விழுப்புரம்: எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் – எஸ்.திவ்யபாரதி மணவிழாவில் தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்த்துரை

புரோகித, வைதீக மணவிழாக்களில் பெண்ணை ஒரு ஜடப் பொருளாகக் கருதுகிறார்களே தவிர, மனித ஜீவனாகக் கருதவில்லை!
‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ என்று சொல்வது, வெற்று முழக்கம் அல்ல!
தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மன், அமெரிக்கா நாடுகளிலும் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுவதே அதற்கான ஆதாரம்!!

விழுப்புரம், ஜூலை 23 ‘‘புரோகித, வைதீக மணவிழாக்க ளில் பெண்ணை  ஒரு ஜடப் பொருளாகக்  கருதுகி றார்களே தவிர, மனித ஜீவனாகக் கருதவில்லை! ‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ என்று சொல்வது, வெற்று முழக்கம் அல்ல! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மன், அமெ ரிக்கா நாடுகளிலும் சுயமரியாதைத் திருமணங்கள் நடை பெறுவதே அதற்கான ஆதாரம்’’ என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

Contents
புரோகித, வைதீக மணவிழாக்களில் பெண்ணை ஒரு ஜடப் பொருளாகக் கருதுகிறார்களே தவிர, மனித ஜீவனாகக் கருதவில்லை! ‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ என்று சொல்வது, வெற்று முழக்கம் அல்ல! தமிழ்நாட்டில் மட்டுமல்ல, சிங்கப்பூர், மலேசியா, ஜெர்மன், அமெரிக்கா நாடுகளிலும் சுயமரியாதைத் திருமணங்கள் நடைபெறுவதே அதற்கான ஆதாரம்!!மணமக்கள் எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் – எஸ்.திவ்யபாரதிதிருக்குறள் முனுசாமியார்ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில்…அமெரிக்காவிலும்…பெண்ணை  ஒரு ஜடப் பொருளாகக்  கருதுகிறார்களே தவிர, மனித ஜீவனாகக் கருதவில்லை!‘‘விவாஹ மந்த்ரார்த்த போதினி’’உன்னுடைய நான்காவது கணவன்தான், இந்த மனித ஜாதியில் பிறந்தவன்!மணமக்களுக்கு வேண்டுகோள் உரை!‘‘நாங்கள் இருவரும் மணமக்கள் ஆகிவிட்டோம்’’ என்ற ஓர் அறிவிப்பு!சிக்கனம் நம் வாழ்வின் இலக்கணமாக இருக்க வேண்டும்!உங்கள் பெற்றோருக்கு நீங்கள் நன்றி காட்டுங்கள்!உங்கள் இருவருக்கிடையே தன்முனைப்பு கூடாது!உங்கள் வாழ்க்கையில் உண்மையான வெற்றி!

கடந்த 9.7.2026 அன்று விழுப்புரத்தில் மணமக்கள் எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் – எஸ்.திவ்யபாரதி ஆகியோரின் வாழ்க்கை இணையேற்பு விழாவினை தலைமை தாங்கி நடத்தி வைத்த  திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார். அவரது வாழ்த்துரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

மணமக்கள்
எஸ்.ஆர்.நெடுஞ்செழியன் – எஸ்.திவ்யபாரதி

காரணம் அது வடமொழியான சமஸ்கிருதம். அதனுடைய அர்த்தம் புரிந்தால், அதை அனுமதிக்க மாட்டார்கள் நம்முடைய தாய்மார்கள். ஆனால், ‘‘என்ன இருந்தாலும் அய்யர் இல்லாமல் திருமணம் எப்படிங்க?’’ என்று  கேட்க வேண்டாம். வாழையடி வாழையாக இம்முறையில் மணவிழா செய்து கொண்டவர்கள் எப்படி இருக்கிறார்கள் என்பதை  மிகத் தெளிவாக நினைத்துப் பார்க்க வேண்டும்.

திருக்குறள் முனுசாமியார்

எனக்கு ஒரு குறிப்பு கொடுத்திருக்கிறார்கள். மணமகளின் தாத்தா நர்சிங்கம்பேட்டை ராமசாமி – ஜெயலட்சுமி திருமணம், திருக்குறளார் முனுசாமி அவர் தலைமையில் நடந்தது என்று அந்தக் குறிப்பில் எழுதி கொடுத்திருக்கிறார்கள்.

திருக்குறள் முனுசாமியார் என்றாலே, அவர் மாதிரி ஒரு நகைச்சுவை பேச்சாளரைப் பார்க்க முடியாது. ஏராளமான திருமணங்கள் நடந்தது, இந்த 98 ஆண்டுகளில். இந்த மணவிழாக்கள் இங்கே மட்டும் அல்ல நண்பர்களே,  மலேசியாவில் ஏராளமான திருமணங்களை நடத்தி வைத்து வந்திருக்கிறோம். மலேசிய அரசாங்கமே, மலேசிய திராவிடர் கழகத்துக்காரர்களைத் திருமண பதிவு அதிகாரிகளாக அங்கீகரித்திருக்கிறது. எனவே, இந்த மணமுறை மலேசிய  அரசாங்கத்தாலே அங்கீகரிக்கப்பட்டது உலக அளவிலே. ‘பெரியார் உலக மயம்; உலகம் பெரியார் மயம்’ என்று சொல்வது, வெற்று முழக்கம் அல்ல; இதுவே ஆதாரம்.

ஜெர்மன் கொலோன் பல்கலைக் கழகத்தில்

அதேபோல சிங்கப்பூரில், பல திருமணங்களை நடத்தியிருக்கிறோம். சிங்கப்பூரிலும், இம்மணமுறை சட்டப்படி செல்லும். ஜெர்மனியில் உள்ள கொலோன் பல்கலைக்கழகத்தில் உரையாற்ற அழைத்திருந்தார்கள். அங்கே சென்றிருந்தபோது, அந்தப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அம்மையார் என்னிடம்,  ‘‘ஒரு நாள் கூடுத லாக இங்கே தங்கவேண்டும்’ என்றார்.

‘‘எதற்காக?’’ என்று  கேட்டேன்.

‘‘இலங்கையிலிருந்து  வந்து இங்கே படிக்கிறார்கள். அவர்கள் உங்கள் தலைமையில் சுயமரியாதைத் திரு மணம் செய்யது கொள்ளவேண்டும் என்று நினைக்கி றார்கள். அதனால், கூடுதலாக ஒரு நாள் இருந்து அம்மணவிழாவினை நடத்தி வையுங்கள்’’ என்று சொன்னார்.

அதுபோலவே, நானும் அவர்களுடைய மணவிழா வினை நடத்தி வைத்துவிட்டு வந்தேன். அடுத்த முறை நான் அங்கே சென்றபொழுது, மகிழ்ச்சியாக என்னை வந்து சந்தித்தார்கள்.

அமெரிக்காவிலும்

அதே மாதிரி அமெரிக்காவில், இம்மணமுறையில்  நானே இரண்டு திருமணங்களை நடத்தி வைத்தி ருக்கிறேன். உலகத்தில எங்கு பார்த்தாலும், இந்த மண முறைகள் நடந்து கொண்டிருக்கின்றன. எனவே, உலகம் தழுவிய திருமணம். ஏன் இந்தத் திருமணத்தில் என்ன சிறப்பு? நான் சொன்ன மாதிரி, சமஸ்கிருதத்தில் மந்திரம் சொல்லி, திருமணச் சடங்கு – ஏனென்றால், சமஸ்கிருதம் தேவபாஷையாம். தமிழ் மொழி நம்மு டைய செம்மொழி. கலைஞர்தான் செம்மொழி ஆக்கினார். அந்த செம்மொழி என்ற தமிழ் மொழி, பார்ப்பனர்களுடைய கண்ணோட்டத்தில் நீஷ பாைஷ. அது தீட்டாயிடும். தமிழில் சொல்லக்கூடாது.

பெண்ணை  ஒரு ஜடப் பொருளாகக்  கருதுகிறார்களே தவிர, மனித ஜீவனாகக் கருதவில்லை!

இதோ பாருங்கள், இந்த மணவிழா அழைப்பிதழில்  என்ன போடப்பட்டு இருக்கிறது. ‘‘வாழ்க்கை இணை ஏற்பு விழா!’’ இரண்டு பேரும் சமம். ஆண்,  எஜமானன் அல்ல; பெண்,  அடிமை அல்ல. இரண்டு பேரும் மனித ஜீவன்கள், மனித உரிமையாளர்கள். இது இந்தத் திருமணத்தினுடைய தத்துவம். ஆனால், புரோகிதத் திருமண அழைப்பிதழில் என்ன போடுவார்கள்? திருமணம் செய்துவிக்க, பெரியோரால் நிச்சயத்தபடி என்று போட்டுவிட்ட, கீழே ‘‘கன்னிகாதானம் செய்விக்க’’ என்று போடுவார்கள். கன்னி என்றால், பெண். ‘தானம்’ என்றால், தர்மம். பெண்ணை நான், தர்மமாகக் கொடுக்கிறேன் என்றால், என்ன அர்த்தம்? வாங்கியவர் எப்படி வேண்டுமானாலும் பயன்படுத்தலாம். ஆகவே, பெண்ணை  ஒரு ஜடப் பொருளாகக்  கருதுகிறார்களே தவிர, மனித ஜீவனாகக் கருதவில்லை. அதே மாதிரி ‘‘தாரைவார்த்தல்’’ இந்த மாதிரியான முறையில் இருக்கி றார்கள். அந்தத் தத்துவத்திலே, சமஸ்கிருத மந்திரத்  தத்துவப்படி, ஆண் எஜமானன்; பெண் அடிமையாகக் கொடுக்கப்பட்டவர். அப்புறம் எந்த உரிமையும் கிடை யாது. சுயமரியாதைத் திருமண முறையில் அப்படி இல்லை. இரண்டு பேரும் உற்ற நண்பர்கள். உறுதி மொழி சொல்லுவார்கள். உறுதிமொழி சொல்லி நடத்தக்கூடிய அளவில், இந்த வாய்ப்புகள் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டும்.

உங்களுக்கு ஒரே ஒரு செய்தியை நான் உங்களுக்குத் தெளிவுபடுத்த விரும்புகிறேன். என்ன அந்தச் செய்தி என்று சொன்னால், புரோகித மணமுறையில், அய்யர் மந்திரம் சொல்கிறாரே, யாருக்காவது அந்த மந்திரத்தின் அர்த்தம் என்னவென்று தெரியுமா? தயவுசெய்து நீங்கள் நினைத்து பார்க்க வேண்டும். யாருக்கும் புரியாது அது. இன்னுங்கேட்டால், மணமகளுக்குத் தானே வாழ்த்து – இந்த வாழ்த்து மணமகளுக்குப் புரியவேண்டுமா, இல்லையா? அந்த மந்திரத்தில் என்ன இருக்கிறது? இதோ ஒரு சிறிய புத்தகம் பாருங்கள். நாங்கள்,  புத்தகங்களைக் கொண்டுவருவது, வியாபாரத்திற்காக அல்ல; நாங்கள் சொல்வது எவ்வளவு ஆதாரப்பூர்வமானது, எவ்வளவு உண்மையானது என்ற தரவுகள் ஆதாரங்களைக் காட்டுவதற்குதான் இந்தப் புத்தகங்கள். பல ஆயிரக்கணக்கான பதிப்புகள் வந்திருக்கின்றன.

சுயமரியாதைத் திருமணம் ஏன்? என்று சொல்லும் போது, பார்ப்பனர்கள் சொல்கிற மந்திரத்தை, ஒரு புத்த கமாக எழுதியிருக்கிறார்கள். இந்த விழுப்புரத்தில்தான். லிப்கோ கம்பெனிதான்  அந்த புத்தகத்தை வெளியிட்டு இருக்கிறார்கள்.

‘‘விவாஹ மந்த்ரார்த்த போதினி’’

‘‘விவாஹ மந்த்ரார்த்த போதினி’’  அந்தப் புத்தகத்தை எழுதியவர் கீழாத்தூர் சிறீநிவாஸாச்சாரியர்  என்பவர்.  திருமணத்தில், தாலி எடுத்துக் கொடுப்பதற்கு முன்பு சொல்லப்படும் அந்த சமஸ்கிருத மந்திரத்தில் என்ன இருக்கிறது? சமஸ்கிருதத்தில் சொல்வதால், நமக்குப் புரியாது.

ஆகவே, அந்த மந்திரத்திற்கான தமிழ் அர்த்தத்தையும் எழுதியிருக்கிறார்.

ஸோம: ப்ரதமோ விவிதே கந்தர்வோ விவித உத்தர

த்ருதீயோ அக்நிஷ்டே பதி: துரீயஸ்தே மனுஷ்யஜா:

நம்முடைய ஆள், ‘சாமி, நல்லா சொல்லுங்க’ என்று சொல்வார். ஆனால், அதனுடைய அர்த்தம் என்ன வென்று தெரியாது.

உன்னுடைய நான்காவது கணவன்தான்,
இந்த மனித ஜாதியில் பிறந்தவன்!

அதற்கு அர்த்தம் என்ன தெரியுமா?

தாய்மார்கள் கவனிக்க வேண்டும். வைதீகர்களான பெரியோர்கள் கவனிக்க வேண்டும்.  வைதீக முறையில் தாலி கட்டித் திருமணம் செய்து கொள்ளக்கூடிய அந்தத் திருமணத்தில், சமஸ்கிருத மந்திரம் என்னவென்றால்,  ‘‘சோமன் முதலில் இந்த மணப்பெண்ணை அடைந்தான்; இரண்டாவது,  கந்தர்வன் இந்த மணப்பெண்ணை அடைந்தான்; உன்னுடைய மூன்றாவது கணவன், அக்கினி. உன்னுடைய நான்காவது கணவன்தான், இந்த மனித ஜாதியில் பிறந்தவன்’’ என்று சொல்லி, புரோகிதர் பார்த்து மணமகளை அனுப்புகிறான். இதை விட மானக்கேடு வேறு உண்டா? இதைத் தமிழில் சொன்னால், நீங்கள் யாராவது, அனுமதிப்பீர்களா? அதனால்தான் தந்தை பெரியார் சொன்னார், ‘‘மானமும் அறிவும் மனிதர்க்கு அழகு’’ என்று.

ஏனென்றால், மானத்தைப்பற்றிக்  கவலைப்பட வில்லை. அறிவுப்படி சிந்திக்கவில்லை. அதெல்லாம் இந்த மணவிழாவில் இருக்காது. அந்த வகையிலதான் நண்பர்களே! இந்த மணமுறை என்பது இரண்டு பேரும் மகிழ்ச்சியாக, பகுத்தறிவோடு இருக்க வேண்டும். நம்முடைய பெண் பிள்ளைகளாக இருந்தாலும், படிக்க வைக்க வேண்டும்.

ஆசிரியராக அந்தக் காலத்திலே அம்மா  வந்தார்கள். அவருடைய பிள்ளைகள் இன்றைக்கு வந்திருக்கி றார்கள்.  ரவிச்சந்திரன் அவர்கள் ஆனாலும் தலைமை ஆசிரியர். அதே மாதிரி அவருடைய வாழ்விணையர் ஆனாலும், அவர்களும் ஆசிரியர். இந்தக் குடும்பமே ஒரு பெரிய கல்விப் பல்கலைக்கழகம். பேரப் பிள்ளைகளைப் பாத்தீர்களேயானால், அதைவிட சிறப்பாக இருக்கக்கூடிய வகையில் வளர்ந்து கொண்டிருக்கின்றார்கள். எனவேதான், இந்தக் குடும்பத்தினுடைய மணவிழாவிலே, இது ஆறாவது ஏழாவது திருமணமும், பாரம்பரியமாக இருக்கக்கூடிய தமிழ்த் திருமண முறைகளையும், வந்தி ருக்கின்றவர்கள் இந்த மணமக்களுக்கு வாழ்த்துகளை சொல்லுகிற நேரம்.

மணமக்களுக்கு வேண்டுகோள் உரை!

அதே நேரத்தில ஒன்றைச் சொல்லுவோம். அது என்னவென்றால், நான் பெரும்பாலான மணவிழாக்கள் போனால், மணமக்களுக்கு  அறிவுரை, விரிவுரை எல்லாம் சொல்வதில்லை. ஏனென்றால், மணமக்களுக்கே இவையெல்லாம் தெரியும். அவர்களுக்குப்  பெரிய அறிவுரை எல்லாம் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை. வேண்டுகோள் உரை – சில கருத்துகளை மட்டும்தான் அவர்களுக்குச்  சொல்வது வழக்கம். என்ன அந்தக் கருத்துகள் என்று சொன்னால், அன்பார்ந்த மணமக்களே! நீங்கள் இருவரும், நல்ல பகுத்தறிவுச் சிந்தனையோடு வாழுங்கள். தன்னம்பிக்கையோடு வாழுங்கள்.

நம்முடைய பெரியார் கல்வி நிறுவனங்களில் என்ன சொல்லிக் கொடுப்போம் என்றால், ‘‘நம்மால் முடியாதது, வேறு யாராலும் முடியாது! வேறு யாராலும் முடியாது, நம்மால் மட்டுமே முடியும்’’ என்ற அந்தத் தன்னம்பிக்கையை அந்தப் பிள்ளைகளுக்குச் சொல்லிக் கொடுப்போம்.

நம்மால் முடியும் என்று தைரியமாகச் சொல்ல வேண்டும். அதனால்தான், மணமகன் நெடுஞ்செழியன் அவர்கள்  இவ்வளவு பெரிய போட்டி உலகத்தில், பொறியாளராக இருக்கிறார்.

அதற்கடுத்தது, ஆடம்பரம் கூடாது. வருங்காலத்தில் கூட பார்த்தீர்கள் என்றால், இவர்களுடைய திருமணம் இன்றைக்கு இவ்வளவு பெரிய மண்டபம் இதெல்லாம் தேவைப்படுகிறது. இவர்களுடைய பிள்ளைகள், பெயரப் பிள்ளைகளுடைய மணவிழாக்களுக்கு இது போன்று தேவை இருக்காது.

‘‘நாங்கள் இருவரும் மணமக்கள் ஆகிவிட்டோம்’’ என்ற ஓர் அறிவிப்பு!

இதுபோன்று செலவு செய்யவேண்டாம். அவர்களின் பெயரில் ‘டெபாசிட்’ செய்துகொடுத்துவிடலாம். அவர்களுக்கு நல்ல அளவுக்கு குழந்தை பிறந்து வளர்க்க வேண்டும். ‘‘நாங்கள் இருவரும் மணமக்கள் ஆகிவிட்டோம்’’ என்ற ஓர் அறிவிப்பு, அவ்வளவுதான். சொந்தக்காரர்கள், ‘‘சாப்பாடு போடவில்லையா?’’ என்றால், அவர்களை அழைத்து நல்ல சாப்பாடு போடலாம். அதுவும் திருமண சாப்பாடு இல்லை; பசித்தவர்களுக்கு சாப்பாடு போடவில்லை. இரண்டாவது, பசிக்கு யாரும் சாப்பிடவில்லை. இது ஓர் ஆடம்பரத்தினுடைய அடையாளம். காலை 9 மணிவரை  டிபன் போட்டு, 10 மணிக்கு மறுபடியும் சாப்பாடு என்றால்,  நிறைய பேர் இலையில் இருப்பதை அப்படியே வைத்துவிட்டு எழுந்து போவார்கள். அதுவும் கொஞ்சமாக வைக்கக் கூடாது, நிறைய வைக்க வேண்டும். என்னய்யா, லட்டு இவ்வளவு சிறியதாகப் போட்டிருக்கிறீர்களே?’’ என்று கேட்பார்கள்.

சிக்கனம் நம் வாழ்வின்
இலக்கணமாக இருக்க வேண்டும்!

அய்யாதான் சொன்னார், எல்லாம் மனிதர்களுக்குப் பயன்பட வேண்டும்; வீணாகக் கூடாது. சிக்கனம் நம் வாழ்வின் இலக்கணமாக இருக்க வேண்டும். அதை வாழ்க்கையில் கடைபிடிங்கள். வரவுக்கு உட்பட்டு செலவழிக்க வேண்டும். வரவுக்கு மேல் செலவழிக்கின்ற உரிமை, அரசாங்கங்களுக்கு மட்டும்தான் உண்டு. இன்றைக்கு இது பல பேருக்குத் தெரியவில்லை. இரண்டையும் போட்டுக் குழப்பிக் கொள்கிறார்கள்.

அது என்னவென்றால், தனியாருக்கு, வரவுக்கு ஏற்ப செலவு செய்யவேண்டும். வரவு முதலில், செலவு இரண்டாவது, அதற்கேற்ப. அரசாங்க பட்ஜெட் அப்படியில்லை. செலவு முதலில், அதற்கேற்ப வரவு ஏற்படுத்துவது இரண்டாவதுதான். இது கூட பலருக்குத் தெரியாததினால்தான் வெள்ளை அறிக்கை, சிவப்பு அறிக்கை, பச்சை அறிக்கை என்றெல்லாம்  வருகிறது.

அந்த அடிப்படையிலே உங்களுக்குச் சொல்ல வேண்டுமானால், இந்த மணமுறையில், வரவுக்கு உட்பட்டு செலவழியுங்கள். தேவைக்கு மேல் செல வழிப்பதற்குப் பெயர் ஆடம்பரம். தேவைக்கே செல வழிக்காததற்குப் பெயர் கருமித்தனம். தேவைக்கு ஏற்ப செலவழிப்பதற்குப் பெயர் சிக்கனம். சிக்கனமும், கருமித்தனமும் ஒன்றல்ல. நீங்கள் குழப்பிக் கொள்ளக்கூடாது. ஆகவேதான், மணமக்களாகிய நீங்கள், சிறப்பாக வாழுங்கள்.

உங்கள் பெற்றோருக்கு
நீங்கள் நன்றி காட்டுங்கள்!

நிறைவாக, ஒன்றைச் சொல்கிறேன், நீங்கள் வாழ்வில் இன்னும் உயர்வீர்கள்; நிறைய சம்பளம் பெறு வீர்கள். பதவி உயர்வு பெறுவீர்கள். வாழ்க்கையிலே பெரிய மகிழ்ச்சி அடைய வேண்டும். அதற்காக, மகிழ்ச்சி, வாழ்த்துகள்! ஆனால் உங்களுக்கு ஒரே ஒரு வேண்டுகோள், வாழ்க்கையில் நீங்கள் எவ்வளவு உயர்ந்தாலும், உங்கள் தாய், தந்தையரான உங்கள் பெற்றோருடைய தியாகத்தை மறக்காதீர்கள். உங்கள் பெற்றோருக்கு நீங்கள் நன்றி காட்டுங்கள். பெற்றோரை மதியுங்கள். அதைத்தான் மிகப்பெரிய அளவிலே எல்லோரும் விரும்புவார்கள். அதை நன்றாக நினைவில் வைத்து கொள்ளுங்கள்.

உங்கள் இருவருக்கிடையே தன்முனைப்பு கூடாது!

வெற்றிகரமான இல்லறத்திற்கு ஒரே ஒரு முதல் எதிரி யார்? ஏன் பல திருமணங்கள் வெற்றி அடைய வதில்லை என்று  கேட்டால், அதற்கு மூல காரணம், தன்முனைப்புதான்.  தன்முனைப்பு என்றால்,  ‘ஈகோ.’ அந்தத் தன்முனைப்பினால், ‘நான் பெரியவனா? நீ பெரியவளா? நான் சொல்வதை கேட்பதா? நீங்கள் சொல்வதைக் கேட்பதா?’ என்பது உங்களிடையே வரக்கூடாது.

ஒருவருக்காக இன்னொருவர் விட்டுக் கொடுத்துப் பழக வேண்டும். யார் விட்டுக் கொடுப்பதிலே முன்னே போகிறார்கள். முந்திக் கொள்கிறார்கள் என்பதிலேதான் வெற்றி இருக்கிறது.

பேரறிஞர் அண்ணா அவர்கள், தந்தை பெரியாரின் முதல் சீடர். அய்யா அவர்கள், சிக்கனம், பகுத்தறிவு போன்றவற்றையெல்லாம் சொன்னார். அண்ணா சொன்னார், ‘‘விட்டுக் கொடுப்பவர்கள் கெட்டுப் போவதில்லை; கெட்டுப் போகிறவர்கள் விட்டுக் கொடுப்பதில்லை’’ என்று.

ஆகவே, அன்புள்ள மணமக்களே! நீங்கள் இருவரும்  ஒருவருக்கொருவர்  விட்டுக் கொடுத்து அன்போடு பழகுங்கள். உங்கள் வாழ்க்கை வெற்றிகரமாக இருக்கும்.

முதல் பரிசு, வெற்றி பரிசு யாருக்காக என்று சொன்னால், முதலில் யாருக்குத் தெரியுமா? அதிக ஓட்டு வாங்கியவர்கள் வெற்றி பெறுகிறார்கள். கால்பந்த ஆட்டத்தில், யார் அதிக கோல் அடிக்கிறார்களோ அவர்கள் வெற்றி பெறுகிறார்கள். ஓட்டப் பந்தயத்தில் முதல் பரிசு முதலில் வந்து வெற்றி பெற்றவருக்கு. தோற்றவர் பின்னால் வருகிறார்.  வெற்றி – தோல்வி என்பது அங்கே வேறு.

உங்கள் வாழ்க்கையில் உண்மையான வெற்றி!

ஆனால், வாழ்க்கையில், வித்தியாசமான பரிசு யாருக்குத் தெரியுமா? வெற்றி பெற்றவருக்குப் பரிசு கிடையாது. யார், யாருக்காகத் தோற்கிறீர்களோ, அவர்களுக்குதான் முதல் பரிசு. அவருக்குச் சங்கடம் வரக்கூடாது என்பதற்காக நான் விட்டுக் கொடுக்கிறேன். எனக்குச் சங்கடம் வரக்கூடாது என்று அவர் விட்டுக் கொடுக்கிறார் பாருங்கள், ஒருவரை முந்திக்கொண்டு இன்னொருவர் தோற்றுக் காட்டுவது என்பது இருக்கிறதே, அதுதான் உங்கள் வாழ்க்கையில் உண்மை யான வெற்றியாகும். அப்படிப்பட்ட ஓர் அருமையான வாழ்க்கையை என்றென்றைக்கும் வாழ, அனைவர் சார்பாக வாழ்த்துகிறோம்.

இந்த நல்ல குடும்பம், ஆல் போல் தழைத்து, அருகு போல் வேரோடி, பெரியார் கொள்கை எப்படி உலகமயமாகிறதோ, அதற்கு நீங்களும் துணையாக இருக்கக்கூடிய அளவிற்கு இருக்கவேண்டும்.

அதனால்தான், ‘பெரியார் உலகம்’ என்ற ஒன்றே நாங்கள் நிர்ணயித்துக் கொண்டிருக்கிறோம். அப்படிப்பட்ட ‘பெரியார்  உலக’த்தில் நீங்கள் எல்லாம் சிறப்பான பணியில் எண்ணப்படக் கூடியவர்களாக இருக்கக்கூடியவர்கள்.  மணமக்கள் உறுதிமொழி கூறி, இப்போது வாழ்க்கை ஒப்பந்த நிகழ்ச்சியினை இங்கே நம் அனைவர் முன்னிலும் நடத்திக் கொள்கிறார்கள்.

– இவ்வாறு திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் வாழ்த்துரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  


Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *