நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரை

7 Min Read

* நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உயர் பதவிகளில் ‘அவாள்’களை நியமித்து, நம்மவர்களை சாதாரண கூலித் தொழில்களுக்கு மட்டும் எடுத்தார்கள்!
* அதனைக் கண்டித்து முதன்முதலில் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார்!
‘‘நெய்வேலியா, பூணூல் வேலியா?’’ என்ற தலைப்பில் கண்டித்து எழுதியது ‘விடுதலை’ ஏடு!
திராவிடர் கழகம் என்பது அன்றும் – இன்றும் – என்றும் – உங்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஓர் இயக்கம்!

நெய்வேலி, ஜூலை 9 நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தில் உயர் பதவிகளுக்கு எல்லாம், நம்மவர்களை எடுக்காமல், சாதாரண கூலித் தொழில்களுக்கு மட்டும் எடுத்தார்கள். எழுத்துப் பணிகளிலிருந்து, அதிக சம்பளம் பெறக்கூடிய பதவிகளுக்கெல்லாம் ‘அவாள்’  உயர்ஜாதிக்காரர்களை வைத்துக் கொண்டார்கள். அதனைக் கண்டித்து முதன்முதலில் சமூகநீதிக்காகக் குரல் கொடுத்தவர் தந்தை பெரியார். முதன்முதலில் ‘‘நெய்வேலியா,  பூணூல் வேலியா?’’ என்ற தலைப்பில் கண்டித்து எழுதியது ‘விடுதலை’ ஏடு. திராவிடர் கழகம் என்பது அன்றும் – இன்றும் – என்றும் – உங்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஓர் இயக்கம் என்றார் திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்துத் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி கண்டன உரை

கடலூர் மாவட்டத் திராவிடர் கழகம் சார்பில், நெய்வேலி நகரம் முக்கிய கடைவீதியில் – காமராஜர் சிலை அருகில்  7.7.2026 அன்று  காலை 10.30 மணிக்கு, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்குத் தாரை வார்க்கப்படுவதைக் கண்டித்து நடைபெற்ற மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை வகித்த திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் கண்டன உரையாற்றினார்.

அவரது கண்டன உரை வருமாறு:

‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்கு என்றைக்கும் கெட்டிக்காரன்!’

மிகக் குறுகிய காலத்தில், ஏறத்தாழ ஏழு நாள்க ளுக்குச் சுற்றுப்பயணத்தை முடித்து கடந்த 30 ஆம் தேதியன்று சென்னையில் அறிக்கை எழுதி, வெளியூரில் ஒன்றாம் தேதி இந்தச் செய்திக் கிடைத்த நேரத்தில், ஒரு 6 நாள்கள் இடைவெளியில்,  திரா விடர் கழகம், ‘கருப்புச் சட்டைக்காரன் காவலுக்கு என்றைக்கும் கெட்டிக்காரன்’ என்ற மொழிக்கேற்ப, இந்த அறப்போராட்டத்தை அறிவித்து, நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தைத் தனியார் மயமாக்கிட, ஒன்றிய பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். அரசினுடைய முயற்சியைத் தடுத்து நிறுத்துவதற்காகத் திராவிடர் கழகத்தின் சார்பாக நடைபெறக்கூடிய இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தினைச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய கழகப் பொறுப்பாளர்களே, மகளிர் பொறுப்பாளர்களே, தாய்மார்களே, தொ.மு.ச. நிர்வாகிகளான நண்பர்களே,  இவ்வார்ப்பாட்டத்திற்கான செய்திகளைச் சேகரிக்க வந்திருக்கக்கூடிய ஊடகப் பெருமக்களான சகோத ரர்களே, கட்சிகளுக்கு அப்பாற்பட்ட பொதுநலத் தொண்டர்களான தோழர்களே, உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கத்தினைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

உங்களுக்கு என்னுடைய
தலைதாழ்ந்த நன்றி!

ஒரு குறுகிய காலத்தில், இவ்வார்ப்பாட்டத்தினை ஏற்பாடு செய்திருக்கிறார்கள். கடுமையான கொளுத்தும் வெயில். கொஞ்ச நேரத்திற்கு முன்பு வரை, இந்த ஒலிபெருக்கி அங்கே இருந்தது. இந்த ஒலிபெருக்கியைத் தொட முடியவில்லை, அவ்வளவு சூடாக இருக்கிறது. ஆனால், வெயிலையும் பொருட்படுத்தாமல், நீங்கள் எல்லோரும் வந்திருக்கிறீர்கள். அதற்காக உங்களுக்கு என்னுடைய தலைதாழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடமை உணர்வு எப்படிப்பட்டது என்பதை நமது அறிவாசான் தந்தை பெரியார் அவர்கள் நமக்கு வழிகாட்டினார்.

‘‘குடிசெய்வார்க் கில்லை பருவம் மடிசெய்து

மானங் கருதக் கெடும்’’ என்றார்.

கடமைதான் நமக்கு
மிக முக்கியம்!

கொளுத்தும் வெயிலா? அல்லது கொட்டும் மழையா? அல்லது இடி இடித்ததா? அல்லது மிகப்பெரிய புயலா? இவையெல்லாம் நமக்கு இரண்டாம்பட்சம்தான். கடமைதான் நமக்கு மிக முக்கியமானது என்று காட்டுவதுதான் நம்முடைய வேலை என்று சொல்லக்கூடிய அளவிற்கு, இங்கே வருகை தந்துள்ள தாய்மார்கள், சகோதரிகள், மகளிரணித் தோழர்கள், ஒத்தக் கருத்துள்ள நண்பர்கள் எல்லோரையும் வருக, வருக என்று சொல்லி, என்னுடைய உரையை நான் தொடங்குகின்றேன்.

இங்கே முழங்கப்பட்ட முழக்கங்களே, இந்தப் போராட்டத்தினுடைய நோக்கம் என்ன? ஏன் இந்த அறப்போராட்டத்தை நாங்கள் அறிவிக்கவேண்டும்? என்பதை மிகத் தெளிவாக இங்கே அருமையாக எடுத்துச் சொன்னார்கள் நம்முடைய புகழேந்தி, சந்திர சேகரன், அரங்க.பன்னீர்செல்வம், தண்டபாணி மற்றும் நண்பர்கள் எல்லோரும் சொன்னார்கள்.

குறிப்பாக, நம்முடைய இள.புகழேந்தி அவர்களும், பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் அவர்களும் இந்தப் போராட்டத்தினுடைய நோக்கத்தினை விரிவாக எடுத்துச் சொன்னார்கள்.

இதுகுறித்த அறிக்கையை ‘விடுதலை’யில் நான் ஏன் எழுதினேன் என்பதை நீங்கள் நன்றாக எண்ணிப் பார்க்கவேண்டும்

முந்திக்கொண்டு போராட்டக் களத்தில்
நிற்பது நம்முடைய வழக்கம்!

நெய்வேலி நிலக்கரி நிறுவனத்தின் பங்குகள் தனியாருக்கு விற்கப்படும் செய்தியை அறிந்தவுடன், அந்த அறிக்கையை எழுதினோம். எதையும் முந்திக்கொண்டு போராட்டக் களத்தில் நிற்பது நம்முடைய வழக்கம். அந்த வகையில்தான், தோழர்களுக்கு இடையறாது, 4 ஆம் தேதியன்று சேலத்தில் பொதுக்குழு, அதற்கு முன்பு பல நிகழ்ச்சிகள் என்றிருந்தாலும், நெய்வேலியில் நடைபெறுகின்ற இவ்வார்ப்பாட்டத்திற்கு, அரியலூர், கும்பகோணம், விருத்தாசலம், சிதம்பரம், திண்டிவனம், புதுச்சேரி, கடலூர், விழுப்புரம், மயிலாடுதுறை, கள்ளக்குறிச்சி இன்னும் பல மாவட்டங்களிலிருந்தும் வந்திருக்கிறார்கள். சகோதரிகள் வெயிலையும் பொருட்படுத்தாமல், இங்கே அமர்ந்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டிற்குப்
பெருமை என்பதால்..

ஏன் இந்தப் போராட்டம்? இதனுடைய வரலாறு என்ன? நெய்வேலியில், நம்முடைய தோழர்கள், ஏழை, எளிய விவசாயிகள், இந்தப் பகுதியில் அவர்களுக்கு வாழ்வாதாரமாக இருக்கக்கூடிய நிலங்களை வைத்திருந்தார்கள். அந்த நிலங்களையெல்லாம் நெய்வேலி நிலக்கரி நிறுவனம் அமைவதற்காகக் கொடுத்தார்கள். எந்தவிதமான எதிர்ப்பையும் காட்டாமல் அளித்தார்கள். ஒரு தொழில் வளரவேண்டும்; தொழில் வளர்ந்தால், வேலை வாய்ப்புப் பெருகும் என்ற நல்லெண்ணத்தினாலும், தமிழ்நாட்டிற்குப் பெருமையாக இருக்கும் என்பதற்காகவும், குறைந்த விலைக்கு தங்களுடைய நிலங்களைக் கொடுத்தார்கள்.

இன்றைக்கு அந்த நிலங்கள் அவர்களிடமிருந்தி ருந்தால், எத்தனையோ மடங்கு விலை உயர்ந்திருக்கும்; அவர்களுடைய பொருளாதார நிலை எந்த அளவிற்கு உயர்ந்திருக்கும் என்பதைச் சிந்தித்துப் பாருங்கள் நண்பர்களே! அதையெல்லாம் தியாகம் செய்தார்கள்.

நெய்வேலி நிறுவனம், கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை!

இந்த நெய்வேலி நிறுவனம், ‘‘இடங்கள் கொடுத்த அத்துணை பேருக்கும் வேலை கொடுப்போம்’’ என்று சொன்ன வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை. அரசியல்வாதிகள் கொடுத்த வாக்குறுதிகளை நிறை வேற்றுகிறார்களா? என்று நீங்கள் கேட்கலாம்.

ஆனால் அதைவிட, ஒன்றிய அரசு சார்பாக நடக்கக்கூடிய நிறுவனமான, பொதுத் துறை நிறு வனமான, அதிலும் லாபத்தோடு நடைபெறக்கூடிய நவரத்தினங்களில் ஒன்று என்று கருதப்படுவது, நெய்வேலி நிலக்கரி நிறுவனமாகும். இந்நிறுவனத்தில், சொந்த மண்ணில் இருப்பவர்களுக்கு வேலை இல்லை. ஆனால், வந்தவர்களுக்கெல்லாம் வேலை கொடுக்கிறார்கள். வந்தவர்களுக்கெல்லாம் இங்கு வரவேற்பு. நாங்கள் வரக்கூடாது என்று சொல்ல மாட்டோம். எல்லோரும் ஒன்றுதான்.

இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அமைதிப்பூங்கா!

ஆனால், பழமொழி ஒன்று உண்டு  – ‘தாயும் – சேயும் ஒன்றென்றாலும், வாயும், வயிறும் வேறு.’’ என்னதான் ஒருமைப்பாடு பேசினாலும், ஏன், இந்த நவரத்தினங்களைத் தனித்தனியாகப் பிரித்து வைத்திருக்கின்றோம். ஏன், ஒரே பகுதியில் வைக்கக்கூடாதா? ஏன் உத்தரப்பிரதேசத்திலே தொடங்கக் கூடாதா? என்று கேட்டால், அங்கே எந்த வசதியும் கிடையாது என்பது ஒரு பக்கம் – இதுபோன்ற ஓர் அமைதியான சூழல் – இந்தியாவிலேயே தமிழ்நாடுதான் அமைதிப்பூங்கா – மதக்கலவரங்கள் கிடையாது, ஜாதிக் கலவரங்கள் கிடையாது – சுமூகமாக நடத்த முடியும்.

இங்கே, நெய்வேலி நிலக்கரி நிறுவனம் மிகச் சிறப்பாகத் தொடங்கப்பட்டது. ஆனால், கரையான் புற்றெடுக்க, கருநாகம் உள்ளே நுழைந்ததுபோல, பார்ப்பனர்களே முதலில் உள்ளே நுழைந்தார்கள். பெரிய பெரிய அதிகாரிகள் என்று அவர்கள் உள்ளே நுழைந்தனர். பெரிய பெரிய பதவிக்கு எல்லாம், நம்மவர்களை எடுக்காமல், சாதாரண கூலித் தொழில்களுக்கு மட்டும் நம்மவர்களை எடுத்தார்கள். எழுத்துப் பணிகளிலிருந்து, அதிக சம்பளம் பெறக்கூடிய பதவிகளையெல்லாம் ‘அவாள்’ வைத்துக் கொண்டார்கள், உயர்ஜாதிக்காரர்கள்.

திராவிடர் கழகம் என்பது அன்றும் இன்றும் என்றும் உங்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஓர் இயக்கம்!

அப்பொழுது தந்தை பெரியார் அவர்கள் தான், முதல் முதலில் சமூகநீதிக் குரல் கொடுத்தார். இந்த இயக்கத்தின் பெருமை அதுதான். மற்றவர்கள் அதைப் பற்றி பேசுவதற்குப் பயந்தார்கள்.  முதல் முதலில் ‘விடுதலை’ ஏடு – இந்த ‘விடுதலை’ ஏடு தான் கண்டித்து எழுதியது தோழர்களே! திராவிடர் கழகம் என்பது அன்றும் – இன்றும் – என்றும் உ–ங்களின் உரிமைகளைப் பாதுகாக்கக் கூடிய ஓர் இயக்கம். அப்போது முதன் முதலில் ‘விடுதலை’யில் ஒரு பட்டியல் வெளியிட்டோம்.  அது ஒரு கலக்குக் கலக்கிற்று.

‘‘நெய்வேலியா,  பூணூல் வேலியா?’’

அது என்னவென்றால், ‘‘நெய்வேலியா,  பூணூல் வேலியா?’’ என்ற தலைப்பில், ஒவ்வொரு அதிகாரிகள் பெறுகின்ற கொள்ளை சம்பளம்; அவை அத்தனையும் எடுத்து ‘விடுதலை’யில் நான்தான் வெளியிட்டேன். அப்பொழுது நான் ‘விடுதலை’க்கு ஆசிரியர் ஆகிவிட்டேன்.

பெரிய அளவிற்கெல்லாம் நுண்ணறிவாளர்களை வைத்து, இன்டெலிஜன்ஸ் மூலமாகத் தேடினார்கள். ‘‘இந்தப் பட்டியல் உங்களுக்கு எப்படி கிடைத்தது?’’ என்று கேட்டார்கள்.

நான் உடனே சொன்னேன், ‘‘எப்படி கிடைத்தது என்று பார்க்காதீர்கள்; ஏன் இந்த நிலை என்பதற்குப் பரிகாரம் தேட ஆரம்பியுங்கள். நீதிமன்றத்திற்குப் போகிறீர்களா? அதனைச் சந்திக்க நாங்கள் தயாராக இருக்கிறோம்’’ என்றெல்லாம் சொன்ன பிறகுதான், கொஞ்சம் கொஞ்சமாக நிலைமை அங்கே மாறியது.

எல்லாமே தனியார் மயம்,
தனியார் மயம், தனியார் மயம்!

எத்தனையோ தோழர்கள் அதற்கு ஒத்துழைத்தார்கள். அப்புறம்தான் அந்த நிறுவனம் வளர்ந்தது. நம்மு டைய பிள்ளைகளும் வளர்ந்தார்கள். உடனே நல்ல மருத்துவமனை, நல்ல பள்ளிக்கூடம் இது எல்லாமே அங்கே வந்தது.  இங்கே நண்பர்கள் சொன்ன மாதிரி, இந்த அற்புதமானப் பள்ளிக்கூடம். நெய்வேலி மருத்துவமனையில், நல்ல உயர்ந்த, சிறந்த மருத்துவர்களை எல்லாம் நியமித்தார்கள். இன்றைக்கு நான் கேள்விப்பட்டேன், அதுவும் தனியார் மயமாகிவிட்டது என்று. எல்லாமே தனியார் மயம், தனியார் மயம், தனியார் மயம்!

(தொடரும்)

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *