உலகமயமாகும் பெரியார்! ஜெர்மனியில் “பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு” நடைபெற்ற நாள் இன்று (27,28,29.7.2017)

3 Min Read

உலக வரலாற்றில் பல்வேறு முக்கியச் சம்பவங்களின் நிகழ்விடமாக இருந்திருக்கிறது ஜெர்மனி. சமூகத்தில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்திய தந்தை பெரியார் அவர்களுக்கும், ஜெர்மனிக்கும் ஒரு தொடர்பு இருக்கிறது. பார்வையாளராக 1932-ஆம் ஆண்டு ஜெர்மனி சென்றிருந்தார் தந்தை பெரியார் அவர்கள். அங்கு 27 நாள்கள் வரை அவர் தங்க நேர்ந்தபோது, அந்நாட்டைச் சிலாகித்திருக்கிறார். அவரது எண்ணத்தில் அந்நாட்டிற்கு தனியிடம் இருந்திருக்கிறது.

அதே ஜெர்மனியில் 2017 ஜூலை 27,28,29 ஆகிய மூன்று நாள்களில் “பெரியார் சுயமரியாதை இயக்கப்  பன்னாட்டு மாநாடு”  நடைபெற்றது

தந்தை பெரியாரின் தத்துவமும், சிந்தனைகளும் பல நாடுகளில் பரவியிருக்கும் சூழல் தற்போது உருவாகியுள்ளது. அமெரிக்காவில் பெரியார் பன்னாட்டு அமைப்பு ஏற்கெனவே உருவாக்கப்பட்டுள்ளது. பல நாடுகளில் தனித்தனி அமைப்புகளாகவும் செயல்பட்டு வருகின்றன. ஜெர்மன் சேப்டர், யூ.கே சேப்டர் என உலகம் முழுக்க பிரிவுகளும் உள்ளன. இதுபோன்ற அமைப்புகளும், பெரியார் சிந்தனைவாதிகளும், கல்வியாளர்களும் இணைந்து இந்த மாநாட்டை நடத்தினார்கள். ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில் தொடங்கிய இந்த மாநாடு 2017 ஜூலை 29-இல் நிறைவடைந்தது. கொலோன் பல்கலைக் கழகப் பேராசிரியரும், தமிழ், ஜெர்மனி உள்பட பல மொழிகளில் ஆராய்ச்சியாளருமான உல்ரிக் நிக்லஸ் இந்த மாநாட்டில் முக்கியப் பங்காற்றியுள்ளார்.

இம்மாநாட்டில் தந்தை பெரியார் அவர்களின் இயக்கத்தைப் பற்றிய ஆய்வுகள், அவரின் தத்துவம், சிந்தனைகள் பற்றிய விரிவாக்கம், இந்த இயக்கத்தை உலகளாவிய இயக்கமாக விரிவுப்படுத்திச் செல்வது தொடர்பான ஆய்வுகள், விவாதங்கள் உள்ளிட்டவை நடைபெற்றன.

தொடக்க விழா 2017 ஜூலை 27 அன்று மாலை நடைபெற்றது. திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மாநாட்டிற்குத் தலைமை ஏற்றார். பிரிட்டனின் கிராய்டன் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகம் மாநாட்டைத் தொடங்கி வைத்தார். பெரியார் பன்னாட்டு மய்யத்தின் ஜெர்மனி கிளைத் தலைவர் பேராசிரியர் டாக்டர் உல்ரிக் நிக்லஸ் வரவேற்றார்.

தந்தை பெரியார் அவர்கள் எழுதிய “கடவுளும் மனிதனும்” உள்ளிட்ட சில நூல்களின் மொழிபெயர்ப்புகள் வெளியிடப்பட்டன. இதில் டாக்டர் சோம. இளங்கோவன், சித்தானந்தம் சதாசிவம் ஆகியோர் பங்கேற்றனர். மாநாட்டின் ஒரு பகுதியாக “பெரியார்” தமிழ்த் திரைப்படம் திரையிடப்பட்டது.

ஆய்வுக்கட்டுரை அரங்கின் முதல் அமர்வுக்கு திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமை தாங்கினார். “சுயமரியாதை. சமூக மற்றும் மனித விடுதலைக்கான சிறந்த தனித்துவக் கருவி – ஒரு வரலாற்று ஆய்வு” உள்பட மூன்று பிரிவுகளில் பேராசிரியர்கள் எஸ்.எஸ்.சுந்தரம், பீட்டர் ஸால்க், டாக்டர் சரி.உன்ரா ஆகியோர் பங்கேற்றனர்.

“சமூகப் புரட்சி – 1929 சென்னை மாகாண முதல் சுயமரியாதை மாநாட்டு தீர்மானங்களும் நடைமுறை ஆக்கங்களும்” என்ற தலைப்பில் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள், கவிஞர் கலி.பூங்குன்றன், லதாராணி ஆகியோர் பங்கேற்ற ஆய்வரங்கம் நடைபெற்றது.

இறுதியாக ‘சமூகநீதி விருது’ வழங்கும் விழாவுடன் பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு நிறைவடைந்தது. கிராய்டன் துணை மேயர் மைக்கேல் செல்வநாயகத்திற்கு ஆசிரியர் கி.வீரமணி பெயரிலான “சமூகநீதி விருது”  வழங்கப்பட்டது. ஆசிரியர் கி.வீரமணி உள்ளிட்ட 41 பேர் பங்கேற்ற இந்த மாநாட்டில் பல ஆய்வுக் கட்டுரைகள் சமர்ப்பிக்கப்பட்டன. இந்த மாநாட்டுடன் சுயமரியாதை இயக்கத்தின் 90-ஆவது ஆண்டு நிறைவு விழாவும் நடைபெற்றது.

தந்தை பெரியார் என்ற சாம்ராஜ்யம் உடலால் மறைந்து 53 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையிலும், அவரது தத்துவங்களும், கொள்கைகளும் இன்றும் தொடர்ந்து முன்னணியில் நிற்கின்றன. ஜாதி, மதம், பெண்ணடிமைத்தனம், மூடநம்பிக்கைகள் மற்றும் பல அடக்குமுறைகளுக்கு எதிராக தடியெடுத்த அவரின் ஆளுமை இன்று கடல்கடந்தும் தலைநிமிர்ந்து நிற்கிறது.

92 ஆண்டுகளுக்குமுன் ஒரு பார்வை யாளராக ஜெர்மனி சென்று வந்த பெரியாரின் சீரிய சிந்தனை தற்போது உருமாற்றம் பெற்று அங்கும் வியாபித்திருக்கிறது என்றால் மிகையல்ல.

9 ஆண்டுகளுக்கு முன்பு  ஜெர்மனியில்  “பெரியார் சுயமரியாதை இயக்கப் பன்னாட்டு மாநாடு” நடைபெற்ற நாள் இன்று  (27.7.2026)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *