திருவனந்தபுரம், ஜூலை 8- கேரளத்தின் வயநாடு அருகிலுள்ள கல்லாடி சுரங்கப் பாதை திட்டப் பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டது. நிலச்சரிவில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். நிலச்சரிவைத் தொடர்ந்து, கேரள முதலமைச்சர் வி.டி.சதீசன் அமைச்சர்கள் மற்றும் உயர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார். அப்போது, மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை போர்க்கால அடிப்படையில் மேற்கொள்ளுமாறு உத்தரவிட்டார். அமைச்சர்கள் ஏ.பி. அனில் குமார் மற்றும் டி. சித்திக் ஆகியோரை நேரில் சென்று பார்வையிடுமாறும் அறிவுறுத்தினார்.
இதுகுறித்து அமைச்சர் டி. சித்திக் கூறும்போது, “இது இயற்கையான நிலச்சரிவு அல்ல, அதிகாரிகளின் அலட்சியத்தால் மனிதனால் உருவான நிலச்சரிவு. இந்த இடத்தில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக மாவட்ட ஆட்சியர் கொங்கன் ரயில்வேக்கு எழுத்துப்பூர்வமாக எச்சரித்தும் அவர்கள் நடவடிக்கை எடுக்கவில்லை. மேலும், கோழிக்கோடு மற்றும் வயநாட்டிலிருந்து கூடுதலாக 60 என்டிஆர்எப் வீரர்கள் நிகழ்வு இடத்துக்கு அனுப்பப்பட்டுள்ளனர்” என்றார்.
கல்லாடி பகுதியில் நிலச்சரிவு ஏற்பட்டதை அடுத்து, இந்திய வானிலை ஆய்வு மய்யம் (அய்எம்டி) வயநாடு மற்றும் கோழிக்கோடு மாவட்டங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுத்துள்ளது. மலப்புரம், கண்ணூர், காசர்கோடு ஆகிய மாவட்டங்களுக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பகல் நேரத்தில் மானந்தாவடியில் 64 மி.மீ. மழையும், வைத்திரியில் 123 மி.மீ. மழையும் பதிவாகியுள்ளதாக அய்எம்டி தெரிவித்துள்ளது.
அரசு பாலிடெக்னிக்குகளில்
ஜூலை 31ஆம் தேதி வரை மாணவர் சேர்க்கை!
சென்னை, ஜுலை 8– அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் ஜூலை 31ஆம் தேதி வரை நேரடி மாணவர் சேர்க்கை நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் அறிவித்துள்ளது.
அனைத்து அரசு பாலிடெக்னிக் கல்லூரிகளில் நடப்பு கல்வி ஆண்டில் (2026-2027) முதலாம் ஆண்டு மற்றும் நேரடி 2ஆம் ஆண்டு (லேட்ரல் என்ட்ரி) மற்றும் பகுதி நேர டிப்ளமா படிப்புக்கான நேரடி மாணவர் சேர்க்கை ஜூலை 31 வரை நடைபெறும் என தொழில்நுட்பக் கல்வி இயக்குநர் பி.ரத்தினசாமி தெரிவித்துள்ளார்.
நேரடி சேர்க்கை அறிவிக்கப்பட்டிருப்பதால் தகுதியுடைய மாணவர்கள் சம்பந்தப்பட்ட அரசு பாலிடெக்னிக் கல்லூரிக்கு தேவையான கல்விச் சான்றிதழ்களுடன் சென்று உடனடி சேர்க்கை பெறலாம். இதற்கென தனியாக விண்ணப்பிக்க வேண்டிய அவசியமில்லை.
