை திருப்தி செய்ய முதலமைச்சர் விஜய், தனது கொள்கைத் தலைவரின் திடலுக்கு காவல்துறையை குவிக்கிறார்?
நடப்பது ஆர்.எஸ்.எஸ் ஆட்சியா?..அல்லது, ஆர்.எஸ்.எஸ்ஸுக்கு அடிபணியும் ஆட்சியா?
அய்யா ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வாழ்த்து பெற்ற இரண்டு மாதத்திற்குள் காவல்துறையை திடலுக்குள் குவிக்கிறாரே முதலமைச்சர் கொள்கையை மறந்துவிட்டாரா? அல்லது கொள்கை தலைவரை மாற்றிக்கொண்டாரா?
பெரியார் திடல் என்பது தந்தை பெரியாரின் அரசியல் தலைமையகம். அதற்குள்ளாக காவல்துறையை அனுப்பி அடக்குமுறை ஏவுவதை ‘மே17’ இயக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எமர்ஜென்சி முதலாக அடக்குமுறையை சந்தித்த பெரியார் திடல், இந்த அடக்குமுறைக்கா அஞ்சும்!
ஆர்.எஸ்.எஸ் அலுவலகத்திற்குள் காவல்துறையை ஏவுமா பாஜக? ஆனால் கொள்கை தலைவர் என பிரகடனம் செய்துவிட்டு, அடக்குமுறையை ஏவுவது ஏன் என பதில் சொல்லுமா தவெக அரசு?
இவ்வாறு திருமுருகன் காந்தி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
திராவிடர் தளம் (SFD)
‘நீட்’, ‘நீட் பயிற்சி’ என்பவை உலகளாவிய வணிகம் ஆகும். அதில் இந்தியா வில் நேரடியாகவும் பக்கவிளைவாகவும் பயன்பெறுபவர்கள் பார்ப்பனர்கள். உயர் ஜாதி இடஒதுக்கீடு என்பதும் முற்றிலும் பார்ப்பனர்களுக்கான ஆதிக்க ஆயுதம். இந்த இரண்டையும் ஒரு சேர எதிர்ப்பதும், அந்த எதிர்ப்பை மக்களிடையே பரப்புவதும் பார்ப்பன – இந்திய தேசிய – பன்னாட்டுக் கூட்டுக் கொள்ளைக்கு எதிரானது.
பெரியார் திடல் அரசுகளை எதிர்க்கும் அமைப்பு அல்ல. தமக்கு வேண்டிய அரசுகளை உருவாக்குவதையும், எதிரான அரசுகளை அழிப்பதையும் இயல்பாகக் கொண்ட பார்ப்பன – பனியாக்களை எதிர்க்கும் அமைப்பு.
அவர்களுக்கு அந்த அதிகாரத்தை வழங்கிவரும் இந்து மதத்தை எதிர்க்கும் அமைப்பு.
அந்த அமைப்பின் தலைமையகத்தில் காவல்துறை அத்துமீறலில் முதலமைச்சர் விஜய் ஒரு கருவியாக இருக்கிறார். அவர் மட்டுமே காரணமாக இருக்க முடியாது.
அவரைவிட முக்கியமாக பெரியார் திடல் மீது பிறவிப்பகை கொண்ட ஒரு கூட்டம் பின்னணியில் இருந்து இந்தத் தடைகளை இரசிக்கிறது. அவர்களது கோர ரசனைகளுக்கு விருந்தளிக்கிறார் விஜய்.
‘நீட்’ – உயர் ஜாதி இடஒதுக்கீடு எதிர்ப்புப் பரப்புரைக்குத் தடை விதித்து, பெரியார் திடலுக்குள் காவல்துறையின் அத்துமீறலை நடந்திய தமிழ்நாட்டு விஜய் அரசையும், அதன் பின்னணியில் உள்ள ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க., உள்ளிட்ட கட்சிகளிலுள்ள பார்ப்பனர்களையும் – மற்றும் சில கட்சி சேரா பார்ப்பனர்களையும், பெரு முதலாளிகளையும் வன்மையாக கண்டிக்கிறோம் என்று திராவிடர் தளம் தெரிவித்துள்ளது.
தமுஎசக
நீட் தேர்வுக்கு எதிரான போராட்டம் தமிழ்நாட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெற்று வருகிறது. நீட் தேர்வை நீக்கக்கோரி தமிழ்நாட்டில் உள்ள பெரும்பாலான அரசியல் இயக்கங்கள், கட்சி வேறுபாடு இல்லாமல் நீட் தேர்வை எதிர்ப்பது என்ற முடிவின் அடிப்படையில் கடந்த ஆட்சியின் போது, சட்டமன்றத்தில் ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி உள்ளார்கள்.
தற்போது டெல்லி தொடங்கி நாடுமுழுவதும் நடைபெறும் நீட்டிற்கு எதிரான போராட்டங்களைத் தொடர்ந்து, மீண்டும் தமிழ்நாட்டில் நீட் எதிர்ப்புப் போராட்டங்கள் பரவலாக மேலெழுந்து வருகிறது. பல்வேறு மாணவர் மற்றும் இளைஞர் அமைப்புகளும் தமிழ்நாடு முழுவதும் நீட் எதிர்ப்புப் போரட்டங்களை, மறியல்களை நடத்தி வருகிறார்கள். அந்தப் போராட்டங்களில் தமிழ்நாடு காவல்துறையின் நியாயமற்ற அணுகுமுறை வன்மையாகக் கண்டிக்கத் தக்கதாக்க ஒன்றாகவே இருந்தது.
இந்தச் சூழலில் தமிழ்நாட்டில் திராவிடர் கழகம் சார்பாக இன்று மாநிலம் முழுக்க நீட் தேர்வுக்கு எதிராகவும், உயர் சாதி ஏழைகளுக்கான இடஒதுக்கீட்டை நீக்கக் கோரியும் வாகனப் பரப்புரை மேற்கொள்ள திட்டமிட்டிருந்தார்கள். எல்லா ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, பிரச்சாரம் தொடங்க சில மணிநேரம் முன்பு இந்தப் பிரச்சாரத்திற்கு தடைவிதித்துள்ளது தமிழ்நாடு காவல்துறை.
நீட் எதிர்ப்புப் போராட்டத்தில், டெல்லி காவல்துறையினர் போராடுபவர்களை குறிவைத்து அத்துமீறிக் கைது செய்ததையும், துன்புறுத்துவதையும் செய்து வருகிறார்கள். அவர்களின் இச்செயலுக்கு வலு சேர்க்கும் விதமாக, தமிழ்நாடு ஆட்சியாளர்களும் நடந்துகொள்வதாகவே தோன்றுகிறது.
அரசுக்கு எதிரான கருத்துக்களை சொல்லவும், பரப்புரை செய்யவும், வன்முறை இல்லாமல் போராடவும் இந்திய அரசியல் சட்டம் நமக்கு உரிமைகளை வழங்கியுள்ளது. அந்த அடிப்படை உரிமைகளை மறுக்கும் வகையில் தமிழ்நாடு அரசும், அதன் காவல்துறையும் செயல்பட்டு வருவது கண்டிக்கத்தக்க ஒன்றாகும். ஜனநாயக இயக்கங்களின் போராடும் உரிமையை பறிக்கும் தமிழ்நாடு அரசை தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் வன்மையாக கண்டிக்கிறது. இந்த சட்ட விரோத செயலை, தமிழ்நாட்டில் உள்ள மற்ற ஜனநாயக சக்திகளும் கண்டிக்க வேண்டும் என்றும் தமுஎகச கேட்டுக்கொள்கிறது. தமிழ்நாடு அரசு இந்த நீட் எதிர்ப்பு பிரச்சார இயக்கத்திற்கு அனுமதி வழங்குவதோடு, இது போன்ற அறவழி இயக்கங்களுக்கு எதிர்காலத்தில் எந்தத் தடையும் விதிக்காமல் உரிய பாதுகாப்பு வழங்கிட வேண்டும் என்றும் தமுஎகச வலியுறுத்துகிறது.
இவ்வாறு தமுஎசக தலைவர் மதுக்கூர் இராமலிங்கம், பொதுச்செயலாளர் களப்பிரன் தெரிவித்துள்ளனர்.
ஆளூர் ஷாநவாஸ்
திராவிடர் கழகம் நடத்த இருந்த நீட் எதிர்ப்பு பரப்புரை பயணத்திற்கு தடைவிதித்து, பெரியார் திடலில் காவல்துறையை குவித்துள்ளது தவெக அரசு. இது கடும் கண்டனத்திற்கு உரியது.
தி.க.வின் நீட் எதிர்ப்பு பரப்புரை பயணம் என்பது ஏதோ இப்போது மட்டும் திட்டமிடப்பட்ட ஒன்றல்ல. கடந்த 10 ஆண்டுகளில் அதிமுக ஆட்சியின் போதும், திமுக ஆட்சியின் போதும் பலமுறை இப் பரப்புரை நடைபெற்றுள்ளது. ஆசிரியர் கி.வீரமணி அவர்களே தமிழ்நாடு முழுவதும் பயணித்து பரப்புரை செய்துள்ளார். அப்படி நாகப்பட்டினத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் நானும் பங்கேற்றுள்ளேன்.
கடந்த காலங்களில் ஆட்சியில் இருந்த அதிமுகவுக்கும் திமுகவுக்கும் நீட் எதிர்ப்பு எப்படி கொள்கை முடிவோ, அப்படித் தான் இப்போது ஆட்சியில் உள்ள தவெகவுக்கும் நீட் எதிர்ப்பு என்பது கொள்கை முடிவு என்று சொன்னார்கள். அந்தக் கொள்கையை வலியுறுத்தித் தான் தி.க பரப்புரை செய்கிறது. அந்தப் பரப்புரையை அன்றுஎடப்பாடி பழனிசாமியும் அவர்களும் மு.க.ஸ்டாலின் அவர்களும் அனுமதித்து இருக்கும் போது, இன்று தவெக விஜய் மட்டும் தடுப்பது ஏன்?
நீட் விலக்கும், நீட்எதிர்ப்பும் தமிழ்நாட்டின் கொள்கை. அது தவெகவின் கொள்கையா இல்லையா? இவ்வாறு ஆளூர் ஷாநவாஸ் கூறியுள்ளார்.
