மாங்குடி துரை.இராவணன்!

6 Min Read

இயற்பெயர் துரைராஜ். திராவிடர் கழக மாநாட்டுப் பேரணியில் இராவணன் வேடமிட்டுச் சென்றதால், அன்று முதல் இராவணன் என்று அழைக்கப்படுபவர்.‌ அதுமட்டுமின்றி இராவணன் போலவே பெரிய மீசையும் வைத்திருப்பார். இயக்க நிகழ்ச்சிகள் எங்கு நடந்தாலும், வேக நடைபோட்டு வந்துவிடுவார்.

வயதையெல்லாம் பொருட்படுத்தாமல், “எங்கள் கடன் பணி செய்து கிடப்பதே” என இயங்கும் இவரைப் போன்ற நூற்றுக் கணக்கான பெரியார் பெருந்தொண்டர்கள் தான் இந்த இயக்கத்தின் சொத்து! வாருங்கள், துரை.இராவணன் அவர்களிடம் பேசுவோம்!

பெரியார் கருத்துகள் உங்களுக்கு எப்படி அறிமுகமானது?

“மழைக்குக் கூட பள்ளிக்கூடம் பக்கம் ஒதுங்கிய தில்லை” என்கிற சொற்றொடர் ஒன்று உள்ளது. அப்படியான ஒரு மழை நேரத்தில் நான் ஒரு வீட்டின் திண்ணைப் பக்கம் ஒதுங்கினேன். அங்கே பகுத்தறிவு வகுப்பு நடந்து கொண்டிருந்தது. அதுதான் என் வாழ்வின் திருப்புமுனை ஆனது. நான் பிறந்தது கும்பகோணம் மாவட்டம் திருவலஞ்சுழி அருகே மாங்குடி எனும் கிராமம்.

அம்மா பெயர் பொண்ணு பாப்பா, அப்பா பெயர் ஆறுமுகம். 1952இல் பிறந்த எனக்கு 74 வயதாகிறது. நான் மழைக்கு ஒதுங்கியது பெரியார் பெருந்தொண்டர் எஸ்.எஸ்.நாதன் அவர்களின் வீடு. அங்கு அவர் 10 மாணவர்களை வைத்துக் கொண்டு, வகுப்பு எடுத்துக் கொண்டிருந்தார். நானும் சென்று அதில் கலந்து கொண்டேன்.

வாரம் ஒன்று வீதம் 7 வகுப்பில் பங்கேற்றேன். அப்போது எனக்கு 11 வயது. நான் பள்ளிப் படிப்புப் படித்தது கும்பகோணம் “பார்ப்பனர்” பள்ளியில். நாள்தோறும் திருநீறு பூசிவரச் சொல்வார்கள். அப்போதே எனக்கு வெறுப்பு ஏற்பட்டது. இப்படியான சூழலில் தாமே ஒரு தலைப்பிட்டு கட்டுரை ஒன்று எழுதச் சொன்னார்கள்.

நான் கல்விக் கடவுள் சரஸ்வதி குறித்துப் பகுத்தறிவுப் பார்வையில் எழுதினேன். எதிர்ப்பு ஏற்பட்டது. இந்நிலையில் 8ஆம் வகுப்பில் தோல்வி அடைந்தேன். இது இயல்பாக நடந்ததா அல்லது திட்டமிடப்பட்டதா என்று தெரியவில்லை. அதன் பிறகு வேறு பள்ளியில் சேர்த்துவிட்டார்கள்.

இறுதியாக நீங்கள் பெற்ற கல்வி என்ன?

பெரும்பாலும் அந்தக் காலத்தில் ஆசிரியர்கள் பார்ப்பனர்களாகவே இருப்பார்கள். சில இடங்களில் தமிழாசிரியராக நம்மவர்கள் இருப்பார்கள். உடற்கல்வி ஆசிரியராக நம்மவர்கள் மட்டுமே இருப்பார்கள். நான் சென்ற புதிய பள்ளியில் தமிழாசிரி யராகக் கோவிலாச்சேரி சின்னத்துரை என்பவர் பணிபுரிந்தார். அவர் பல வகைகளில் எனக்கு உற்சாகம் தந்தார். தொடர்ந்து கும்பகோணம் அரசுக் கல்லூரியில் பியுசி படித்தேன்.

அங்கு திராவிட மாணவர் கழகம் செயல்பட்டது. ஆர்.பி.எஸ்.ஸ்டாலின் மாணவர்களை ஒருங்கிணைத்தார். அதில் இணைந்து செயல்பட்டேன். இறுதியாகத் தஞ்சாவூர் சென்று அய்.டி.அய். படித்தேன். அங்கிருந்த தொடர் வண்டி நிலையத்தில் ராணி உணவகம் இருக்கும். அதனை நமது இயக்கத்தைச் சார்ந்தவர் வைத்திருந்தார். அங்கு போக வர இருப்பேன். அங்குதான் அய்யா கா.மா.குப்புச்சாமி உள்ளிட்ட  தோழர்கள் பலர் அறிமுகமாகினர்.

அதேநேரம் 10 ஆவது வயது வரை எனது வாழ்க்கை வித்தியாசமானது. மார்கழி மாதப் பஜனைக் குழுவிற்கு நான் தான் தலைவர். அதிகாலை எழுந்து காவிரி அரசலாறில் குளித்துவிட்டு, கழுத்தில் பூமாலை போட்டு, சிறுவர்களாகிய நாங்கள் தெருக்களில் பஜனை பாடிச் செல்வோம்.

இப்படித் தொடர்ச்சியாக இரண்டு மாதங்கள் நடக்கும். எங்களை வழிநடத்த ஒரு பார்ப்பனச் சாமியார் இருந்தார். நாங்கள் வாங்கும் அரிசி, கரும்பு, பணம் ஆகியவற்றைச் சேகரித்து அவரிடம் கொடுப்போம்.
எஸ்.எஸ்.நாதன் வகுப்பைக் கேட்கும் முன், எனது வாழ்க்கை இப்படித்தான் போனது.

எங்கு வேலை செய்தீர்கள்?

எனக்கு 24 வயது இருக்கும் போது, 1976இல் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் வேலை கிடைத்தது. அதற்கு முன் அய்.டி.அய் முடித்து ஊரில் இருந்தபோது, ஊர்க்காவல் படையில் இருந்தேன். வாரம் ஒருநாள் போக்குவரத்தைச் (Traffic) சரிசெய்வது, வாரம் ஒருநாள் இரவில் பாதுகாப்புப் பணிக்குச் செல்வது எனச் சமூகம் சார்ந்த வேலைகள் செய்வோம். அதற்கு நாளொன்றிற்கு ரூ.50 ஊதியம் கொடுப்பார்கள். எனக்கு அய்.டி.அய் கல்வியில் இடம் கிடைக்க, இந்த ஊர்க்காவல் படை சேவையும் முக்கியம்.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் இயக்கத் தோழர்கள் 20 பேர் இருந்தோம். 1980ஆம் ஆண்டு திராவிடர் தொழிலாளர் கழகம் தொடங்கினோம். குடும்பம், குடும்பமாக வாகனம் பிடித்து மாநாட்டிற்குச் செல்வது, தந்தை பெரியார் பிறந்தநாள், நினைவு நாள் நடத்துவது, வாயிற் கூட்டங்கள் ஏற்பாடு செய்வது எனத் தொடர்ந்து செயல்பட்டோம். இதற்காகவே மாதந்தோறும் 50 ரூபாய் வீதம் பணம் சேகரிப்போம். ஆசிரியர் உட்பட கழகப் பேச்சாளர்கள் அனைவரும் எங்கள் நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ளனர்.

மாங்குடி கிராமத்தில் இருந்து சென்றபோது, எங்கள் ஊர் தமிழாசிரியர் முத்துவாவாசி வீட்டில் தான் சென்னையில் தங்கியிருந்தேன். பிறகு அவர் கல்வி அதிகாரியாகவும், ஓய்விற்குப் பிறகு கலைஞர் அவர்களுக்குச் சிறப்பு உதவியாளராகவும் இருந்தார். அசோக் லேலண்ட் நிறுவனத்தில் 34 ஆண்டுகள் பணிபுரிந்த நான், 2010இல் ஓய்வு பெற்றேன்.

உங்கள் திருமணம் குறித்துச் சொல்லுங்கள்?

1971ஆம் ஆண்டு சுவாமி மலையில் உள்ள திருமண மண்டபத்தில், ஆசிரியர் தலைமையில் எங்களுக்குத் திருமணம் நடைபெற்றது. இணையர் பெயர் எழிலரசி. அவருடைய தந்தையார் இரத்தினசாமி, திருச்சி மாவட்டம், இலால்குடி பகுதியைச்  சார்ந்தவர்.

திராவிட இயக்கச் சிந்தனைக் கொண்டதால், சுயமரியாதைத் திருமணத்திற்கு ஒப்புக் கொண்டார். இந்நிகழ்வில் புலவர் இராமநாதன்,
கோ.சி.மணி, மாநிலங்களவை உறுப்பினர் கல்யாண சுந்தரம், பட்டீஸ்வரம் அய்யாசாமி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

எனது இணையர் திருமணத்திற்குப் பிறகு கொள்கை உணர்வைப் பெற்றார். தமிழ்நாடெங்கும் நடைபெற்ற மாநாடுகளில் கலந்து கொண்டுள்ளார். 2010ஆம் ஆண்டு இயற்கை எய்தினார்.

எங்களுக்கு இந்திரஜித் என்கிற மகன் இருக்கிறார். அவர் தற்போது ஓசூர் அசோக் லேலண்ட் நிறுவனத்தில் பணி செய்கிறார். மகள் மதுமதி தமது 38ஆவது வயதில் இருதய நோய் காரணமாக இறந்துவிட்டார்.

உங்களின் இயக்க வேலைகள் குறித்துக் கூறுங்கள்?

படிக்கிற காலம் தொட்டே இயல்பாகவே கொள்கை சார்ந்த செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. அதுவும் பள்ளி நாட்கள், கல்லூரிப் பருவம், பணியிடம், ஓய்வுக்குப் பிறகு என அது தொடர்ந்து நீள்கிறது.

அசோக் லேலண்ட் நிறுவனத்தில் எனக்கு நல்ல பெயர் உண்டு. அனைத்து வகைகளிலும் சிறப்பாகப் பணியாற்றுவேன். அதனால் கொள்கைகள் சார்ந்த செயல்பாடுகளுக்கு எதிர்ப்புகள் எதுவும் வந்ததில்லை.

தொடக்கத்தில் திருவெற்றியூரில் தங்கியிருந்தேன். வடசென்னை மாவட்டத் தலைவராக அப்போது க.பலராமன் இருந்தார். அவருடன் இணைந்து பணியாற்றி, இயக்கக் கூட்டங்களில் கலந்து கொள்வேன். எண்ணூர், திருவொற்றியூர் இரண்டு இடங்களிலும் பெரியார் சிலை அமைக்கும் பணியில் என்னையும் ஈடுபடுத்திக் கொண்டேன். தவிர  பெரியார் திடல் நிகழ்ச்சிகள் அனைத்திலும் கலந்து கொள்வேன்.

மணலி புதுநகர் பகுதியில் ஒரு வீடு வாங்கினேன். அதையொட்டி ஆவடி மாவட்டம், பாடி பகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டேன்.

இணையர் நினைவு நாளில் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடை வழங்குவேன். ஆசிரியருக்கு எடைக்கு எடைத் தங்கம் கொடுத்த போது 6 கிராம் வழங்கினேன். பெரியார் உலகத்திற்கு இதுவரை 65 ஆயிரம் வழங்கி இருக்கிறேன்.

மாணவர் பருவத்தில் இருந்தே இருப்பதால், பல்வேறு காலகட்டத் தோழர்களுடனும் அறிமுகம் இருக்குமே?

ஆமாம்! தொடக்கத்தில் பெரியார் சமூகக் காப்பணியில் இருந்தேன். ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற ஹிந்தி எழுத்துகளைத் தார் வைத்து அழிக்கும் போராட்டத்தில் பங்கு பெற்றுச் சிறை சென்றேன்.

சிந்தாதிரிப்பேட்டையில் நடைபெற்ற காவிரி நீர் தொடர்பான ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று சிறை சென்றுள்ளேன். 1973ஆம் ஆண்டு கும்பகோணம் மூர்த்தி கலையரங்கில் நடைபெற்ற பொதுக் கூட்டத்தில் தந்தை பெரியாருடன் படம் எடுத்துக் கொண்டேன். அதற்கு ஒரு ரூபாய் நன்கொடை வழங்கினேன்.

தவிர மூடநம்பிக்கை ஒழிப்பு ஊர்வலங்களில் மூன்று முறை தீ மிதித்துள்ளேன், வாயில் சூடம் ஏற்றியுள்ளேன், மண்ணெண்ணெயை வாயில் ஊற்றி நெருப்பைக் கக்கியுள்ளேன், அரிவாள் மீது ஏறி நின்றுள்ளேன். மேலும் திருச்சியில் அந்தக் காலத்தில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறையில் கலந்துள்ளேன்.

அதில் துரை.சக்ரவர்த்தி, துரை.சந்திரசேகரன், சிவகங்கை இன்பலாதன் போன்றோரும் கலந்து கொண்டனர். எந்தவொரு நிகழ்ச்சியையும், மாநாட்டையும் தவற விடுவதில்லை. கடந்த ஜனவரியில் நடைபெற்ற மும்பை மாநாடு, ஜூன் மாதம் குற்றாலத்தில் நடைபெற்ற பயிற்சிப் பட்டறை வரை கலந்துள்ளேன்.

சென்னை முகப்பேரில் இருந்தால் இங்குள்ள நிகழ்வுகளிலும், ஓசூரில் மகன் வீட்டிற்குச் சென்றால் அங்குள்ள நிகழ்ச்சிகளிலும் பங்கு பெறுவேன். க.பார்வதி, இராயபுரம் மு.போ.வீரன், மலேசியா சக்தி மோகன், ஆவடி இரா.மனோகரன், ஆவடி க.திருநாவுக்கரசு, பா.தட்சிணாமூர்த்தி, கி.இராமலிங்கம், ஏ.தணிகாசலம், எருக்கஞ்சேரி கோ.சொக்கலிங்கம், அதேபோல கும்பகோணம் மாரிமுத்து, சுந்தர பெருமாள் கோயில் சன்னாசி, பட்டீஸ்வரம் அய்யா சாமி, இராமலிங்கம், பழனி, சரஸ்வதி, இந்திரா, அழகுமணி, ராஜு, இராமமூர்த்தி, குமாரசாமி, கவுதமன் உள்ளிட்ட இன்னும் ஏராளமான தோழர்களுடனும் பணி செய்துள்ளேன், இப்போதும் செய்து வருகிறேன்”, எனப் பெரிய மீசைக்காரர் துரை.இராவணன் கூறினார்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *