டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* பள்ளிகளில் ஜாதி, மத, அரசியல் நிகழ்ச்சிகளுக்குத் தடை: அரசு மற்றும் தனியார் பள்ளி வளாகங்களில் ஜாதி, மத மற்றும் அரசியல் சார்ந்த நிகழ்ச்சிகள் நடத்தக் கூடாது என்று தமிழ்நாடு பள்ளிக் கல்வித்துறை சுற்றறிக்கை வெளியிட்டுள்ளது. மாணவர்களிடையே ஒற்றுமை மற்றும் சமூக நல்லிணக்கத்தை பேணும் நோக்கில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு தெரிவித்தது.
* அயோத்தி ராமர் கோயில் நிதி மோசடி விவகாரம்; நிலை அறிக்கை தாக்கல் செய்ய விசாரணைக் குழுவுக்கு உத்தரவு: ஒன்றிய, உ.பி அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் அறிவிக்கை.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* படிவம்-6 மாற்றம்: “தேர்தல் ஆணையமா, மோடியின் தனிப்பட்ட ஆட்சிப்பீடமா?” – எதிர்க்கட்சிகள் விமர்சனம். வாக்காளர் பதிவு தொடர்பான படிவம்-6 மாற்றத்தை எதிர்த்து எதிர்க்கட்சிகள் கடும் விமர்சனம் தெரிவித்துள்ளன. இந்த மாற்றத்தை திரும்பப் பெற வேண்டும் என்று கோரியுள்ள காங்கிரஸ், தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பிரதமர் மோடியின் விருப்பங்களை மட்டுமே நிறைவேற்றுகிறார் என்று குற்றம்சாட்டியுள்ளது.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* தமிழ்நாட்டில் பசு வதைத் தடையை அமல்படுத்த உத்தரவிட்ட உயர்நீதிமன்ற தீர்ப்புக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை: பக்ரீத் உள்ளிட்ட எந்த நாளிலும் பசு மற்றும் கன்றுகளை வதை செய்யக்கூடாது என்றும், அதனை தமிழ்நாடு அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன் மற்றும் வி.லட்சுமி நாராயணன் அமர்வு, வழங்கிய உத்தரவுக்கு எதிராக தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்தது. இதையடுத்து, அந்த உத்தரவுக்கு உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது.
தி இந்து:
* குடியுரிமை தீர்ப்புகள் நியாயமாகவும் சட்டபூர்வமாகவும் இருக்க வேண்டும்: உச்சநீதிமன்றம்: வெளிநாட்டவர் என அறிவிக்கப்பட்டவர்களைப் பற்றிய குவாஹட்டி உயர்நீதிமன்றத்தின் 27 தீர்ப்புகளை உச்சநீதிமன்றம் ரத்து செய்துள்ளது. வழக்குதாரர்கள் விசாரணைக்கு ஆஜராகாததைக் காரணம் காட்டி மேல்முறையீடுகளை நிராகரித்திருந்த உயர்நீதிமன்றத்தின் அணுகுமுறையை நீதிமன்றம் ஏற்கவில்லை. “இயந்திரத்தனமாக பின்பற்றப்படும் நடைமுறையின் அடிப்படையில் குடியுரிமை குறித்து வழங்கப்படும் தீர்ப்புகள் நிலைக்காது” என்று கூறிய உச்சநீதிமன்றம், வழக்குகளை மீண்டும் விசாரித்து தீர்ப்பளிக்க தீர்ப்பாயங்களுக்கு உத்தரவிட்டுள்ளது.
* தவெக மீது உச்சநீதிமன்றத்தை நாடலாம்: திமுக எச்சரிக்கை. ஆளும் தமிழக வெற்றிக் கழகம் (TVK) எம்.எல்.ஏ.க்களை ‘குதிரை பேரம்’ மூலம் தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளதாக திமுக குற்றம்சாட்டியுள்ளது. இது குறித்து ஆளுநரிடம் அளிக்கப்பட்ட புகாரின் மீது நடவடிக்கை எடுக்கப்படாவிட்டால், உச்சநீதிமன்றத்தை அணுகுவோம் என்று திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி தெரிவித்துள்ளார்.
* மூன்றாவது மொழித் தேர்வு குறித்து புதிய சுற்றறிக்கை வெளியிட்ட சி.பி.எஸ்.இ: 2027-2028 கல்வியாண்டு முதல், 10ஆம் வகுப்பு மாணவர்கள் தேர்ச்சி பெற மூன்றாவது மொழிப் பாடத்தின் உள்மதிப்பீட்டில் கட்டாயம் தேர்ச்சி பெற வேண்டும் என சி.பி.எஸ்.இ. அறிவித்துள்ளது. உள்மதிப்பீட்டில் தோல்வியடையும் மாணவர்களுக்கு இறுதி முடிவுகள் வெளியிடப்படும் முன் மீண்டும் தேர்வு நடத்த பள்ளிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. 9ஆம் வகுப்பில் தோல்வியடைந்தாலும், மாணவர்கள் 10ஆம் வகுப்புக்கு முன்னேற்றப்படுவார்கள்; ஆனால் நிலுவையில் உள்ள தேர்வில் பின்னர் தேர்ச்சி பெற வேண்டும்.
தி டெலிகிராப்:
* பத்ரிநாத் கோயில் காணிக்கை திருட்டு: சிசிடிவி மூலம் அம்பலம்: பத்ரிநாத் கோயிலில் காணிக்கைப் பணம் மற்றும் மதிப்புமிக்க பொருட்கள் திருடப்பட்ட சம்பவம் சிசிடிவி காட்சிகள் மூலம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது. சந்தேகநபர் கைது செய்யப்பட்ட நிலையில், “பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த காணிக்கை திருட்டு இப்போதுதான் அம்பலமாகியுள்ளது” என்று பத்ரிநாத் பண்டா பஞ்சாயத்து அமைப்பு தெரிவித்துள்ளது.
டைம்ஸ் ஆஃப் இந்தியா:
* 900 ஆண்டுகள் தவறாக அடையாளம் காணப்பட்டு வணங்கப்பட்ட சிலை: “சரஸ்வதி” அல்ல, “காயத்ரி”! மத்தியப் பிரதேசத்தின் தார் பகுதியில் உள்ள 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு சிற்பம், பல நூற்றாண்டுகளாக சரஸ்வதி தேவியின் உருவமாகக் கருதப்பட்டு வந்தது. ஆனால் சமீபத்திய அறிவியல் மற்றும் டிஜிட்டல் ஆய்வுகள், அந்தச் சிலை உண்மையில் காயத்ரி தேவியின் அரிய உருவச்சிலை என்பதை வெளிக்கொணர்ந்துள்ளன. இதன்மூலம் சுமார் 900 ஆண்டுகளாக நிலவி வந்த வரலாற்றுத் தவறான அடையாளம் திருத்தப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.
– குடந்தை கருணா
