“முழங்கும் கடலை வேலியாகவுடைய இந்நிலம் முழுவதையும் தமிழ் நாடாக்க விரும்பினால் எவரும் எதிர்க்க முடியாது” என்கிறது சிலப்பதிகாரத்தின்…
“இமிழ்கடல் வேலியைத் தமிழ்நாடாக்கிய
இது நீ கருதினை யாயின் ஏற்பவர்
முது நீ ருலகின் முழுவது மில்லை” என்னும் பாடல்.
ஈராயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தொல்காப்பியத்துக்குப் 11-ஆம் நூற்றாண்டில் உரை எழுதிய இளம்பூரணர், எளிய கேள்வி பதில் எப்படி அமைய வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியது தான், “நும் நாடு யாது என்றால், ‘தமிழ்நாடு’ என்றல்” என்னும் விளக்கம்!
வரலாற்றுக் காலத்திலிருந்து தொடரும் இவ் வேட்கை நிறைவேறிய நாள் தான் ஜூலை 18. பெரும் போராட்டங்களுக்குப் பிறகுதான் “தமிழ்நாடு” என்று இந் நாட்டுக்குப் பெயர் சூட்டினார் அறிஞர் அண்ணா. 1967-ஆம் ஆண்டு இதே நாளில் தான் அவர் கொண்டு வந்த தீர்மானம் மதராஸ் மாநிலத்தின் சட்டமன்றத்தில் நிறைவேறியது. இன்று 60-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கிறது “தமிழ்நாடு” என்னும் அதிகாரப் பூர்வப் பெயர்.
‘தமிழ்நாடு’ என்னும் பெயர் சூட்டப்பட வேண்டும் என்பது புதிதாக 1967-இல் நடந்த முயற்சி அல்ல; அதற்கும் முன்பு 1963-இல் இந்திய நாடாளுமன்றத்தின் மாநிலங்களவையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியாலும், அதற்கு முன்பு மதராஸ் மாநிலத்தின் சட்டமன்றத்தில் இரண்டாம் முறையாகத் திமுகவாலும், அதற்கும் முன் 1961-இல் சட்டமன்றத்தில் சோசலிஸ்ட் கட்சியாலும், அதற்கும் முன் 1957-இல் சட்டமன்றத்தில் தி.மு.க.வாலும் கொண்டுவரப்பட்ட தீர்மானங்கள் வலியுறுத்தின. அதற்கும் முன்பு பல கோரிக்கைகளுள் ஒன்றாக தமிழ்நாடு என்னும் பெயர் மாற்றக் கோரிக்கையையும் வலியுறுத்தி, பட்டினிப் போராட்டம் நடத்தி உயிர்நீத்தார் சங்கரலிங்கனார்.
கடந்த நூற்றாண்டில் மதராஸ் மாகாணம் என்னும் பெயரில் அழைக்கப்பட்டுவந்த இம் மண்ணிலிருந்து, 1956-இல் ஆந்திரமாகச் சில பகுதிகளும், கேரளமாகச் சில பகுதிகளும், கருநாடகமாகச் சில பகுதிகளும் மொழிவாரியாகப் பிரிக்கப்பட்ட பின், தமிழ் பேசும் மக்கள் நிறைந்த பகுதிகளைக் கொண்டதாக உருவானது இம் மாநிலம். அந்தந்த மாநிலத்தார் தங்கள் பெயர்களைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட பின்னர், ‘தமிழ்நாடு’ என்னும் பெயர் சூட்டுவதே சரியென்னும் நியாயத்தை ஒப்பவில்லை அந்நாளைய காங்கிரஸ் ஆட்சி. இத்தனைக்கும் 1920-லேயே தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி என்று தங்கள் மாநிலக் கமிட்டிக்குப் பெயர் சூட்டிக் கொண்ட கட்சி தான் அது!
மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கப்படும் என்று முடி வெடுத்தபோதே, ‘தமிழ்நாடு’ என்று பெயர் சூட்டாமல், ‘சென்னை மாநிலம்’ என்று பெயர் சூட்டப்படும் என்ற அறிவிப்பைக் கண்டு கொதித்தார் தந்தை பெரியார். “ திராவிடத்தை அல்லது தமிழ்நாட்டை விட்டு ஆந்திரர், கருநாடகர், மலையாளிகள் பிரிந்து போன பின்பு கூட மீதியுள்ள யாருடைய ஆட்சேபணைக்கும் இடமில்லாத தமிழகத்திற்குத் ‘தமிழ்நாடு’ என்ற பெயர் கூட இருக்கக் கூடாதென்று பார்ப்பானும், வட நாட்டானும் சூழ்ச்சி செய்து, இப்போது அந்தப் பெயரையே மறைத்து ஒழித்துப் பிரிவினையில், ‘சென்னை நாடு’ என்று பெயர் கொடுத்திருப்பதாகத் தெரிய வருகிறது. இது சகிக்க முடியாத மாபெரும் அக்கிரமமாகும். எந்தத் தமிழனும், அவன் எப்படிப்பட்ட தமிழனானாலும் இந்த அக்கிரமத்தைச் சகித்துக் கொண்டிருக்க மாட்டான் என்றே கருது கிறேன். அப்படி யார் சகித்துக் கொண்டிருந்தாலும் என்னால் சகித்துக் கொண்டிருக்க முடியாதென்று சொல்ல வேண்டியவனாக இருக்கிறேன்….
… ‘தமிழ்’, ‘தமிழ்நாடு’ என்கிற பெயர் கூட இந்நாட்டுக்கு, சமுதாயத்திற்கு இருக்க இடமில்லாதபடி எதிரிகள் சூழ்ச்சி செய்து வெற்றி பெற்று விட்டார்கள் என்கிற நிலைமை ஏற்பட்டு விடுமானால், பிறகு என்னுடையவோ, என்னுடைய கழகத்தினுடையவோ, என்னைப் பின்பற்றும் நண்பர்களுடையவோ வாழ்வு வேறு எதற்காக இருக்க வேண்டும் என்று எனக்குத் தோன்றவில்லை. இந்தக் காரியம் மாபெரும் அக்கிரமான காரியம் என்பதோடு மாபெரும் சூழ்ச்சி மீது செய்யப்பட்ட காரியம் என்றே கருதுகிறேன். நம்நாடு எது? நமது மொழி எது? நமது இனம் எது? என்பதையே மறைத்து விடுவதென்றால், பிறகு தமிழன் எதற்காக உயிர் வாழ வேண்டும் என்பது எனக்குப் புரியவில்லை” (விடுதலை, 11.10.1955) என்றார் பெரியார்.
ஏனெனில், அதற்கும் இருபது ஆண்டுகளுக்கு முன்பே இந்த எதிர்ப்புப் போராட்டத்தின்போது 1938இல் “தமிழ்நாடு தமிழருக்கே” என்று முழங்கியவர் தந்தை பெரியார். “இனியாவது ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று ஆரவாரம் செய்யுங்கள்! உங்கள் கைகளில், ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்று பச்சை குத்திக் கொள்ளுங்கள்! உங்கள் வீடுதோறும் ‘தமிழ்நாடு தமிழருக்கே’ என்ற வாசகத்தை எழுதிப் பதியுங்கள்!” என்று அவர் எழுப்பிய குரல் தமிழர்களின் உள்ளமெல்லாம் எதிரொலித்தது.
இத்தனைப் போராட்டங்களுக்குப் பிறகு வைக்கப்பட்ட பெயர் என்றாலும், அதை ஏற்பதற்குப் பார்ப்பனர்களுக்கும், இந்துத்துவாவினருக்கும் இன்னமும் மனமில்லை. வயிற்றெரிச்சல் பெருகுகிறது. 2023-இல் கூட “தமிழ்நாடு; என்பதை விட, ‘தமிழகம்’ என்பதே பொருத்தம்” என்றார் தமிழ்நாட்டின் பண்பாட்டுக்கும், வரலாற்றுக்கும் எள் மூக்கு முனையளவும் தொடர்பற்ற அப்போதைய ஆளுநர் ஆர்.என்.ரவி. அது அவரின் குரல் அல்ல – அவரை இயக்கிய ஆர்.எஸ்.எஸ்.சின் குரல்! உடனடியாகத் தமிழ்நாடு கொந்தளித்தது. ‘தமிழகம்’ என்ற சொல்லும் எங்களுக்குரியதே! ஆனால், அரசியல் ரீதியாக, அரசியலமைப்புச் சட்ட ரீதியாக நிறுவப்பட்ட ஒன்றை, தமிழ்நாட்டு மக்களின் ஒன்றுபட்ட உணர்வுக்கு மாறாக ஆர்.எஸ்.எஸ். மாற்ற முயல்வது, இந்தியக் கூட்டாட்சியென்னும் அடிப்படைக்கே வேட்டு வைக்கும் முயற்சி! அன்று அறிஞர் அண்ணா சட்டமன்றத்தில் முழங்கியதை, அழுத்தந் திருத்தமாக மீண்டும் ஒரு முறை முழங்கினார் ‘திராவிட மாடல்’ முதலமைச்சர் மானமிகு முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின். இன்றும் கூட சில ஆர்.எஸ்.எஸ். ஆதரவு ஊடகங்களும், அதற்கு அஞ்சி நடுங்கும் ஊடகங்களும், தமிழ்நாடு என்பதற்குப் பதில் ‘தமிழகம்’ என்று திட்டமிட்டுப் பயன்படுத்துகின்றன.
ஆட்சி மாறியுள்ள சூழலில், இன்று மீண்டும் பல இடங்களில், தமிழ்நாடு அரசின் விளம்பரங்களிலும், அறிவிப்புகளிலுமே ‘தமிழ்நாட்டை’ ஒதுக்கி, தமிழகம் என்னும் சொல் முன்னிலைப்படுத்தப்படுகிறது. கட்சிக்குப் பெயர் வைப்பது அவரவர் விருப்பம்! ஆனால், மாநிலத்தின் பெயரை மாற்றுவதை மக்கள் ஒருபோதும் ஏற்க மாட்டார்கள். ‘தமிழ்நாடு நாளு’க்கு வாழ்த்துச் சொல்லியுள்ள முதலமைச்சருக்கு இதனை நினைவூட்டுவது நமது கடமை.
‘தமிழ்நாடு’ என்னும் சொல்லுக்குப் பின்னால் உள்ள சமுதாய உணர்வை, அரசியலை, பண்பாட்டை, வரலாற்றை, முக்கியத்துவத்தை… அதைச் சொல்ல மறுப்பவர்கள் தான் மீண்டும் மீண்டும் நினை வூட்டிக் கொண்டே இருக்கிறார்கள். உணர்வூட்டிக் கொண்டே இருக்கிறார்கள்.
எனவே, மீண்டும் அழுத்திச் சொல்வோம்.
தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!
தமிழ்நாடு வாழ்க! தமிழ்நாடு வாழ்க!
