2025-ஆம் ஆண்டு நீட் தேர்வின் அடிப்படையில் தமிழ்நாட்டில் 430 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களுக்கு நடைபெற்ற கலந்தாய்வில், தமிழ்நாடு அரசுக்கான 50% இடஒதுக்கீட்டின் அடிப்படையில் 215 இடங்கள், பணியில் உள்ள அரசு மருத்துவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டிருக்க வேண்டும். மேற்கண்ட இடங்களில் 63 இடங்கள் மட்டுமே கலந்தாய்வு மூலம் நிரப்பப்பட்டு, இரண்டாவது கட்டக் கலந்தாய்வு முடிவடைந்த நிலையில் 152 இடங்கள் காலியாக இருந்தன.
கடந்த மே 27-ஆம் தேதி தமிழ்நாடு அரசின் ‘தேர்வுக் குழு’ இரண்டாம் கட்டக் கலந்தாய்வை நிறைவு செய்த சூழலில், அரசு சாரா மருத்துவரான தமிழ்வாணி என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஒரு வழக்கைத் தாக்கல் செய்து, நிரப்பப்படாமல் இருக்கும் 152 சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவ இடங்களை அகில இந்தியத் தொகுப்புக்கு மாற்ற வேண்டும் எனக் கோரிக்கை வைத்தார். அந்த வழக்கு விசாரணை கடந்த ஏப்ரல் மாதத்தில் நடைபெற்றபோது, அப்போதைய திமுக அரசு, வாதங்களை எடுத்து வைத்து, அந்த இடங்கள் அகில இந்தியத் தொகுப்புக்குச் செல்வதைத் தடுத்து வைத்திருந்தது.
இந்தச் சூழலில் த.வெ.க. அரசு பொறுப்பேற்ற பிறகு நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, தமிழ்நாட்டின் உரிமையை வலியுறுத்தும் வாதங்களை முழுமையாக முன்வைக்கத் தவறியது மட்டுமல்லாமல், 152 இடங்களை ஒப்படைக்கிறோம் என தமிழ்நாடு அரசு தரப்பு வழக்குரைஞர் ஒப்புகொண்டதன் விளைவாக, அந்த இடங்களை ஒப்படைக்க உச்சநீதிமன்றம் (29.05.2026) உத்தரவு பிறப்பித்துவிட்டது. அது மட்டுமின்றி, ஒன்றிய அரசுத் தரப்பு வழக்குரைஞர் கட்-ஆப் சதவிகிதத்தைக் குறைப்பதைப் பற்றி முடிவு பின்னர் எடுக்கப்படும் என்று கூறியிருந்தார். அதனைச் சுட்டிக்காட்டி, எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் அப்போதே எச்சரித்திருந்தார்.
அந்தத் தீர்ப்பை எதிர்த்து, அரசியல் அழுத்தங்களின் காரணமாக தமிழ்நாடு அரசால் மறு சீராய்வு மனு தாக்கல் செய்யப்பட்டாலும், அந்த மறு சீராய்வு மனு நேற்று வரை விசாரணைக்கே வரவில்லை என்று தெரிகிறது. அதே நேரத்தில் அத்தீர்ப்பை எதிர்த்து, அரசு மருத்துவர்கள் சார்பில் வழக்கு தொடரப்பட்டது.
அந்த வழக்கு நேற்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்த நிலையில், அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், “தமிழ்நாட்டில் நிரப்பப்படாமல் இருக்கும் 152 அரசு மருத்துவர்களுக்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்களை உடனடியாக ஜூலை 29-ஆம் தேதிதியே (இன்றே) அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு ஒப்படைக்க வேண்டும்” என்று உத்தரவிட்டுள்ளது பெரும் அதிர்ச்சிக்குரியதாகும்.
அதே நேரத்தில், நீட் உயர் மருத்துவப் படிப்பின் (NEET-SS) ‘கட் ஆஃப்’ குறைக்கப்படும் பட்சத்தில், இருக்கும் இடங்களில் 50% மீண்டும் தமிழ்நாட்டிற்கு ஒப்படைக்கப்பட வேண்டும் என்றும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஆனால், கட் ஆப் குறைப்பு பொதுவாக மூன்றாம் சுற்று கலந்தாய்வின் போது அறிவிக்கப்படுவதால், அதற்குள் இந்த 152 இடங்களில் பெரும்பாலானவை அரசு சாரா (Non-Service) மருத்துவர்களால் நிரப்பப்பட்டிருக்கும். எனவே, நீதிமன்றம் 50% இடங்களை மீண்டும் தமிழ்நாட்டிடம் ஒப்படைக்க உத்தரவிட்டிருந்தாலும், நடைமுறையில் அரசு மருத்துவர்களுக்கு அவற்றின் பலன் கிடைக்கும் வாய்ப்பு மிகவும் குறைவாகவே உள்ளது என்று அரசு மருத்துவர்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
அகில இந்திய கலந்தாய்வின் இரண்டாம் சுற்று நடைபெறுவதற்கு முன்பே, தமிழ்நாடு அரசு அவசரமாக மாநிலக் கலந்தாய்வை நடத்தி, 152 இடங்கள் காலியாக உள்ளன என்று அறிவித்தது ஏன்? அதன் பின்னரும், தமிழ் நாட்டிற்கான சூப்பர் ஸ்பெஷாலிட்டி இடங்கள் அகில இந்திய ஒதுக்கீட்டிற்கு மாற்றப்படுவதைத் தடுக்கும் வகையில், கடந்த சட்டமன்றக் கூட்டத்தொடரிலேயே சிறப்பு தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று அரசு மருத்துவர் சங்கத்தினரால் வலியுறுத்தபட்டது. ஆனால் அந்தக் கோரிக்கையையும் தமிழ்நாடு அரசு ஏற்காதது ஏன்?
இரண்டு வாரங்களுக்கு முன்பு நடைபெற்ற விசாரணையின்போது, மாண்புமிகு நீதியரசர் பி.வி. நாகரத்னா அவர்கள் “அரசு வேலையும் பார்த்துக்கொண்டு நீட் நுழைவு தேர்வில் வீட்டில் அமர்ந்து படிப்பவர்களுடன் எப்படி போட்டி போட முடியும்” என்று முக்கியமான வாய்மொழிக் கருத்தைப் பதிவு செய்திருந்தார். இந்த நீதிமன்ற கருத்தை அடிப்படையாகக் கொண்டு வலுவான வாதங்களை நேற்றைய விசாரணையில் தமிழ்நாடு அரசு முன்வைக்கத் தவறியுள்ளது.
முக்கியமான இந்த வழக்கில், நேற்று நீதியரசர்களின் கேள்விகளுக்குப் பதில் சொல்ல நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வழக்குரைஞர்களைத் தேடும் நிலை ஏற்பட்டது என்பதும், தமிழ்நாட்டின் தனிப்பட்ட ஒதுக்கீட்டு இடங்களை அகில இந்திய ஒதுக்கீட்டுக்கு மாற்ற முடியாது என்ற அடிப்படையான வாதத்தைக் கூட அரசு உறுதியாக முன்வைக்கவில்லை என்பதும் இப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு என்ன அக்கறை செலுத்துகிறது என்ற கேள்வியை எழுப்புகிறது.
இது, அரசு மருத்துவர்களின் உரிமையும், மேற்படிப்பு வாய்ப்பும் தொடர்புடையது மட்டுமல்ல. 152 இடங்களை இழப்பது என்பது எதிர்காலத்தில் தமிழ்நாட்டு மக்களுக்கு சேவை செய்ய வேண்டிய 152 உயர்சிறப்பு அரசு மருத்துவர்களை இழப்பதாகும்.தமிழ்நாட்டின் பொதுச் சுகாதாரக் கட்டமைப்பையும் உயர்சிறப்பு மருத்துவச் சேவையையும் பாதுகாப்பதில் அரசு அலட்சியமாக இருக்கக் கூடாது.
இந்த மருத்துவக் கட்டமைப்பை, ஒன்றிய அரசுகளுடன் போராடி, நீதிமன்றங்களில் வாதாடி, கடும் நிதி நெருக்கடிகளுக்கு மத்தியிலும் பல்வேறு திட்டங்களைத் தீட்டி, படிப்படியாக உருவாக்கிக் கொண்டு வந்திருக்கிறோம். இந்த அரசு மருத்துவர்களுக்கான (in Service) இடஒதுக்கீட்டைநிலை நிறுத்தப் பெரும்பாடுபட்டுள்ளோம். முறையான சட்டத்தின் மூலமாக அல்லாமல், நீதிமன்ற நடவடிக்கைகளின் வாயிலாகவே முன்பு அகில இந்திய ஒதுக்கீடு என்று ஒன்று உருவாக்கப்பட்டது. அதில் மருத்துவ இளநிலை, மருத்துவ முதுநிலை, உயர் மருத்துவப் படிப்புகள், சூப்பர் ஸ்பெஷாலிட்டி படிப்புகள் என்று எல்லாவற்றிலும், கூடாரத்துக்குள் புகுந்த ஒட்டகத்தின் கதையாக நம்முடைய இடங்கள் அபகரிக்கப்படுவது கொடுமை என்றால், அதைக் குறித்து அக்கறையில்லாமல், முறையான நடவடிக்கைகள் இல்லாமல் கோட்டை விட்டிருப்பது பெருங்கொடுமையாகும். சமூகநீதி, மாநில உரிமை என்னும் தேர்கள் முன்னோக்கிச் செல்லாவிட்டாலும், பின்னிழுக்கப்படாமல் காக்க வேண்டிய பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது.
