மதுரை, ஜூலை 29- தமிழ்நாட்டில் பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் காலங்களில் ஊதியத்துடன் விடுப்பு வழங்குவதற்கான விதிகளை உருவாக்க சிறப்புக் குழு அமைக்கும் பணி நடைபெற்று வருவதாக உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் அரசுத் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
மதுரை கோமதிபுரத்தைச் சேர்ந்த நர்மதா, உயர் நீதிமன்ற மதுரை அமர்வில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாட்டில் பெண் பணியாளர்கள் மாதவிடாய் காலங்களில் சிரமத்தை சந்திக்கின்றனர். அவர்களுக்கு ஊதியத்துடன் விடுப்பு வழங்கும் கொள்கை தமிழ்நாட்டில் இல்லை.
எனவே,அது குறித்த சாத்தியக் கூறுகளை ஆய்வு செய்யவும் ஊதியத்துடன்கூடிய விடுப்புவழங்குவது குறித்தும் அரசு கொள்கை முடிவு எடுக்க உத்தரவிடக் கோரி இருந்தார்.
இம்மனு நீதிபதிகள் கார்த்திகேயன், சக்திவேல் அமர்வில் நேற்று (28.7.2026) விசாரணைக்கு வந்தது. அரசுத் தரப்பில், பெண் பணியாளர்களுக்கு மாதவிடாய் விடுப்பு வழங்குவது தொடர்பான விதிகளை உருவாக்க சிறப்புக் குழு அமைக்கப்பட்டு வருகிறது.
அது தொடர்பாக அறிக்கை தாக்கல் செய்ய 2 வாரங்கள் அவகாசம் தேவை. இதில் தனியார் ஊழியர்களையும் சேர்க்கும் வகையில் விதிகள் உருவாக்கப்பட்டு வருகின்றன எனத் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் நீதிபதிகள், மாதவிடாய் கால விடுப்பு விதிகளை உருவாக்க அமைக்கப்பட உள்ள குழுவின் உறுப்பினர்கள் விவரங்களை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும். விசாரணை 2 வாரங்களுக்கு தள்ளிவைக்கப்படுகிறது என உத்தரவிட்டனர்.
