ஓசூர், ஜுலை 9 மேகதாது அணை விவகாரம் தொடர்பாக, தமிழ்நாடு மற்றும் கருநாடக மாநில எல்லையில் ஜூலை 15-ஆம் தேதி இருதரப்பினரும் போராட்டங்களை அறிவித்துள்ளதால், எல்லைப் பகுதிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாதுவில் அணை கட்ட கருநாடக அரசு நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழ்நாடு விவசாயிகள் பல்வேறு கட்டப் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
தமிழ்நாடு அரசியல் கட்சிகளின் தலைவர்களும் தொடர்ந்து பல்வேறு கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்.
இதன் ஒருபகுதியாக, கருநாடக அரசை கண்டித்து, ஜூலை 15-ஆம் தேதி தமிழ்நாட்டு விவசாயிகள் சங்கம் சார்பில் ஓசூர் அருகே தமிழ்நாடு எல்லையில் இருந்து மேகதாது வரை பேரணி நடத்தப்படும் என, சங்கத்தின் மாநிலத் தலைவர் வேலுசாமி அறிவித்துள்ளார்.
இதற்கிடையில், அதே நாளில் கருநாடக மாநில எல்லைப் பகுதியில், மேகதாதுவில் அணை கட்ட வலியுறுத்தியும், தமிழ் திரைப்படங்களை திரையிட எதிர்ப்பு தெரிவித்தும் முழு கடையடைப்பு போராட் டம் நடத்தப்படும் என கன்னட சலுவாலி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராஜ் அறிவித்துள்ளார். ஒரே நாளில் இரு மாநிலங்களின் எல்லைப் பகுதிகளிலும் அந்நதந்த மாநில அமைப்புகள் போராட்டங்களை அறிவித்துள்ளதால், அங்கு கூடுதல் போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
