சென்னை, ஜூலை 10- எம்.எல்.ஏ.க்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல் கருநாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
தமிழ்நாடு எதிர்க்கட்சி தலைவர் உதயநிதி ஸ்டாலின் தனது சமூக வலைத்தள பதிவில் கூறியிருப்பதாவது: கருநாடகத்தில் இருந்து காவிரி நீரை திறந்து விட முடியாது என்றும், நீர் வேண்டும் என தமிழ்நாடு அரசு தரப்பில் யாரும் கேட்கவில்லை என்றும் அம்மாநில நீர்ப்பாசன அமைச்சர் ராமலிங்க ரெட்டி கூறியிருப்பது, நம் விவசாயிகள் மத்தியில் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
காவிரி நீர்
ஏற்ெகனவே பயிர்க்கடன் தள்ளுபடி என்ற பெயரில் விவசாயிகளை ஏமாற்றிய முதலமைச்சர் கருநாடக அமைச் சரின் இந்த பேச்சுக்கு என்ன பதில் வைத்திருக்கிறார்?. திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்தில், கடந்த 5 ஆண்டுகள் முழுவதும், சரியாக ஜூன் 12 அன்று மேட்டூர் அணையில் இருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விடப்பட்டது. ஆனால், இந்த ஆண்டு இன்று வரை மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படவில்லை.
மேகதாது அணை கட்டும் கருநாடகத் தின் முயற்சிக்கு எதிராக தமிழ்நாடு சட்டப்பேரவையில் அண்மையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது, அந்த தீர்மானத்தை தமிழ்நாட்டின் அனைத்துக்கட்சி பிரதிநிதிகளும் ஒன்றாகச் சென்று ஒன்றிய அரசிடம் வழங்க வேண்டும் என்று கூறியிருந்தேன். காவிரி மேலாண்மை வாரியத்தின் தீர்ப்பின்படி, ஜூன் மாதம் வழங்க வேண்டிய 9.91 டிஎம்சி தண்ணீரை கருநாடகம் திறக்காதது குறித்தும் பேசி இருந்தேன்.
இதற்கெல்லாம் முதலமைச்சர் பதில் ஏதும் சொல்லாத நிலையில், தற்போது ஜூலை மாதம் தர வேண்டிய 32 டிஎம்சி தண்ணீரையும் கருநாடகம் தர மறுக்கிறது. ஆளுங்கட்சியுடன் திடீர் கூட்டணி அமைத்திருக்கும் கட்சியின் ஆட்சி நடைபெறும் கருநாடகத்திடம் இருந்து, தமிழ்நாட்டுக்குச் சேர வேண்டிய தண்ணீரை முதலமைச்சர் கேட்டுப்பெற வேண்டும். சட்டமன்ற உறுப்பினர்களை வாங்குவதில் மட்டும் கவனம் செலுத்தாமல், கருநாடகாவிடம் இருந்து நமக்கு வர வேண்டிய தண்ணீரை வாங்குவதில் கவனம் செலுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
