
சிங்கப்பூருக்கு வருகை தந்திருக்கும் ஆசிரியர் அவர்களுடன் விருந்தோம்பல் – கலந்துரையாடல் நிகழ்ச்சி, 26 ஜூலை 2026 (ஞாயிற்றுக்கிழமை) மாலை 6.00 மணி முதல் 9.00 மணி வரை, சிங்கப்பூர் பெரியார் சமூக சேவை மன்றம் சார்பில் Block 99C, Lorong 2 Toa Payoh, Singapore என்ற முகவரியில் நடைபெற்றது.
மன்றத்தின் செயலாளர் தமிழ்ச்செல்வி நிகழ்ச்சிக்கு வருகை தந்த அனைவரையும் வரவேற்றதுடன் மன்றத்தின் எதிர்வரும் நிகழ்ச்சிகள் குறித்தும் எடுத்துரைத்தார்.
தொடர்ந்து மன்றத்தின் தலைவர் பூபாலன் உரையாற்றினார். சிங்கப்பூருக்கு வருகை தந்த தமிழர் தலைவர், தொடர்ந்து சமூகப் பணிகளிலும் எழுத்துப் பணிகளிலும் காட்டி வரும் துடிப்பும் அர்ப்பணிப்பும் அனைவரையும் வியப்பில் ஆழ்த்துவதாகவும், அவருடைய ஓய்வறியாத பணியை அனைவரும் மனமாரப் பாராட்டுவதாகவும் குறிப்பிட்டனர்.
மன்றத்தின் மதியுரைஞர் வீ. கலைச்செல்வம் தனது உரையில், ஆரம்ப காலத்தில் ஆசிரியர் அவர்களுடன் சிங்கப்பூரில் நடைபெற்ற விருந்தோம்பல் கலந்துரையாடல் நிகழ்வுகளைக் குறிப்பிட்டதோடு தொடக்கத்தில் மன்றத்தினை பதிவு செய்து செயல்படத் தொடங்கிய செய்திகளையும் நினைவு கூர்ந்தார். மன்றத்தின் பொறுப்பாளர்களையும், செயற்குழு உறுப்பினர்களையும் பாராட்டினார். கடந்த ஆண்டு மன்றம் நடத்திய ‘ரன்ஃபார் பெரியார்’ நிகழ்வு பெற்ற வரவேற்பையும் நினைவுகூர்ந்தார்.
இவ்வாண்டும் அந்நிகழ்வை நடத்த மன்றம் முடிவு செய்திருப்பதாக அறிவிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் குறித்து மன்ற உறுப்பினர் நரசிம்மன் விளக்கமளித்தார்.
நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் மற்றும் சிறப்பு விருந்தினர்கள் தங்களை அறிமுகப்படுத்திக் கொண்டு தமிழர் தலைவர் அவர்களுடன் தங்கள் கருத்துகளையும் அனுபவங்களையும் பகிர்ந்து கொண்டனர்.
நிறைவாகத் தமிழர் தலைவர் உரையாற்றினார். சிங்கப்பூர் வருகை தமக்கு மகிழ்ச்சியளிப்பதாகக் குறிப்பிட்ட அவர், மன்றத்தின் செயல்பாடுகளையும் உறுப்பினர்களின் அர்ப்பணிப்பையும் பாராட்டியதோடு, சமூக முன்னேற்றத்திற்கும் பகுத்தறிவுச் சிந்தனைகளைப் பரப்புவதற்கும் இதுபோன்ற அமைப்புகளின் பங்களிப்பு தொடர்ந்து வலுப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.
ஆசிரியர் அவர்கள் தனது உரையைத் தொடங்கும் முன், மன்றத்தின் மதியுரைஞர் அண்மையில் மறைவுற்ற புதுமைத்தேனீ மா. அன்பழகனின் நினைவாக ஒரு நிமிடம் அமைதி காத்து மரியாதை செலுத்தினார். அதனைத் தொடர்ந்து தனது உரையைத் தொடங்கினார்.
பெரியார் பன்னாட்டமைப்பும், ஜப்பான் வெளிநாடு வாழ் தமிழ் இந்தியர்கள் சங்கமும் இணைந்து, ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் வருகிற அக்டோபர் 11 மற்றும் 12 ஆகிய இரு நாள்களில் பெரியார் பன்னாட்டு மனிதநேய கருத்தரங்க மாநாடு ஏற்பாடுகளை பற்றிய தகவலை எடுத்துரைத்தார். சிங்கப்பூரிலிருந்தும் சில தோழர்கள் கலந்துகொள்வதாகவும் தெரிவித்தார்கள்.
கலைச்செல்வம் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்துச் சிறப்பு செய்தார். நிகழ்வில் கலந்து கொண்ட உறுப்பினர்கள் பலரும் தமிழர் தலைவருக்கு பொன்னாடை அணிவித்தும், நினைவுப் பரிசுகளை வழங்கியும் தங்களின் அன்பையும், மரியாதையையும் வெளிப்படுத்தினர்.
ஆசிரியர், அம்மா ஆகியோருடன் விழாவில் பங்கேற்றவர்கள் குழுப்படம் எடுத்துக்கொண்டு விருந்துண்டு மகிழ்ந்தனர்.
ஆசிரியர் அய்யாவுடனான விருந்தோம்பல் நிகழ்வு மிகவும் இனிதாகவும், நிறைவாகவும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியை பொறுப்பாளர்கள் மாறன், வள்ளியப்பன், இராஜராஜன், மனோகர், கவிதாமாறன் ஆகியோர் சிறப்பாக ஒருங்கிணைத்திருந்தார்கள்.
குடும்பத்தினருடனும் நண்பர்களுடனும் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்த அனைவருக்கும் மன்றம் தனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொண்டது. அனைவரின் அன்பும், ஒத்துழைப்பும், உற்சாகமான பங்கேற்பும் இந்தச் சந்திப்பை மறக்க முடியாததாக மாற்றியதாக விழாவில் பங்கேற்றோர் தெரிவித்தனர்.
தொகுப்பு: இரா. தமிழ்ச்செல்வி, சிங்கப்பூர்
