தூத்துக்குடி, ஜூலை 14- தூத்துக்குடி மாவட்டத் திராவிடர் கழகக் கலந்துரையாடல் கூட்டம் 10.7.2026 அன்று மாலை 6 மணிக்குப் பெரியார் மய்யம், அன்னை நாகம்மையார் அரங்கில் மாவட்டத் தலைவர் மு.முனியசாமி தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட இளைஞரணித் தலைவர் அ.பிரசாத் வரவேற்புரையாற்றினார். முதலாவதாக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் கூட்டத்தின் நோக்கம் பற்றி விளக்கவுரையாற்றினார். அவர் தம் உரையில்,
தமிழர் தலைவர் அவர்கள் ஒரு நாளில் ஆற்றுகின்ற பணியினை வி.சி.வில்வம் அவர்களின் கட்டுரையிலிருந்து பட்டியலிட்டு அகவை 93ஆ! என வியத்தகு விளக்கம் தந்தார். புதிய பொறுப்பாளர்களுக்குப் பயனாடை அணிவித்து, அனைவரும் இணைந்து தலைமைக் கழகம் அறிவிக்கும் நிகழ்ச்சிகளை மட்டுமின்றித் தெருமுனைக் கூட்டங்களையும் மாவட்டம் எங்கும் நடத்திடத் தோழர்கள் முன் வரவேண்டும் என்றார். சேலம் பொதுக்குழுத் தீர்மானங் களை நடைமுறைப்படுததிட அனைவரும் ஒத்துழைத்திட வேண்டும் என்றார்.
அடுத்து, வருகை தந்த தோழர்கள் கழக வளர்ச்சிக்கான தங்களின் கருத்துகளை முன் மொழிந்தார்கள். இறுதியாக, மவட்டக் காப்பாளர் மா.பால்ராசேந்திரம், தந்தை பெரியார் அவர்களின் தன்னமின்றிப் பொதுநலன் கருதி இயக்கத்தைத் தொடங்கி ஆற்றிய மக்கள் பணியினையும், தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் இயக்கப் பொறுப்பினை வழங்கிய வரலாற்றையும், தொடர்ந்து ஓய்வின்றி ஆசிரியர் அவர்கள் ஆற்றிவரும் களப்பணிகளையும் எடுத்துக் கூறினார். தொய்வடைந்த நிலையில் இருப்பதாக எண்ணப்படும் தூத்துக்குடி மாவட்டக் கழகத்தைத் தெருமுனைக் கூட்டங்கள் தொடர்ந்து பல நடத்தி, புதிய உறுப்பினர்களைக் கழகத்திற்கு கொண்டு வர அனைவரும் ஒன்றிணைந்து செயல்படுவோம் என்று சிறப்புரையாற்றினார்.
இறுதியாக மாவட்ட இளைஞரணிச் செயலாளர் செ.நவீன்குமார் நன்றி கூற இரவு 7.45 மணிக்குக கூட்டம் நிறைவு பெற்றது. இக்கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் கோ.முருகன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் சொ.பொன்ராஜ், மாநகரத் தலைவர் த.பெரியார்தாசன், த.செல்வராஜ், தொழிலாளரணி மாவட்ட அமைப்பாளர் த.நாகராஜன், ஒன்றியச் செயலாளர் மு.பாலமுருகன், பகுத்தறிவாளர் கழகத் தோழர் கி.கோபால்சாமி, மய்யக் காப்பாளர் இராமசாமி, தோழர் கோபால் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்
19.7.2026 அன்று மாலை 6 மணிக்குப் பெரியார் மய்யத்தில் மாவட்டப் பகுத்தறிவாளர் கழகம் சார்பில் நடைபெறவிருக்கும் ‘ஆர்.எஸ்.எஸ். ஒரு ட்ரோஜான் குதிரை’ புததக அறிமுக விழாவினை அனைவரும் வருகை தந்து சிறப்புடன் நடத்துவதென முடிவு செய்யப்பட்டது.
30.7.2026 அன்று தூத்துக்குடி வருகை தரும் ‘நீட்’ எதிர்ப்பு இரு சக்கர வாகனப் பரப்புரைக் குழுவினரை வரவேற்று, சிறப்புடன் வழியனுப்புவதென முடிவு எடுக்கப்பட்டது.
26.7.2026 ஞாயிற்றுக்கிழமை மாலை முத்தையாபுரத்தில் முதல் தெருமுனைக் கூட்டத்தினைத் தொடங்குவது என முடிவெடுக்கப்பட்டது.
மாநில ஒருங்கிணைப்பாளரால் அறிமுகம் செய்யப்பட்ட புதிய பொறுப்பாளர்கள்.
மு.பாலமுருகன் – திராவிடர் கழக மாவட்ட இணைச் செயலாளர்
த.செல்வராஜ் – தூத்துக்குடி மாநகரத் திராவிடர் கழகச் செயலாளர்.
