திருச்சி, ஜூலை 9- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு உயிரியல் பாடப் பிரிவில் பயிலும் மாணவி செ.கிருத்திகா, தனது 17ஆவது வயதிலேயே ‘உண்மையில் அது ஒரு பொய்’ எனும் விறுவிறுப்பான திரில்லர் நாவலைப் படைத்து இலக்கிய உலகில் தடம் பதித்துள்ளார்.
இளம் வயதிலேயே சமூகம் சார்ந்த சிக்கல்களைக் கூர்மையாகக் கவனிக்கும் கிருத்திகா, இக்கதையில் குடும்பச் சூழல், தந்தையின் செயல்பாடுகள், தாயின் மனவலி மற்றும் மனநலச் சவால்கள் ஆகியவற்றை மய்யப்படுத்தியுள்ளார்.
‘பல்ப் பிக்சன்’ பாணியில், எதிர்பாராத திருப்பங்களைக் கொண்டுள்ள இந்த நாவல், ஒரு திரைப்படத் திரைக் கதைக்கு இணையான விறுவிறுப்புடன் வாசகர்களை ஈர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
மாணவியின் இந்த இலக்கியச் சாதனை குறித்து, பள்ளியின் முதல்வர் முனைவர் க.வனிதா கூறுகையில், “இளம் மாணவர்களிடையே எழுத்தார்வத்தைத் தூண்டுவதும், சமூகச் சிந்தனைகளை இலக்கியத்தின் வழி வெளிப்படுத்துவதும் பாராட்டத்தக்கது.
கிருத்திகாவின் இந்த முயற்சி, சக மாணவர்களுக்கும் மற்ற இளம் படைப்பாளிகளுக்கும் ஒரு சிறந்த முன்மாதிரி” என்று பாராட்டி மகிழ்ந்ததோடு, பள்ளியின் காலை கூட்டத்தில் மாணவியின் எழுத்தார்வத்தை எடுத்துரைத்து மாணவர்களுக்கு உத்வேகமூட்டினார்.
மாணவியின் இந்த அரிய முயற்சியைப் பள்ளித் தாளாளர், ஆசிரியப் பெருமக்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் உள்ளிட்டோர் பெருமிதத்துடன் பாராட்டி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.
