ஆளுமைக் குறைபாடும், கல்வித்துறையின் சரிவும்!

3 Min Read

2014-ஆம் ஆண்டு பாரதிய ஜனதா கட்சி ஒன்றியத்தில் ஆட்சிக்கட்டிலில் அமர்ந்த பிறகு, நாட்டின் கல்வித்துறை பெரும் பின்னடைவைச் சந்தித்து, மீண்டும் குப்தர்கள் காலத்திற்குத் தள்ளப்பட்டுக்கொண்டிருக்கிறது.

கடந்த 11 ஆண்டுகளில் நாட்டின் முதன்மைப் பல்கலைக்கழகங்கள், கல்வி அமைப்புகள் மற்றும் தேசிய அளவிலான தேர்வுகளின் நிலைத்தன்மை கேள்விக் குறியாக்கப்பட்டுள்ளதாகக் கல்வியாளர்களும், சமூக ஆர்வலர்களும் கவலை தெரிவிக்கின்றனர்.

ஆளுமைக் குறைபாடும், கல்வித்துறையின் சரிவும்! (ஸ்மிருதி இரானி காலம்: மே 2014 – ஜூலை 2016).

2014-ஆம் ஆண்டு அமைக்கப்பட்ட மோடி அமைச்சரவையில் நாட்டின் மனிதவள மேம்பாட்டு அமைச்சராகக் (கல்வி அமைச்சர்) களமிறக்கப்பட்டவர் ஸ்மிருதி இரானி. சின்னத்திரை நடிகை என்ற ஒரே அடையாளத்தோடு களமிறங்கிய இவரது கல்வித்தகுதி ஆரம்பம் முதலே சர்ச்சைக்குரியதாகவே இருந்தது. யேல் பல்கலைக்கழகத்தில் சிறப்பு விருந்தினராகப் பங்கேற்றுப் பெற்ற சான்றிதழை, அங்கு பட்டம் பெற்றது போல் சித்தரித்ததாக எழுந்த புகார்கள் பெரும் விவாதத்தைக் கிளப்பின.

கல்வித் துறையில் எவ்வித அனுபவமும் அற்ற ஒருவரிடம் இத்துறையை ஒப்படைத்தது, கல்விசார் முன்னெடுப்புகளை முடக்கும் ஒரு திட்டமிட்ட நகர்வோ என்ற சந்தேகத்தை ஏற்படுத்தியது.

இவரது மூன்றாண்டு பதவிக்காலத்தில், நாட்டின் முன்னணிப் பல்கலைக்கழகங்கள், உயர்கல்வி நிறுவனங் களின் தரம் படிப்படியாக நிலைகுலைந்தது.

பல்கலைக்கழகங்களில் நிலவிய கடுமையான அரசு, அரசியல் அழுத்தங்கள் காரணமாக, ரோஹித் வெமுலா போன்ற திறமைமிக்க மாணவர்கள் தன்னுயிரை மாய்த்துக் கொள்ளும் சூழல் உருவானது. இது தற்கொலை அல்ல, அரசின் அழுத்தத்தால் நிகழ்ந்த படுகொலை என்றே விமர்சிக்கப்பட்டது.

தீவிர காவிமயமாக்கலும், அமைப்புகளின் வீழ்ச்சியும்! (பிரகாஷ் ஜவடேகர் காலம்: ஜூலை 2016 – மே 2019)

ஸ்மிருதி இரானி மாற்றப்பட்ட பிறகு பொறுப்பேற்ற பிரகாஷ் ஜவடேகர், ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் தீவிரப் பின்னணி கொண்டவர். இவரது ஆட்சிக் காலத்தில் கல்விச் சூழலைக் காவிமயமாக்கும் நடவடிக் கைகள் அதிவேகமாக நடைபெற்றன.

நாட்டின் முதன்மைப் பல்கலைக்கழகங்கள் மற்றும் உயர் கல்வி நிறுவனங்களின் உயர் பதவிகளில் நேரடியாகவே ஆர்.எஸ்.எஸ். அமைப்பைச் சேர்ந்தவர்கள் அமர வைக்கப்பட்டனர்.

கல்வி நிறுவனங்களின் அடிப்படைச் செயல்பாடு களையும் தீர்மானிக்கும் அதிகாரப் புள்ளிகளாக இவர்கள் உருவெடுத்தனர்.

கொள்கை மாற்றங்களும் மறைமுக நகர்வுகளும் (ரமேஷ் பொக்ரியால் ‘நிஷாங்க்’ காலம்: மே 2019 – ஜூலை 2021)

பிரகாஷ் ஜவடேகர் மீதான விமர்சனங்களைத் தொடர்ந்து, துறையில் பெரிய அளவில் அனுபவமில்லாத ரமேஷ் பொக்ரியால் அமைச்ச ராக்கப்பட்டார். விமர்சனக் கணைகளைத் திசைதிருப்பவே இவர் ஒரு “பொம்மை அமைச்சராக”ச் செயல்பட வைக்கப்பட்டார் என்ற கருத்தும் நிலவுகிறது.

இவரது காலத்தில்தான், ஜவடேகர் காலத்தில் நியமிக்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ். உறுப்பினர்களின் சிபாரிசின் பேரில், கட்டாய மும்மொழிக் கொள்கை அமலாக்கம், பாடத்திட்டங்களில் சமஸ்கிருத மயம், கல்வித்துறை தனியார்மயமாக்கல் போன்ற அம்சங்கள் மிக வேகமாக நடைமுறைப்படுத்தப்பட்டன.

புதிய கல்விக் கொள்கையும், முறைகேடுகளின் உச்சமும்! (தர்மேந்திர பிரதான் காலம்: ஜூலை 2021 முதல்)

தற்போது பொறுப்பிலிருக்கும் தர்மேந்திர பிரதான் காலத்தில், ஏற்கெனவே சிதைந்துபோன கல்விக் கட்டமைப்பிற்கு “புதிய கல்விக் கொள்கை” என்ற பெயரில் சாயம் பூசும் பணிகள் தொடங்கின. போபாலில் நடந்த ஆர்.எஸ்.எஸ். நூற்றாண்டு விழாவில் மோகன் பாகவத் பேசிய பேச்சுக்கள், இப்புதிய கல்விக் கொள்கையானது முழுமையாக ஆர்.எஸ்.எஸ்-சின் கல்வித் திட்டத்தை அமல்படுத்துவதற்கே உருவாக்கப்பட்டதை மறைமுகமாக உணர்த்துவதாக உள்ளது. கல்வித் துறையில் தீவிர அரசியல் ஊடுருவல் ஏற்படும் போது, அங்கே முறைகேடுகளும் ஊழல்களும் பெருகத் தொடங்குவது தவிர்க்க முடியாததாகிறது. சில முக்கிய சான்றுகள்:

நீட் தேர்வு வினாத்தாள் கசிவு

நீட் தேர்வு வினாத் தயாரிப்புக் குழுவில் தொடக்கம் முதலே இடம் பெற்றிருந்த புனேவைச் சேர்ந்த பேராசிரியர் ஒருவர், பல ஆண்டுகளாக வினாத் தாள்களைக் கசியவிட்டதாக சிபிஅய் விசாரணை மூலம் தெரியவந்து கைது செய்யப் பட்டுள்ளார்.

சிறையிலிருக்கும் குற்றவாளிகள் தங்களின் முகத்தை மறைத்துக்கொண்டு “நாங்கள் வினாத்தாளை வெளியிடுவோம்” என்று சவால் விட்டு ஊடகங்களுக்கு வீடியோ பதிவுகளை அனுப்பி, தேர்வுத் தாளை வெளியிடும்  அளவிற்குச் சூழல் சீர்குலைந்துள்ளது.

கடந்த 11 ஆண்டுகளில் மட்டும் சுமார் 152 முறை பல்வேறு போட்டித் தேர்வுகளின் வினாத்தாள்கள் கசியவிடப்பட்டுள்ளதாகத் தரவுகள் தெரிவிக்கின்றன.

இது நாட்டின் கோடிக்கணக்கான மாணவர்களின் எதிர் காலத்தையும் அவர்களின் பல ஆண்டு உழைப்பையும் கேள்விக்குறியாக்கியுள்ளது.

கல்வியின் தரத்தை உயர்த்தாமல், அதை ஒரு குறிப்பிட்ட சித்தாந்தத்தின் பிரச்சாரக் களமாகவும், முறைகேடுகளின் புகலிடமாகவும் மாற்றியதே கடந்த 12 ஆண்டு கால ஆட்சியின் சாதனையாக எஞ்சியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *