நாம் போராடிக் காப்பாற்றி வந்துள்ள உரிமையை
நாமே விட்டுக் கொடுப்பது போல் ஆகிவிடும்
சென்னை, ஜூலை 9 பல்கலைக்கழகத் துணை வேந்தர்கள் தேடல் குழுவில் யு.ஜி.சி.யின் சார்பில் உறுப்பினரைச் சேர்ப்பது என்பது இதுவரை நாம் போராடிக் காப்பாற்றி வந்துள்ள உரிமையை நாமே விட்டுக் கொடுப்பது போல் ஆகிவிடும் என்று மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. கூறினர்.
பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேடல் குழுவில் ஒன்றிய அரசின் UGC உறுப்பினர்களையும் இணைக் கும் முயற்சிக்கு கண்டனம் தெரிவித்து கழக மாநிலங்களவை உறுப் பினர் பி.வில்சன் பேட்டியில் கூறியிருப் பதாவது:
தேடல் குழு
ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் மண்டியிட்டு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக்கிறது த.வெ.க. அரசு உயர் கல்வித்துறை அமைச்சர் விஸ்வநாதன், பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் தேடல் குழுவில் உள்ள உறுப்பினர்கள் எண்ணிக்கையை 3 லிருந்து 5 ஆக உயர்த்தப் போவதாகத் தெரிவித்திருந்தார். இது முற்றிலும் மாநில உரிமைக்கு எதிரானது.
பல்கலைக் கழகங்களை செங்கல், சிமெண்ட் வைத்து கட்டுவதோடு ஒரு மாநில அரசினுடைய அதிகாரம் முடிவடையாது. அந்தப் பல்கலைக் கழகத்தின் பணியாளர்கள், பேராசிரி யர்கள், துணை வேந்தர்கள் என அனைவரையும் நியமிக்க அரசியலமைப்பு ச் சட்டத்தில் மாநில அரசுக்கு என்று அதிகாரம் கொடுக்கப்பட்டுள்ளது.
1949 இல் அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கும் போது ஒன்றிய அரசிற்கு டிட்டர்மினேஷன் ஆஃப் எஜுகேஷன், ஸ்டாண்டர்ட் ஆஃப் எஜுகேஷன் சம்பந்தமாக மட்டும்தான் அதிகாரம் கொடுக்கப்பட வேண்டும் என்று அண்ணல் அம்பேத்கர் கூறி இருப்பார். அதை மீறி 2018 இல் கொண்டுவரப்பட்ட யுஜிசி ரெகுலேஷன் 7.3இன் மூலம் துணை வேந்தர் தேடல் குழுவில் யுஜிசி பிரதிநிதி இடம்பெற வேண்டும் என கூறப்பட்டது. அதை அப்போதைய அரசு ஏற்க மறுத்து அதற்கு எதிராக ஒரு அரசாணை வெளியிட்டது.
ஆளுநரின் தடை!
ஏற்ெகனவே நடைமுறையில் இருந்துவரும் 3 பேர் அடங்கிய குழுவில் ஒருவரை ஆளுநர் நியமிப்பார், ஒருவரை அரசு நியமிக்கும், ஒருவரை பல்கலைக் கழக சிண்டிகேட் நியமிக்கும். ஆனால் இந்த முறையை கடந்த ஆட்சியின் போது ஆளுநர் ஆர்.என்.ரவி செயல்படுத்த மறுத்து துணை வேந்தர்கள் நியமனத்திற்கு தடையாக இருந்தார்.
ஆளுநருக்கு எதிராகவும், யுஜிசி விதி 7.3க்கு எதிராகவும் தி.மு.க. அரசு சார்பில் வழக்கு போடப் பட்டு வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடந்து கொண்டிருக் கிறது. அதேபோல துணைவேந்தர் நியமனத்தை முதலமைச்சரே மேற்கொள்ளும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வந்தோம். அந்தச் சட்டத் திருத்தத் தோடு 10 மசோதாக்களை ஏற்காமல் ஆளுநர் ஆர்.என்.ரவி காலந்தாழ்த்திக் கொண்டு இருந்ததால் உச்சநீதிமன்றம் மூலம் அந்த 10 மசோதாக்களையும் சட்டமாக்கினோம். அது இந்தியாவே திரும்பிப் பார்க்கிற அளவிற்கு ஆளுநரிடன் அதிகாரத்தை வரைமுறை படுத்தி உச்சநீதிமன்றம் ஒரு சட்டமாக வெளியிட்டது.
ஒன்றிய அரசிடம்
மண்டியிடும் த.வெ.க. அரசு!
ஆனால் இன்று உயர்கல்வித்துறை அமைச்சர் 5 நாமினியில் ஆளுநர் பரிந்துரைக்கும் இரண்டு ‘நாமினி’ என்று சொல்கிறார். இன்னொரு ‘நாமினி’ யார் என்று அவர் மறைமுகமாக UGC நாமினியை கூறுகிறார். இந்த அரசு ஒன்றிய அரசுக்கு மண்டியிடப் பார்க்கிறார்களா.? இல்லை ஆளுநரின் அதிகாரம் பறிக்கப்படக் கூடாது என நினைக்கிறார்களா?
எதற்காக முதலமைச்சருக்கு இருக்க வேண்டிய அதிகாரத்தை எடுத்து ஆளுநருக்கு கொடுக்க வேண்டும். அதேபோல ஒன்றிய அரசு சொல்லும்படி யுஜிசியின் நாமினியை இதில் சேர்ப்பது மூலம் ஒன்றிய பா.ஜ.க. அரசிடம் மண்டியிட்டு மாநில உரிமைகளை விட்டுக்கொடுக் கிறது இந்த அரசு. மாநில அரசின் உரிமைகளை விட்டுக் கொடுக்க சொல்லி கூட் டணி ஆட்சியில் பங்கு பெற்றுள்ள காங்கி ரஸின் ராகுல் காந்தி வலியுறுத் தினாரா?
ஒன்றிய அரசின் அதிகாரம்!
இது நம்முடைய மாநில உரிமை. இதை விட்டு விடக்கூடாது. கடந்த அய்ந்து ஆண்டுகளாக மாநில உரிமைக்காக உயர்நீதிமன்றத்திலிருந்து உச்ச நீதிமன்றம் வரைக்கும் சென்று நாங்கள் வென்று வந்திருக்கிறோம். அதற்கு மாறாக யூஜிசி உறுப்பினர்களை குழுவில் சேர்ப்பது மூலம் நமது பல்கலைக் கழகங்களின் அதிகாரம் ஒன்றிய அரசு வசம் போய்விடும்.
கடந்த திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் கூட இவர்கள் சொல்வதைப் போல 5 நபர்களை குழுவில் வைத்துக் கொண்டு துணை வேந்தர்களை நியமித்து இருக்கலாம். ஆனால் மாநில உரிமையை விட்டுக் கொடுப்பது என்பது நம் மக்களின் உரிமையை விட்டுக் கொடுப்பது போல.
எனவே எக்காலத்திலும் இந்த யுஜிசியின் நாமினியை செலக்சன் பேனலில் சேர்க்கவே கூடாது. சேர்த் தால் அரசியலமைப்புச் சட்டம் கொடுத்த மாநில உரிமை, அண்ணல் அம்பேத்கர் அவர்கள் மாநில மக்களுக்கு கொடுத்த உரிமை, நாம் இதுவரை போராடி காப்பாற்றி வந்துள்ள உரிமை ஆகியவைகளை நாமே விட்டு கொடுப்பது போல ஆகிவிடும்.
இவ்வாறு மூத்த வழக்குரைஞர் பி.வில்சன் எம்.பி. கூறினார்.
