தமிழ்நாட்டில் அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி அதிகரிக்கும்!

4 Min Read

இணையவழி கையெழுத்து இயக்கம்

சென்னை, ஜூலை 13- தமிழ்நாட்டில் மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்கள் தவிர்த்து பிற மாவட்டங்களில் இன்று (13.7.2026) முதல் 18ஆம் தேதி வரை வறண்ட வானிலை நிலவக்கூடும். அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை உயரக்கூடும்.

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மய்யம் வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

தமிழ்நாடு நோக்கி வீசும் மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு நிலவுகிறது. இதன் காரணமாக, இன்று (ஜூலை 13) முதல் 18ஆம் தேதி வரை மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். இதர தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பொதுவாக வறண்ட வானிலை நிலவக்கூடும். அவ்வப்போது ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் இன்று (13.7.2026) முதல் 16ஆம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை வழக்கத்தை விட ஓரிரு இடங்களில் 7 டிகிரி ஃபாரன்ஹீட் அளவு வரை உயரக்கூடும். தமிழ்நாட்டில் நேற்று (12.7.2026) காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின்படி அதிக

பட்சமாக கோவை மாவட்டம் சின்னக்கல்லாரில் 2 செமீ மழை பதிவாகியுள்ளது. இவ்வாறு வானிலை ஆய்வு மய்யத்தின் செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

 

ஆதிதிராவிடர் நல விடுதி மாணவர்களுக்கு

உதவித் தொகையை உயர்த்த அரசுக்கு தேசிய எஸ்சி ஆணையம் 7 நாள் கெடு!

செங்கல்பட்டு, ஜூலை 13- ஆதிதிராவிடர் நல விடுதிகளில் தங்கி பயிலும் மாணவர்களுக்கான பராமரிப்பு நிதி, உணவு, பிற செலவினங்களுக்கான உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்று அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், தேசிய எஸ்சி ஆணையம் 17.09.2025 அன்று ஆதிதிராவிடர, பழங்குடியினர் நலத்துறை செயலாளருக்கு முதல் கடிதம் அனுப்பியது.

பின்னர் 29.04.2026 அன்று நினைவூட்டல் கடிதமும் அனுப்பப்பட்டது. ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசிடம் இருந்து உரிய அறிக்கை கிடைக்கவில்லை என ஆணையம் தெரிவித்துள்ளது.

இதையடுத்து, 02.07.2026 தேதியிட்ட 2ஆவது நினைவூட்டல் கடிதத்தில், தேசிய எஸ்சி ஆணைய இயக்குநர் எஸ்.ரவிவர்மன், இந்த விவகாரத்தில் உடனடியாக நடவடிக்கை எடுத்து, கடிதம் கிடைத்த நாளில் இருந்து 7 நாட்களுக்குள் விரிவான அறிக்கையை சமர்ப்பிக்குமாறு தமிழ்நாடு அரசை கேட்டுக் கொண்டுள்ளார்.

தமிழ்நாட்டில் சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகளுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

சென்னை, ஜூலை 13- தமிழ்நாட்டில் நடப்புக் கல்வியாண்டிற்கான சித்தா, ஆயுர்வேதா, யுனானி மற்றும் ஓமியோபதி (AYUSH) ஆகிய மருத்துவப் பட்டப் படிப்புகளுக்கான சேர்க்கை செயல்முறைகள் இன்று முதல் தொடங்கியுள்ளன.

தகுதியுள்ள மாணவ, மாணவிகள் இன்று (13.7.2026) முதல் வரும் 31.7.2026 வரை இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

படிப்புகள்: பி.எஸ்.எம்.எஸ் (சித்தா), பி.ஏ.எம்.எஸ் (ஆயுர்வேதா), பி.யு.எம்.எஸ் (யுனானி), பி.எச்.எம்.எஸ் (ஓமியோபதி).

விண்ணப்பிக்கத் தொடங்கும் நாள்: 13.7.2026 (இன்று).

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31.7.2026

அதிகாரப்பூர்வ இணையதளம்: www.tnayushselection.org

குறிப்பு: விருப்பமுள்ள மாணவர்கள் கடைசி நேரப் பதற்றத்தைத் தவிர்க்க, தேவையான ஆவணங்களுடன் முன்னதாகவே இணையதளத்தில் விண்ணப்பிக்குமாறு அறிவுறுத்தப்படுகிறார்கள்.

தமிழ்நாட்டில் தொழுநோய் மருத்துவப் பயனாளிகள் எண்ணிக்கை அதிகரிப்பு

சிவகங்கை, ஜூலை 13- தமிழ்நாட்டில் தொழுநோய் மருத்துவப் பயனாளிகளின் எண்ணிக்கை 1,500-இல் இருந்து 2,500 ஆக அதிகரித்த நிலையில், அவற்றை கட்டுப்படுத்துவதற்குப் பதிலாக அந் நோய்க்கு சிகிச்சை அளிக்கும் மேற்பார்வையாளர் பணியிடங்களை நிரப்பாததால் சிக்கல் எழுந்துள்ளதாக சுகாதார ஆய்வாளர்கள் புகார் தெரிவித்தனர்.

தமிழ்நாட்டில் வட்டார அளவில் தொழுநோய் ஒழிப்புப் பணிகளை மருத்துவமில்லா மேற்பார்வையாளர்கள் மேற்கொண்டு வருகின்றனர். இதனால் தொழுநோய் பரவல் குறைந்தது. மேலும் சுகாதார ஆய்வாளர்களுக்குப் பதவி உயர்வு மூலம் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பணியிடங்கள் நிரப்பப்பட்டு வந்தன. காலப்போக்கில் அப்பணியிடங்களை நிரப்பாமல் விட்டனர். இதனால், தற்போது மாநிலம் முழுவதும் 408 பணியிடங்களில் 210 இடங்கள் காலியாக உள்ளன.

இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளாக தொழுநோய் மருத்துவப் பயனாளிகள் எண்ணிக்கை சத்தமில்லாமல் அதிகரிக்கத் தொடங்கி உள்ளதாக புகார் எழுந்துள்ளது. கடந்த 2020-2021-ஆம் ஆண்டு 1,500 ஆக இருந்த தொழுநோய் மருத்துவப் பயனாளிகள் எண்ணிக்கை தற்போது 2,500 ஆக அதிகரித்துள்ளது. இதுகுறித்து அச்சங்கத்தின் மாநிலப் பொதுச் செயலாளர் ப.குமார் கூறுகையில், தொழுநோய் பாதிப்பு 25 சதவீதம் அதிகரித்துள்ளது. இதில் மற்றவர்களுக்கு பரவக் கூடிய தொழுநோயும் உள்ளது.

இச்சூழலில் இந்நோயை வட்டார அளவில் கண்டறிந்து சிகிச்சை அளிக்கும் மருத்துவமில்லா மேற்பார்வையாளர் காலிப் பணியிடங்களை நிரப்ப தொடர்ந்து வலியுறுத்தி வந்தோம். ஆனால், தொழுநோய் ஒழிப்பில் தீவிரம் காட்டாமல்,தற்போது மருத்துவமில்லா மேற்பார்வையாளர் பணியிடங்களையே ஒழித்து வருகின்றனர். ஏற்கெனவே கூடுதலாக பணிப் பளுவில் இருக்கும் வட்டார சுகாதார மேற்பார்வையாளர், சுகாதார ஆய்வாளர்களையே அப்பணிகளையும் கவனிக்க பொது சுகாதாரத்துறை நெருக்கடி கொடுத்து வருகிறது.

தொழுநோய் ஒழிப்புப் பணியில் தொய்வுதான் ஏற்படும். சுகாதார ஆய்வாளர்களுக்கான பதவி உயர்வும் பாதிக்கப்படும். இதை கண்டித்து ஜூலை 16 முதல் பணி புறக்கணிப்புப் போராட்டம் நடத்த உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *