23 வயதான கோமல் தியாகி இன்று இந்தியாவின் மிகவும் நம்பிக்கைக்குரிய பார்வை மாற்றுத்திறன் தடகள வீரர்களில் ஒருவர். நூறு மீட்டர் மற்றும் இருநூறு மீட்டர் அதிவேக ஓட்டப்பந்தயங்களில் தேசிய அளவில் சாதனை படைத்த அவர், இந்த ஆண்டின் தொடக்கத்தில் நடைபெற்ற கேலோ இந்தியா மாற்றுத்திறனாளி விளையாட்டுப் போட்டிகளில் வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார். இதுமட்டுமின்றி, 2016-ஆம் ஆண்டு முதல் குண்டு எறிதல் மற்றும் வட்டு எறிதல் போட்டிகளிலும் அவர் பல பதக்கங்களை வென்றுள்ளார்.
போராட்டமும் பதக்கங்களும்
மத்தியப் பிரதேசத்தின் மொரேனா மாவட்டத்தைச் சேர்ந்த ஒரு சிறிய கிராமத்தில் பிறந்த கோமல், பிறப்பிலிருந்தே பார்வைத்திறனை இழந்தவர். ஆரம்பத்தில் மற்ற குழந்தைகளைப் போலவே அவரும் தனது பார்வையற்ற இரண்டு உடன்பிறந்தவர்களுடன் ஒரு சாதாரண பள்ளிக்குச் சென்றார்.
ஆனால், பார்வைத்திறன் குறைபாடு காரணமாகப் பாடங்களைப் பின்தொடர்வதில் அவருக்குப் பெரும் சிக்கல் ஏற்பட்டது. அவரது குடும்ப உறுப்பினர்கள் கல்வி அறிவு பெறாத நிலையில் இருந்ததால், அவரை மாற்றுத்திறனாளிகளுக்கான பள்ளியில் சேர்ப்பதைப் பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை.
குவாலியரில் கண்பார்வையற்றோருக்கான ஒரு பள்ளி இருப்பதை அறிந்ததும், தம்பிகள் இருவரை மட்டும் அங்கு அனுப்ப பெற்றோர் முடிவு செய்தனர். கோமல் வளர்ந்தவர் என்பதால், அவருக்கு இது மிகவும் தாமதமாகிவிட்டது என்று அவர்கள் கருதினர்.
ஆனால், கோமல் பின்வாங்கவில்லை; தனக்காகத் தானே போராடி, தனது பெற்றோரை வற்புறுத்தி, இறுதியில் 2015-ஆம் ஆண்டில் தனது சகோதரியுடன் அந்த உண்டு உறைவிடப் பள்ளியில் சேர்ந்தார். அப்போது அவருக்கு 14 வயது. அதுவரை அவர் ஒருபோதும் தனது வீட்டை விட்டுப் பிரிந்து வாழ்ந்ததே இல்லை.
“அங்கு நிலைமை மாறியது. அனைவரும் எங்களைப் போலவே இருந்தனர். அனைத்தும் எங்களுக்காகவே உருவாக்கப்பட்டிருந்தன. நான் யாருக்கும் குறைந்தவர் இல்லை என்ற எண்ணம் அப்போதுதான் எனக்கு வந்தது,” என்று அவர் நினைவுகூர்கிறார்.
அதுவரை கோமல் எந்த விளையாட்டிலும் ஈடுபடுவதைப் பற்றி யோசித்ததே இல்லை. ஆனால், அந்தப் பள்ளியின் இயக்குநர் அவரது உடல் வலிமையையும் நடையையும் கவனித்து, அவரை விளையாட்டில் ஈடுபட ஊக்குவித்தார். டிசம்பர் 3-ஆம் தேதி, பன்னாட்டு மாற்றுத்திறனாளிகள் நாளில் நடைபெற்ற ஒரு சிறிய போட்டியில், குண்டு எறிதல் பிரிவில் கலந்து கொண்டு தனது முதல் முயற்சியிலேயே பதக்கம் வென்றார். இது அவரை டில்லியில் நடந்த தேசிய அளவிலான போட்டிக்கு அழைத்துச் சென்றது.
பயணம் எளிதானது அல்ல…
பதக்கத்தை விட அனுபவத்தில் கவனம் செலுத்துமாறு அவரது ஆசிரியர் அறிவுறுத்தினாலும், கோமல் குண்டு எறிதல், வட்டு எறிதல் ஆகிய இரண்டிலும் தங்கம் வென்று வரலாற்றுச் சாதனை படைத்தார். இதன் மூலம் மத்தியப் பிரதேசத்திலிருந்து பன்னாட்டுப் பார்வையற்றோர் விளையாட்டு கூட்டமைப்பின் தேசியப் பதக்கத்தைப் பெற்ற முதல் கண்பார்வையற்ற வீராங்கனை என்ற பெருமையை அவர் பெற்றார்.
இருப்பினும், அவரது பயணம் எளிதாக இருக்கவில்லை. பிளஸ் 2 முடித்த பிறகு ஏற்பட்ட பெருந்தொற்று காலத்தில், வீட்டிற்குத் திரும்பிய அவருக்குத் திருமணப் பேச்சுகள் எழுந்தன. ஆனால், கல்வியிலும், விளையாட்டிலும் உறுதியாக இருந்த கோமல், எப்படியோ தனது பெற்றோரைச் சம்மதிக்க வைத்து டில்லி பல்கலைக்கழகத்தின் மிராண்டா ஹவுஸில் சேர்ந்தார்.
புதிய சூழலும் அங்குள்ள மூத்தவர்களின் ஆதரவும் அவர் மீண்டும் விளையாட்டுத் துறைக்குத் திரும்ப உதவியது. டில்லியில் தங்கிப் பயிற்சி பெறுவதற்கான செலவுகளைக் கருத்தில் கொண்டு, அவர் குவாலியரில் உள்ள அடல் பிஹாரி வாஜ்பாய் மாற்றுத்திறனாளிகளுக்கான விளையாட்டுப் பயிற்சி மய்யத்திற்குத் தனது பயிற்சியை மாற்றிக்கொண்டார்.
2024-ஆம் ஆண்டில், கடுமையான நிதி நெருக் கடியால் விளையாட்டை விட்டு முற்றிலும் விலகும் நிலைக்கு அவர் தள்ளப்பட்டார். டி11 (T11 – ஒளியை உணர முடியாத நிலை) பிரிவைச் சேர்ந்த அவருக்கு, தனிச்சிறப்பான ஓட்டக் காலணிகள், சத்தான உணவு மற்றும் கூடவே ஓடும் ‘வழிகாட்டி வீரர்’ எனப் பல நிதிச் சுமைகள் இருந்தன.
துளிர்விட்ட நம்பிக்கை
கோமல் நம்பிக்கையை இழந்த அந்தத் தருணத்தில், ‘சிபிஎம் இந்தியா டிரஸ்ட்’ என்ற தன்னார்வத் தொண்டு நிறுவனம் அவருக்கு உதவிக்கரம் நீட்டியது. அந்த அமைப்பின் ஆதரவுத் திட்டத்தின் மூலம் கோமலின் பயிற்சி, உணவு, உபகரணங்கள் மற்றும் பயணச் செலவுகள் என அனைத்தும் ஏற்றுக் கொள்ளப்பட்டன.
பயிற்சியாளர்களின் ஆலோசனைப்படி குண்டு எறிதலிலிருந்து ஓட்டப்பந்தயத்திற்கு மாறிய கோமல், குறுகிய காலத்திலேயே அங்கும் தேசிய அளவில் வெற்றிகளைக் குவித்துள்ளார். அவ்வப்போது தோல்வி பயம் ஏற்பட்டாலும், தனது பயிற்சியாளரிடம் பேசி மீண்டும் உத்வேகம் பெறுவதாக அவர் கூறுகிறார்.
தற்போது அரசியல் அறிவியலில் முதுகலை பயின்று வரும் அவர், திருமணத்தைப் பற்றிய சமூகத்தின் குறுகிய பார்வைகளைப் புறந்தள்ளிவிட்டு, ஆசிய விளையாட்டுப் போட்டிகள் மற்றும் மாற்றுத்திறனாளி ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியாவுக்காகப் பதக்கம் வெல்வதையே இலக்காகக் கொண்டுள்ளார்.
“ஒவ்வொரு வீரருக்கும் இந்தியாவுக்காக விளையாடும் கனவு இருக்கும், எனக்கும் அதே கனவுதான்” என்று அவர் உறுதியாகக் கூறுகிறார்.
மூலம்: ரேகா பாலகிருஷ்ணன், தமிழில்: ஜெய்
