பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றம் இணைந்து தமிழர் தலைவர் கி.வீரமணி எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா – கருத்தரங்கம் தமிழ்நாடெங்கும் எழுச்சியுடன் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:
மதுரை
பகுத்தறிவாளர் கழகத்தின் புரவலர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் அறிமுக விழா, பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் சார்பாக, மதுரை பெரியார் மய்யத்தில் உள்ள பெரியார்-வீரமணி அரங்கத்தில் 19.07.2026 அன்று மாலை 6 மணியளவில் நடைபெற்றது.
நிகழ்விற்கு வந்திருந்த அனைவரையும் வரவேற்று பகுத்தறிவாளர் கழகத்தின் மாவட்ட அமைப்பாளர் பா.சடகோபன் உரையாற்றினார். மாவட்டத் தலைவரும் பணி நிறைவு பெற்ற கல்வி அதிகாரியுமான ச.பால்ராஜ் நிகழ்வுக்கு தலைமை ஏற்று உரையாற்றினார். திராவிடர் கழகத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் மதுரை வே.செல்வம் நிகழ்வினை ஒருங்கிணைத்தார்.
‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ நூல் வெளியிடப்பட்டது.நிகழ்வில் கலந்து கொண்ட தோழர்கள் ,பணம் கொடுத்து நூலைப் பெற்றுக்கொண்டனர்.
தொடர்ந்து பகுத்தறிவாளர் கழகத்தின் மாநில அமைப்பாளர் பேரா.டாக்டர் சி.மகேந்திரன், மாவட்டச் செயலாளர் வீர.பழனிவேல்ராஜன், மாவட்ட கழகத் தலைவர் அ.முருகானந்தம் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலச் செயலாளர் பாவலர் சுப.முருகானந்தம் தொடக்க உரையாற்றினார். அவர் தனது உரையில், ‘ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை’ என்னும் நூல் பற்றி தமிழ்நாடு முழுவதும் கூட்டங்கள் நடைபெறுகின்றன.சுயமரியாதை இயக்கம் தோன்றியது ஏன்? என்பது எல்லோருக்கும் தெரியும். தந்தை பெரியார் வெளிப்படையாக காங்கிரசை விட்டு வெளியேறி, தனது கொள்கைகளை அறிவித்து இயக்கத்தை தொடங்கினார். ஆனால் அதே 1925இல் தோன்றிய ஆர்.எஸ்.எஸ். இயக்கத்தின் கொள்கைகள். மறைவாக வைக்கப்பட்டு,இன்றுவரை பதிவுசெய்யப்படாத ரகசிய இயக்கமாக இருக்கிறது. சித்பவன் பார்ப்பனர்களால் பார்ப்பனர்களுக்காக ஆரம்பிக்கப்பட்ட இயக்கம் அது எனக்குறிப்பிட்டு தொடக்கவுரையாற்றினார்.
நோக்கவுரை ஆற்றிய உளவியலாளர் ஜெ.வெண்ணிலா மகேந்திரன், உளவியல் பார்வையில் பார்க்கும்போது ஆர்.எஸ்.எஸ். என்னும் இயக்கம் எப்படி மோசமான இயக்கம் என்பதையும், அவர்கள் சொல்லும் யோகா என்பதெல்லாம் எல்லாருக்கும் ஒரே மாதிரியானது அல்ல என்றும்,சிலருக்கு நிறைய பாதிப்புகளை ஏற்படுத்துவதாக யோகா இருக்கிறது என்பதையும் அவர்கள் எப்படி மூளைச் சலவை செய்கிறார்கள் என்பதையும் குறிப்பிட்டு உரையாற்றினார். தொடர்ந்து பகுத்தறிவு எழுத்தாளர் மன்றத்தின் மாநிலத்தலைவர் முனைவர் வா.நேரு, 18ஆம் தேதி பெரியகுளம் நூல் அறிமுகம் விழாவில் பேரா.சி.மகேந்திரன் மிகச்சிறப்பாக தொடக்க உரையாற்றினார் என்று பாராட்டு தெரிவித்தார்.
எல்லா ஊர்களிலும் ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை என்னும் நூல் அறிமுகம் மிகச்சிறப்பாக நடைபெற்றுக்கொண்டிருக்கிறது என்று செய்திகள் வருகின்றன என்று குறிப்பிட்டு, திராவிடர் கழகம் எப்போதும் மூலத்துடன் போரிடும் இயக்கம் அந்த வகையில் இன்றைக்கு நாட்டில் நடைபெறும் பல்வேறு கொடுமைகளுக்கு மூல காரணமாக இருக்கக்கூடிய ஆர்.எஸ்.எஸ். என்னும் அமைப்பை அம்பலப்படுத்தும் நோக்கில் மிகச்சிறப்பாக ஆசிரியர் அவர்களால் எழுதப்பட்ட நூல் இது என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.
நிறைவாக கழகப் பேச்சாளர் இராம.அன்பழகன் சிறப்புரையாற்றினார். திராவிடர் கழகத்தலைவர் ஆசிரியர் அவர்கள், இந்த நூல் பற்றிய மதிப்புரையை எப்படி அமைத்துக் கொள்ள வேண்டும், எப்படிபேச வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார்கள், நான் அதன்படி பேசுகிறேன் என்று குறிப்பிட்டு, நூலில் இருந்து பல்வேறு நிகழ்வுகளை எடுத்துக்காட்டி உரையாற்றினார். சமஸ்கிருத மந்திரங்கள், திருமண மந்திரங்கள் எவ்வளவு மோசமாக உள்ளன, நமது வீட்டில் வந்து அமர்ந்து கொண்டு நம்மை இழிவாக பேசுகிறார்கள், இந்த நூலை நன்றாகப் படிக்க வேண்டும். மீண்டும் மீண்டும் படிக்க வேண்டும். இதில் உள்ள கருத்துகளை மற்றவர்களுக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என்று குறிப்பிட்டு 45 நிமிடங்கள் உரையாற்றினார். நிறைவாக மாவட்ட கழகச் செயலாளர் இரா.லீ. சுரேசு நன்றி கூறினார்.
நிகழ்வில் மாவட்ட துணைத் தலைவர் பொ.பவுன்ராஜ், பொதுக்குழு உறுப்பினர் ராக்கு, திமுக வட்டச் செயலாளர் கரு.ஆறுமுகம்,பெரியவர் தெய்வசிகாமணி,ஆட்டோ செல்வம், மாவட்ட துணை செயலாளர் க.சிவா, பெத்தானியாபுரம் பாண்டி, நன்னன், அழகுபாண்டி, மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் சீ.தேவராஜ்பாண்டியன், செல்லத்துரை, ரமேஷ், கனி,சொ..நே.அன்புமணி, ஜே.எஸ் மோதிலால், மதிச்சியம் க.சு.அன்புமணி,போட்டோ இராதா உள்ளிட்ட ஏராளமான தோழர்கள் நூல்களைப் பெற்றுக்கொண்டு கருத்துகளைக் கேட்டு மகிழ்ந்தனர்.
காரைக்குடி

காரைக்குடி (கழக) மாவட்ட பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெற்ற தமிழர் தலைவர், ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எழுதிய “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” நூல் அறிமுக விழா 19.07.2026 அன்று மாலை 5.00 மணியளவில் காரைக்குடி, குறள் அரங்கத்தில் பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந.செல்வராசன் தலைமையில் நடைபெற்றது. இவ்விழாவில் கலந்து கொண்ட அனைவரையும் பகுத்தறிவாளர் கழக மாவட்ட துணைச் செயலாளர் செ.கோபால்சாமி வரவேற்றார்.
கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்ட கழகத் தலைவர் ம.கு. வைகறை, மாவட்ட கழகச் செயலாளர் சி. செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். காப்பாளர் சாமி.திராவிடமணி, பகுத்தறிவாளர் கழகம் தொடங்கப்பட்ட வரலாற்றை நினைவு கூர்ந்து நாம் தற்போது ஒரு நெருக்கடியான காலகட்டத்தில் வாழ்ந்து கொண்டிருப்பதை குறிப்பிட்டதோடு, அப்படிப்பட்ட இச்சூழலில் ஆசிரியர் அறிவித்த உடனே பணிகளைத் தொடங்கி, சிறப்பாக நூல் வெளியீட்டு விழாவை நடத்திக் கொண்டிருக்கும் மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தை பாராட்டினார்.
மாவட்ட கழகத் தலைவர் ம.கு. வைகறை தனது உரையில், ஆரியம் எப்பொழுதும் ஒரு மாயத்தோற்றத்தையும் பொய்யான கட்டுக்கதைகளையும் உருவாக்கிக் கொண்டே இருக்கும் என்றும், அதன் அமைப்பான ஆர்.எஸ்.எஸ். ஒரு நச்சு அமைப்பு என்றும் , இதன் பின்னனியில் இருப்பவர்கள் யார் யார் என்பதை உலகுக்கு உணர்த்துவதே இந்நூலின் நோக்கம் என்றதோடு அனைவரும் இதை அறிந்து கொள்வது அவசியம் என்றார்.
தொடக்க உரையாற்றிய பகுத்தறிவாளர் கழக மாநில அமைப்பாளர் ஒ.முத்துக்குமார், “ஆர்.எஸ்.எஸ். என்னும் டிரோஜன் குதிரை” எனும் இந்நூல் ஓர் அமைப்பைப் பற்றிய கருத்துகளை முன்வைக்கும் நூலாக மட்டுமல்லாமல் இன்றைய இளைஞர்களை வரலாறு, அரசியல், சமூகச் சிந்தனை ஆகியவற்றைப் பற்றி ஆராய்ந்து, சிந்திக்க அழைக்கும் ஒரு முயற்சியாக அமைகிறது என்றும், களச் சூழல், காலச் சூழல், அகச் சூழல், புறச் சூழல் எதுவாயினும் தலைமுறை கடந்து சிந்திக்கும் நாம் தந்தை பெரியார் மற்றும் ஆசிரியர் ஆகியோரின் அடியொற்றி, அவர்களின் அயராத உழைப்பை கண்முன் கொண்டு தொடர்ந்து செயலாற்றுவதோடு, கடமை உணர்ந்தவர்களாய் இது போன்ற நூல்களையும் நம்முடைய கருத்தியலையும் இன்னும் வேகமாக இளைஞர்களிடத்தில் கொண்டு போய் சேர்க்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார்.
அதனைத் தொடர்ந்து பேசிய கழகச் சொற்பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா சமீப காலத்தில் வாசிக்கும் பழக்கம் அதிகமாகி இருப்பதை பெரியார் திடலின் புத்தக விற்பனையை வைத்தே நாம் அறிய முடிகிறது. விடுதலையைப் படியுங்கள், விடுதலை பற்றிப் பேசுங்கள், விடுதலையில் வரக்கூடிய தலையங்கம், அறிக்கை இவற்றை கட்டாயம் படியுங்கள் அதோடு மண்டல் கமிசன் பற்றியும், 32 ஆண்டுகளுக்கு முன்பே ஆசிரியரால் கொண்டுவரப்பட்டு இன்று பயன் பெற்று வரும் பிற்பட்டோர், தாழ்த்தப்பட்டோர், மலைவாழ் மக்களுக்கான 69 சதவீத இட ஒதுக்கீடு குறித்தும் விளக்கிப் பேசுங்கள் என்றார்.
கருத்துரை வழங்கிய மாவட்டத் துணைத் தலைவர் அ. அரவரசன் இந்நூலில் பதிமூன்று அத்தியாயங்கள் உள்ளன. ஆசிரியர் வீரமணி அவர்களின் முன்னுரையையும், கருத்துரை போன்ற அணிந்துரையும் வழங்கிய எழுத்தாளர் பா.திருமாவேலன் அவர்களது உரையையும் முதலில் படித்துவிட்டாலே இந்தப்புத்தகத்தின் ஆழமும் விசாலமும் புரிந்துவிடும். நூற்றாண்டைக் கடந்த இந்த ஆர்.எஸ்.எஸ். இயக்கம் இன்று வரை எந்த பதிவும் இல்லாமல் மறைமுகமாக மக்களிடையே மதவாத ஜாதிவாதத்தை வெறியேற்றி பிளவுதனை ஏற்படுத்தி நாசமாக்கி வருவதை ஓர் ஆய்வுநூலாக நமது தலைவர் படைத்துள்ளார். ஸநாதன எதிர்ப்பாளர்களான பன்சாரே, கல்புர்கி, தபோல்கர், கவுரி லங்கேஷ் ஆகிய ஆளுமைமிக்க தாளிகையாளர்கள் (பத்திரிகையாளர்கள்) சுட்டுக்கொல்லப்பட்டதன் பின்னணியில் ஆர். எஸ். எஸ். எனும் பெயரில் உலவிடும் இந்த டிரோஜன் குதிரைதான் இருந்தது என்பதை அளப்பரிய ஆதாரங்களை வழங்கி இந்நூல் எழுதப்படுள்ளதால் மக்கள் நலம்பெறவும் மூடநம்பிக்கை ஒழியவும் இந்த நூலை மக்களிடையே பரப்ப வேண்டுகிறேன்! என கேட்டுக் கொண்டார்.
நூலை அறிமுகம் செய்து வைத்த கோவை க. வீரமணி நாட்டின் ஒற்றுமை மற்றும் பன்முகத்தன்மையை சிதைக்கும் இந்துத்துவா எனும் மறைமுகமாக எந்தவிதமான பதிவும் இல்லாமல் செயல்படும் அமைப்பே ஆர். எஸ். எஸ்., இதன் போலியான மறைமுக அமைப்புக்களே பஜ்ரங் தள். இந்து முன்னணி, அனுமன் சேனா, சிறீராம் சேனா மற்றும் ஸநாதன் சன்ஸ்தா போன்ற பதினெட்டு அமைப்புகள். இதன் மூலம் அதன் அமைப்பாளரான கோல்வாக்கர், தேவரஸ், மோகன் பகவத் போன்றவர்களை முன்னிலைப்படுத்தியும், சாவர்க்கர் கொள்கையை முன்னிலைப்படுத்தியும், அயல்நாடு வாழ் இந்துமத வெறியர்களின் மறைமுக நிதியுதவி பெற்று சமூகவியலில் ஊடுருவி கல்வி நிலையங்கள் தொடங்கி அனைத்து விதமான மக்கள் பங்கேற்கும் நிகழ்வுகளையும், மதப்போர்வையில் இந்துத்வாவை தீவிரமாக வளர்க்கும்
ஆர்.எஸ்.எஸ். அமைப்பை நமது தலைவர் ஆசிரியர் அவர்கள் தரவுகளுடன் விளக்கி எழுதியுள்ளார். ‘வீரத்துறவி விவேகானந்தர்’ என்று போலியான பிம்பத்தை கட்டமைத்து அதன்மூலம் இந்துத்துவாவை தீவிரமாக பரப்பிவருவதாலும், அடுக்கடுக்கான ஆதாரங்களுடன் எதிர்க்கருத்தாளர்களுக்கு பதிலடி தரும் நூலாக இந்நூல் இருப்பதாலும் இதை மக்கள் மத்தியில் பரப்ப வேண்டும் என்று வேண்டுகிறேன் என்று உரையாற்றினார்.
விழாவில் நூலைப் பெற்றுக் கொண்டு சிறப்பு செய்தவர்கள்
பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் ந.செல்வராசன், கழகக் காப்பாளர் சாமி.திராவிடமணி, மாவட்டத் தலைவர் மா.கு. வைகறை, மாவட்டச் செயலாளர் சி.செல்வமணி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தி. ஜெய லெட்சுமி, கழகச் சொற்பொழிவாளர் தி. என்னாரெசு பிராட்லா, மாநில அமைப்பாளர் ஒ. முத்துக்குமார், மாவட்ட துணைத் தலைவர் அ. அரவரசன், மாவட்ட துணைச் செயலாளர் செ. கோபால்சாமி, மாவட்ட அமைப்பாளர் த.பாலகிருஷ்ணன், ந. ஜெகதீசன், அ. பிரவீன் முத்துவேல், வீ. முருகப்பன், அ. சேவியர், ஆ. பால்கி, கோ. பாரதி, து. அழகர் சாமி, த. திருமேனி, க. அரவிந்தன், ந. பாரதி தாசன், பெரியார் பிஞ்சு பா.வை. இலக்கியன்.
இறுதியாக பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் த. பாலகிருஷ்ணன் கலந்து கொண்ட அனைவருக்கும் நன்றி கூறினார்.
