அடக்குமுறைகளால் போராட்டத்தை நசுக்க முடியுமா?

4 Min Read

நீட் முறைகேடுகளைக் கண்டித்து, புதுடில்லியில் நடைபெற்ற போராட்டத்தைப் பல்வேறு வழிகளில் முடிவுக்குக் கொண்டுவந்துவிட்டது ஒன்றிய பா.ஜ.க. அரசு. டில்லி ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டத்தை ஒருங்கிணைத்தவர்கள் அபிஜித் தீப்கே என்பவர் தலைமையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சி என்ற பெயரிலான குழுவினர் என்றாலும், அதில் பங்கேற்றோர் பல்துறையினர், இளைஞர்கள், மாணவர்கள், பல்வேறு அமைப்புகளைச் சார்ந்தோர், அமைப்பு சாராத பொதுமக்கள் என்று பல திறத்தோர் ஆவர். அவர்களில் மிகப் பெரும்பாலோர் அரசியல்கட்சிகள் சாராதவர்களே! நீட் தேர்வின் கொடுமைகளுக்கு எதிராக ஏற்பட்ட எழுச்சியின் காரணமாகவே அவர்கள் ஜந்தர் மந்தரில் நடைபெற்ற போராட்டங்களில் பங்கேற்றனர். அதில் பங்கேற்ற அனைவரும் தர்மேந்திர பிரதானின் பதவிவிலகலுக்காக மட்டும் கூடியவர்கள் அல்லர். ஆனாலும், அதைப் பொது நோக்கமாக அறிவித்து நடந்த போராட்டத்தில் பங்கேற்றனர்!

அப்போராட்டத்திலும், நாடாளுமன்றத்தை நோக்கி நடந்த பேரணியிலும், திட்டமிட்டே அடக்குமுறையை ஏவியது ஒன்றிய அரசும், அதன் உள்துறை அமைச்சரின் கட்டுப்பாட்டில் இருக்கும் டில்லி காவல்துறையும்! அரசியல் கட்சிகள், இயக்கங்களைச் சார்ந்தோருக்கு இத்தகைய அடக்குமுறையும், தாக்குதல்களும், கைதும், காவல்துறையின் அத்துமீறல்களும் பழக்கப்பட்டவையே! இவற்றையெல்லாம் எதிர்நோக்கித் தான் பொதுவாழ்க்கைக்கு அவர்கள் பழக்கப்பட்டிருக்கிறார்கள்.

ஆனால், பொது மக்களின் மீது இவற்றைப் பயன்படுத்தும்போது, அதில் அச் சூழலைக் கட்டுப்படுத்தும் நோக்கம் இருப்பதைத் தாண்டியும், அவர்களை அச்சுறுத்தும் போக்கே பெரிதும் வெளிப்பட்டது. மாணவர்களையும், இளைஞர்களையும் போராட்டங்களுக்கு அனுப்பக் கூடாது; அரசை எக் காரணம் கொண்டும் எதிர்க்கக் கூடாது என்ற எண்ணத்தைப் பெற்றோருக்கு அச்ச உணர்வாகப் புகட்டி, பொது வாழ்க்கையிலிருந்து வெகு மக்களை ஒதுக்கி வைக்க வேண்டும் என்பதற்காகவே, கடுமையாக அடக்குமுறை ஏவப்பட்டதுடன், அதைத் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்புவதையும் ஊக்குவித்திருக்கிறது ஒன்றிய அரசு என்றே தோன்றுகிறது.

பெண்கள், மாணவிகளிடம் அருவெறுக்கத்தக்க வகையில் நடந்து கொண்டது டில்லி காவல்துறை. பெரிதும் பெண்கள் கூடியிருக்கும் போராட்டத்தில் போராட்டத்தைக் கட்டுப்படுத்தும் காவல்துறையினரில், துணை ராணுவப் படையினரில் பெண் காவலர்கள் ஏன் இல்லை? பெண்களைக் கையாளப் பெண் காவல்துறையினரைப் பயன்படுத்த வேண்டும் என்ற அடிப்படை மனித அறம் கூட இன்றி, முழுக்க ஆண் காவலர்களைக் கொண்டு முறையற்ற வகையில் கையாண்டுள்ளனர்.

மேலும், சீருடையற்ற காவல்துறையினர் பலர் கூட்டத்தினரைத் தாக்கினர். சீருடையற்ற நுண்ணறிவுப் பிரிவினர் பணியில் ஈடுபடுவது வாடிக்கை என்றாலும், போராட்டக்காரர்களைத் தாக்குவதில் அவர்கள் ஈடுபட்டது எப்படி? தனியார் பாதுகாப்புப் படையினரும் பயன்படுத்தப்பட்டனரா என்று ஊடகங்கள் கேள்வி எழுப்புகின்றன.

அது மட்டுமல்லாமல், சீருடையில் இருந்தாலும் தங்கள் பெயர் பொறிக்கப்பட்ட ‘பேட்ஜ்’ஜைக் கழற்றி விட்டு, அடையாளம் தெரியாத வகையில் காவலர்கள் தயாராக இருந்தது ஏன்? முன் கூட்டியே தாக்கப் போகிறோம் என்று அவர்களுக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டதா? அப்படி என்றாலும், சட்டத்தின் பிடியில் சிக்கிக் கொள்ளக்கூடாது என்று விதிகளை மீறி பெயர் தெரியாமல் இருக்க அரசே ஒப்புக் கொண்டதா என்னும் கேள்வி எழத் தானே செய்கிறது.

மனித உரிமைகளுக்குப் புறம்பாகத் தடைசெய்யப்பட்ட ரப்பர் குண்டுகளைக் கொண்டு (பெல்லட்) துப்பாக்கிச்சூடு தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கூர்மையான ஆணிகள் பொருத்தப்பட்ட தடிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. எவ்வித முன்னறிவிப்பும் இன்றி தடியடி நடத்தப்பட்டது.

இதைவிடக் கொடுமை, காலாவதியான கண்ணீர் புகைக் குண்டுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன என்று  ஒளிப்படங்களுடன்  ஆதாரப்பூர்வமாகப் பதிவிட்டுள்ளனர். ஊடகங்கள் ஒளிபரப்பியுள்ளன. வேதிப் பொருட்களான அவற்றால், கடுமையான சுவாசப் பிரச்சினை, உடல் குறைபாடுகள் ஏற்படும்; மேலும் என்னென்ன விளைவுகள் ஏற்படும் என்பதையும் கணிக்க முடியாது. ஆனால், தன்னுடைய குடிமக்கள் மீதே இத்தகைய தாக்குதலைத் தொடுக்கும் கொடூர சிந்தனை தான் ஒன்றிய அரசினருக்கு இருக்கிறதா?

மாணவர்கள் மீதான தாக்குதலுக்குப் பயன்படுத்தப்பட்ட சில புதிய ரக கருவிகளில் மின்சாரத்தைப் பாய்ச்சும் கருவிகள் இருந்திருக்கின்றன என்று மாணவிகள் குற்றம் சாட்டியுள்ளனர். இதை இந்திய விதிகள் ஏற்கின்றனவா? இவை அனுமதிக்கப்பட்ட கருவிகளா?

இதுவரை கைது செய்யப்பட்டவர்கள் என்ன ஆனார்கள்? என்ன வழக்கு போடப்பட்டுள்ளது? டில்லியில் சட்டம்-ஒழுங்கைப் பாதுகாக்கக் காவல் ஆணையருக்கு தேசிய பாது காப்புச் சட்டத்தின் (NSA) கீழ் தடுப்புக் காவல் அதிகாரங்களை வழங்கி டில்லி துணைநிலை ஆளுநர் தரன்ஜித் சிங் சந்து உத்தரவிட்டாரே! இந்த உத்தரவு ஜூலை 19, 2026 முதல் அக்டோபர் 18, 2026 வரை மூன்று மாதங்களுக்கு அமலில் இருக்கும் என்பது அமைதிவழியில் போராடிய மாணவர்கள், இளைஞர்கள் மீதான அப்பட்டமான மிரட்டல் தானே!

எந்தப் போராட்டம் நடந்தாலும், அதில் காலிஸ்தான் தீவிரவாதிகள் என்றும், வெளிநாட்டுக் கூலிகள் என்றும், தேச விரோதிகள் என்றும் போராடுவோரை முத்திரை குத்துவதை வழக்கமாகக் கொண்டிருக்கும் ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். பா.ஜ.க. அரசு, இந்த முறை தேசப் பாதுகாப்புச் சட்டத்தையும் முன்வைத்து மிரட்டியிருக்கிறது.

ஒரு புறம் வழக்குகள் எல்லாம் திரும்பப் பெறப்படும் என்று போராட்டக்காரர்களிடம் உறுதிமொழி கொடுத்துவிட்டு, இன்னொரு புறம் மற்றொரு செய்தியையும் இந்திய அளவில் ஒன்றிய அரசு விளம்பரப்படுத்தியிருக்கிறது. “போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் எல்லோரும் காணொலியில் பதிவு செய்யப்பட்டுள்ளனர். அவர்களின் முகங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தின் மூலம் கவனிக்கப்பட்டு, அடையாளம் காணப்பட்டதில், பல சமூக விரோதிகள் இதில் பங்கேற்றது தெரியவந்துள்ளது” என்கிறது அந்தச் செய்தி! இதன் மூலம் ஒன்றிய அரசு சொல்ல வருவதென்ன? ‘‘யார் யார் போராடுகிறீர்கள் என்பதை நாங்கள் கண்காணிக்கிறோம். உங்கள் முகங்கள் அடையாளம் காணப்படும். அவற்றைக் கொண்டு வருங்காலத்தில் நீங்கள் எந்த அரசுப் பணியிலும் ஈடுபட முடியாது; அரசின் கண்களிலிருந்து தப்ப முடியாது’’ என்று மறைமுகமாக மிரட்டல் விடுக்கும் வேலைதானே இது! இந்த உத்தமர்கள் தான் பெயர் வில்லை அணியாத காவலர்களைக் களம் இறக்கியிருக்கிறார்கள் என்பதையும் ஒப்பிட்டுக் கொள்ளுங்கள். எதிர்காலமே இருளாகிப் போயிருக்கும் ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.வின் ஆட்சியில், இந்த மிரட்டல்கள் எல்லாம் மக்களின் போராட்டக் குணத்தை மழுங்கடிக்க முடியாது.

ஒரு ஜனநாயக நாட்டில், மக்கள் போராட்டம் நடத்துவது அடிப்படை உரிமை; ஜனநாயகமே இல்லையென்றாலும், மக்களின் போராட்டத்தை எல்லா காலத்திலும், எல்லா அடக்குமுறைவாதிகளாலும் அடக்கிவைத்துவிட முடியாது! உலக வரலாறு இதைத் தான் மீண்டும் மீண்டும் சொல்லிக் கொண்டிருக்கிறது.

 

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *