ஹிந்துக்களின் நம்பிக்கையைப் பயன்படுத்தி பார்ப்பனக் கும்பல் அடித்த கொள்ளைகள் கணக்கில் அடங்காதவை, வரலாறு எங்கும் மன்னர்களை கைகளில் போட்டுக்கொண்டு மன்னரின் கண் முன்பாகவே செல்வங்களை பரிகாரம் என்ற பெயரில் அள்ளிச்சென்ற வரலாற்றுக் கல்வெட்டுகள், செப்பு எழுத்துகள் இன்றும் சாட்சியாக உள்ளன. இவை செவிவழிக்கதைகளோ அல்லது புராணக் கட்டுக்கதைகளோ அல்ல.
இவை எல்லாம் மடமையில் மக்கள் ஊறிக்கிடந்த காலத்தில் நடந்தவை எனலாம். ஆனால் இந்திய விடுதலைக்குப் பிறகு நமது அரசமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்தது. அதன்படி அந்தச் சட்டமே முதன்மை என்றாகிப் போனது. ஆங்கிலேயர் ஆட்சியில் கூட மனுவைக்காட்டி சட்டம் பேசியது பார்ப்பனக் கூட்டம். அண்ணல் அம்பேத்கரின் அரசமைப்புச் சட்டத்தால் அவர்களின் கொள்ளை வழிகள் அனைத்துமே முடக்கப்பட்டன. இருப்பினும் கோவில் கொள்ளைகள் பார்ப்பனக் கும்பலால் இன்றும் தொடர்கதையாகித் தானே உள்ளன. அதில் தற்போது நாட்டையே அதிர்வலைக்குள் தள்ளிய ராமன் கோவில்தான் ‘லேட்டஸ்ட்!’
முதலில் ரூ.7 கோடிக்கு முறைகேடு என்றார்கள், பிறகு விசாரணையில் தெரியவந்ததோ, அந்த ரூ.7 கோடி ஒருநாள் கொள்ளையடிக்கப்பட்டதில் நான்கில் மூன்று பாகம் என்றார்கள். அண்மையில் ‘பாரத் சமாச்சார்’ என்ற ஹிந்தி நாளிதழ் புலனாய்வு செய்து வெளியிட்ட செய்திகளின்படி சுமார் ரூ.5,000 கோடிகளுக்கு மேல் கொள்ளை போனதாகத் தெரிகிறது.
5 ஆண்டுகளுக்கு முன்பு ஆட்டோ ஓட்டிய ஒருவர் கோவில் பணம் என்னும் கமிட்டியில் சேர்கிறார். அவர் அவரது தம்பி, அவரது மைத்துனர், பெரியப்பா போன்றோர் பணம் என்னும் பணியில் சேர்கின்றனர். அதே போல் மிஸ்ராவோ தனது தந்தை, மாமனார், மாமனாரின் சகோதரன், மைத்துனர் என குடும்பத்தில் மொத்தம் 12 பேரை பணம் என்னும் பணியில் அமர்த்தியுள்ளார்.

இப்போது அயோத்தி விமான நிலையத்திற்கு அருகிலேயே ரூ.4,500 கோடி மதிப்பு கொண்ட பெரிய அய்ந்து நட்சத்திர விடுதி கட்டியுள்ளனர். இவை எல்லாம் எப்படி நடந்தது என்று கேட்டால் ராமன் கோவிலுக்கு பிரான் பிரதிஷ்டாவிற்கு வராதவர்களும், ராமரின் புகழைக் கெடுக்க நினைப்பவர்களும் இவ்வாறான புகாரைக் கொடுத்து ராம பக்தர் களின் நம்பிக்கையை குலைத்து பாவம் செய்கின்றனர்” என்று உத்தரப் பிரதேச முதலமைச்சர் சாமியார் ஆதித்யநாத் மேடைபோட்டுப் புலம்புகிறார்
இதோ மேலும் சில கோவில் கொள்ளைகள்
கேதார்நாத்
கேதார்நாத் கோவிலின் கருவறைச் சுவர்களில் பதிக்கப்பட்டிருந்த சுமார் 23,000 கிலோ செப்புத் தகடுகளுக்குப் பதிலாக, தங்கத் தகடுகள் (Gold Plating) பதிக்கும் பணி 2022-ஆம் ஆண்டு நடைபெற்றது. மும்பையைச் சேர்ந்த ஒரு தொழிலதிபர் இந்தத் தங்கத்தை நன்கொடையாக வழங்கியிருந்தார்.
ஆனால், 2023-ஆம் ஆண்டு கேதார்நாத் கோவிலின் மூத்த அர்ச்சகர் சந்தோஷ் திரிவேதி ஒரு காட்சிப் பதிவை வெளியிட்டார். அதில், “கருவறையில் பதிக்கப்பட்டது தங்கம் அல்ல, அது பித்தளை. இதில் சுமார் 125 கோடி ரூபாய் அளவிற்குப் பெரும் ஊழல் நடந்துள்ளது” என்று குற்றம் சாட்டினார். 2024இல் ஜூலை மாதத்தில், ஜோதிர்மடத்தின் சங்கராச்சாரியாரான சுவாமி அவிமுக்தேஸ்வரானந்த் சரஸ்வதி இந்த விவகாரத்தை மீண்டும் எழுப்பினார். செய்தியாளர்களிடம் பேசும்போது, டில்லியில் அடையாள கேதார்நாத் கோவில் கட்டுவதற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்.
இந்தத் திருட்டின் மூளையாக செயல்பட்டவர் என்று கூறப்படும் சம்பத் ராய் முன்னாள் ஆர்.எஸ்.எஸ். அதிமுக்கிய நபர், மோடிக்கு மிகவும் நெருக்கமானவர், மோடியின் சார்பில் அவருக்கு பொருளாதார மற்றும் அரசியல் ஆலோசகராக நியமிக்கப்பட்டவர். 2017ஆம் ஆண்டுவரை பிரதமர் அலுவலகத்தில் பிரதமருக்கு அடுத்த இடத்தில் இருந்தவர்.
இவரிடம் ஓட்டுநராக இருந்தவர் டினு யாதவ். இவரது சகோதரர்கள் ஆட்டோ ஓட்டுநர்கள் மற்றும் கான்பூர், லக்னோ போன்ற நகரங்களில் சாலைகளில் பாணிபூரி விற்பவர்கள்.
டினுயாதவ், சம்பத் ராயால் நியமிக்கப்பட்ட காணிக்கைக் கணக்கு வழக்கைப் பார்க்கும் சுபாஷ் சிறீவாஸ்தவா என்பவரோடு இணைந்து – இரண்டு வழிகளில் ரூ.500 கோடிக்கு மேல் கொள்ளையடித்துள்ளார்கள். இந்த சிறீவாஸ்தவா தனது உறவினர்கள் 8 பேரை கோவிலிலும், பணம் எண்ணும் பணியிலும் நியமிக்கிறார். இவர்கள் இருவரும் சேர்ந்து கோயிலுக்குள் பல இடங்களில் போலி நன்கொடை கவுண்ட்டர்களை உருவாக்கி நெருங்கிய உறவினர்ளை அதில் அமர வைத்தனர். பக்தர்கள் தங்கம் அல்லது வெள்ளியை நன்கொடையாக அளிக்கும் போது கணக்கில் வராத போலி ரசீதுகள் அவர்களுக்கு வழங்கப்பட்டன.
பணக்கட்டுகளில் திருட்டு: தினமும் வரும் நன்கொடைகள் ரூ.500 நோட்டுகள் கொண்ட கட்டுகளாக ஒரு அட்டைப்பெட்டியில் 100 கட்டுகள் என வைத்து வங்கிகளுக்கு மாற்றப்படும்.
ஆனால், கோயிலில் பணக்கட்டுகள் கட்டப்படும் போது 100 நோட்டுக் கட்டுகளுக்குப் பதிலாக 200 நோட்டுக் கட்டுகளை டினு யாதவ் உள்ளே வைப்பார். இந்தப் பணக்கட்டுகள் வங்கிக்குச் சென்றதும், அங்கு எண்ணும் பொறுப்பில் இருந்த சுபாஷ் சிறீவஸ்தவா அந்த உபரியாக உள்ள 100 நோட்டுக்கட்டுகளை மட்டும் தனியாக எடுத்துக்கொள்வார். பணக்கட்டுகளின் எண்ணிக்கை மட்டும் டேலி செய்து பார்க்கப்பட்டதால், இந்தத் திருட்டு பல ஆண்டுகளாக வெளியே தெரியவில்லை.
மேலும் 500 ரூபாய் நோட்டுக் கட்டுகளில் இருந்து பல 500 ரூபாய்களை எடுத்து அதையும் தனக்குக் கூலியென தனியாக எடுத்துக்கொள்வார். அதாவது 5000 மதிப்புள்ள ரூபாய் நோட்டுக் கட்டுகளில் சுமார் 1000 ரூபாய் அல்லது அதற்கு மேலும் அந்த வங்கி ஊழியர் எடுத்துக்கொள்வார். அவரே வங்கியில் பணம் எண்ணும் இயந்திரத்தைக் கையாளுவதால் கட்டுகள் குறைவாக இருந்தபோது சரியாக 50,000 என்று காட்டும்படி ‘செட்’ செய்துவிடுவார். மாதம் வெறும் ரூ. 8000 ஆயிரம் முதல் 10,000 மட்டுமே சம்பாதிக்கும் டினு யாதவ் குடும்பத்தினர் சொந்தமாக 5 நட்சத்திர ஓட்டல், ஹெலிகாப்டர் பயணம், வெளிநாட்டுக் கார்களோடு வலம் வருகிறார்கள். டினு யாதவ் போன்ற சாதாரண நபர்களால் இவ்வளவு பெரிய திருட்டைச் செய்ய முடியுமா? அல்லது இதற்குப் பின்னால் யார் உள்ளனர்?
“கேதார்நாத் கோவிலில் இருந்து 228 கிலோ தங்கம் காணாமல் போயுள்ளது (திருடப்பட்டுள்ளது). இது தொடர்பாக முறையான விசாரணை இன்னும் தொடங்கப்படவில்லை. அங்கு அவ்வளவு பெரிய ஊழலைச் செய்துவிட்டு, இப்போது டில்லியில் மற்றொரு கேதார்நாத் கோவிலைக் கட்டப் பார்க்கிறார்கள்,” என்று மிகத் தீவிரமான குற்றச்சாட்டை முன்வைத்தார். அதற்கு கோவில் நிர்வாகம் கொடுத்த விளக்கம் என்ன? “தங்கத் தகடுகள் பதிக்கும் பணியை அரசோ அல்லது கோவில் நிர்வாகமோ செய்யவில்லை. நன்கொடையாளரே தன் சொந்தப் பொறுப்பில் நகைக் கடைக்காரர்களைக் கொண்டு இப்பணிகளைச் செய்து முடித்தார். கோவில் தரப்பில் வெறும் மேற்பார்வை மட்டுமே செய்யப்பட்டது.
கோவில் தங்கம் கொள்ளை என்பது பரபரப்பிற்காகச் சொல்லப்படும் பொய் என்று கூறி குற்றச்சாட்டுகளை நிராகரித்தது. சங்கராச்சாரியாரிடம் இதற்கான ஆதாரங்கள் இருந்தால் அவற்றை நீதிமன்றத்தில் சமர்ப்பித்து வழக்கைத் தொடருமாறு சவால் விடுத்துள்ளது.
பத்மநாபசுவாமி கோவில் மற்றும் சபரிமலை அய்யப்பன் கோவில் ஆகிய தென் இந்தியக் கோவில்களிலும் தங்கம் மற்றும் நகைகள் கையாடல் தொடர்பான தனித்தனி வழக்குகள் நீதிமன்றங்களில் நடந்து வருகின்றன, கேதார்நாத் தங்கக் கொள்ளை எடுத்த எடுப்பிலேயே கோவில் நிர்வாகத்தால் ‘அதெல்லாம் ஒன்றும் நடக்கவில்லை’ என்று அதிரடியாகக் கூறப்பட்டு இழுத்து மூடியாகி விட்டது.
பிருந்தாவன்
பாங்கே பிஹாரி கோவிலின் கருவூல அறை 1971 ஆம் ஆண்டிற்குப் பிறகு பூட்டப்பட்டு, கடந்த 54 ஆண்டுகளாகத் திறக்கப்படாமல் இருந்தது. உச்ச நீதிமன்றத்தால் நியமிக்கப் பட்ட உயர் மட்டக் குழுவின் உத்தரவின் பேரில், 2025 அக்டோபர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் பலத்த பாதுகாப் புடன் இந்தக் கருவூலம் திறக்கப்பட்டது.
பாரத்பூர், குவாலியர் போன்ற சமஸ்தான மன்னர்கள் மற்றும் பொதுமக்கள் பல நூற்றாண்டுகளாகக் காணிக்கை யாக வழங்கிய தங்கக் கிரீடங்கள், நவரத்தின மாலைகள், விலைமதிப்பற்ற வைர, வைடூரிய நகைகள் இந்தக் கருவூலத்திற்குள் இருந்தது. இதற்கான அத்தனை ஆவணங் களும் இன்றும் உள்ளன. ஆனால் பல ஆயிரம் கோடி தங்கம் வைர வைடூரிய நகைகள் கொள்ளை போன விவகாரத்தை அப்படியே மூடி மறைத்து விட்டார்கள்.
பாங்கே பிஹாரி கோவிலின் நிர்வாகம் மற்றும் தினசரி வழிபாட்டு முறைகள் பல நூற்றாண்டுகளாக பாரம்பரியமாக ‘கோஸ்வாமி’ சமூகத்தைச் சேர்ந்த குடும்பத்தினர்களால் மட்டுமே மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
வடகலை – தென்கலை பிரிவு போன்றது
இந்த கோஸ்வாமி சமூகத்தினர் தங்களுக்குள் முக்கியமாக ராஜ்போக் மற்றும் சயன்போக் என இரு பிரிவுகளாகவும், மேலும் பல்வேறு குடும்ப அமைப்புகளாகவும் பிரிந்துள்ளனர். இவர்கள் மட்டுமே கோவிலுக்கு வரும் கோடிக்கணக்கான ரூபாய் காணிக்கை, நன்கொடைகள் மற்றும் விஅய்பி தரிசனக் கட்டணங்களை தங்களுக்குள் பங்கு பிரித்துக் கொள்வர். இதில் பல ஆண்டுகளாக இந்தக் குடும்பங்களுக்கு இடையே கடுமையான உள்நாட்டுப் பூசல்களும், மதுரா சிவில் நீதிமன்றத்தில் எண்ணற்ற வழக்குகளும் நடந்து வருகின்றன. இந்த நிர்வாக முடக்கத்தால் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகள் கூட செய்யப்படவில்லை என நீதிமன்றங்கள் அதிருப்தி தெரிவித்துள்ளன. கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்களும், வார இறுதி மற்றும் சிறப்பு நாள்களில் 2 முதல் 3 லட்சம் பக்தர்களும் வருகை தருகின்றனர்.
உண்டியல் காணிக்கை மற்றும் ‘விஅய்பி தரிசனம்’, ‘ராஜ பங்களா சேவை’ போன்றவற்றின் மூலம் வசூலாகும் கோடிக்கணக்கான ரூபாய்கள் முறையாக வங்கிக் கணக்குகளில் செலுத்தப்படாமல், சில அர்ச்சகர்கள் மற்றும் நிர்வாகத்தில் உள்ளவர்களால் நேரடியாகக் கையாடல் செய்யப்படுவதாகப் பொதுநல வழக்குகள் (PIL) தொடரப்பட்டன.
நன்கொடை முறைகேடு: நூற்றுக்கணக்கான கோடிகள் வருமானமாக வந்தும், போதிய கணக்கு வழக்குகள் பராமரிக்கப்படவில்லை என்பதும், அந்தப் பணம் பக்தர்களின் பாதுகாப்புக்கோ அல்லது கோவில் மேம்பாட்டிற்கோ பயன்படுத்தப்படவில்லை என்பதும் புகாரின் பேரில் நிரூபிக்கப்பட்டது. இந்தத் தொடர் புகார்களை அடுத்து, அலகாபாத் உயர் நீதிமன்றம் மற்றும் இந்திய உச்ச நீதிமன்றம் ஆகியவை தலையிட்டு, கோவில் நிர்வாகத்தை முறைப்படுத்தப் பல அதிரடி உத்தரவுகளைப் பிறப்பித்தன:
அரசின் கட்டுப்பாட்டு முயற்சிக்குத் தடை: முறைகேடுகளைக் களைந்து கோவிலை முறைப்படுத்த, உத்தரப் பிரதேச அரசு ‘சிறீ பாங்கே பிஹாரி ஜி கோவில் அறக்கட்டளை அவசரச் சட்டம், 2025′ (Ordinance) மூலம் கோவிலை ஒரு அரசு சாரா தன்னாட்சி அறக்கட்டளையின் கீழ் கொண்டு வர முயன்றது. ஆனால், இது தங்களின் பாரம்பரிய உரிமைகளைப் பறிப்பதாகக் கூறி கோஸ்வாமி சமூகத்தினர் உச்ச நீதிமன்றத்தை நாடினர். உச்ச நீதிமன்றம் அரசின் இந்த அவசரச் சட்டத்திற்கு இடைக்காலத் தடையை விதித்துள்ளது.
கோவில் நிர்வாகத்தின் வங்கிக் கணக்கில் உள்ள கோடிக்கணக்கான ரூபாய் வைப்புத்தொகையை பிருந்தாவனக் கோவில் தாழ்வாரம் அமைப்பதற்காக நிலம் கையகப்படுத்த அரசு பயன்படுத்த முயன்றது. ஆனால், அலகாபாத் உயர் நீதிமன்றமும், உச்ச நீதிமன்றமும் “கோவில் பணத்தை அரசு தனது திட்டங்களுக்குப் பயன்படுத்தக் கூடாது; அரசு தனது சொந்த நிதியில் இருந்தே தாழ்வாரப் பணிகளை மேற்கொள்ள வேண்டும்” என்று நிபந்தனை விதித்துள்ளது.
பாரம்பரிய சடங்குகளில் நிர்வாகக் குழு தலையிடுவதாக எழுந்த புகாரை அடுத்து, உச்ச நீதிமன்றம் அண்மையில் (மே 2026இல்) வெளியிட்ட உத்தரவில், இந்த உயர் அதிகாரக் குழுவில் கோஸ்வாமி சமூகத்தின் இரு பிரிவுகளிலிருந்தும் தலா இரண்டு பிரதிநிதிகளை (மொத்தம் 4 பேர்) முறைப்படி நியமித்து, அவர்களின் ஆலோசனைகளையும் பெற்று, பாரம்பரிய சடங்குகளுக்குப் பங்கம் விளைவிக்காமல் நிர்வாகத்தை வெளிப்படைத்தன்மையுடன் நடத்த உத்தர விட்டுள்ளது. அதாவது திருடர்களின் கையிலேயே நிர்வாகம் சிறப்பாக நட்த்த ஒப்படைக்கப்பட்ட்து
சிறீ பத்மநாபசுவாமி
கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் உள்ள சிறீ பத்மநாபசுவாமி கோவில் உலகிலேயே மிக அதிக சொத்துகளைக் கொண்ட ஆன்மிகத் தலங்களில் ஒன்றாகக் கருதப்படுகிறது. இந்தக் கோவிலின் நகைகள் மற்றும் தங்கம் காணாமல் போனது/முறைகேடு செய்யப்பட்டது தொடர்பான சர்ச்சைகள் இருவேறு காலகட்டங்களில் (2014 மற்றும் சமீபத்திய 2026இல்) பெரும் பரபரப்பை ஏற்படுத்தின.
2011-ஆம் ஆண்டு உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கோவிலின் பாதாள நிலவறைகள் (Vaults) திறக்கப்பட்டு, அங்குள்ள பல லட்சம் கோடி மதிப்புள்ள தங்க, வைர நகைகள் கணக்கெடுக்கப்பட்டன. இதைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தை ஆய்வு செய்ய உச்ச நீதிமன்றத்தால் மூத்த வழக்குரைஞர் கோபால் சுப்பிரமணியம் நியமிக்கப்பட்டார்.
அவர் தாக்கல் செய்த 575 பக்கங்கள் கொண்ட ஆய்வு அறிக்கையில் பல அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாயின: 26 கிலோ தங்கம் மாயம்: கோவிலின் கணக்குகளில் இருந்த சுமார் 26 கிலோ தங்கம் (அன்றைய மதிப்பில் ரூ.80 கோடிக்கும் மேல்) பதுக்கப்பட்டு அல்லது கடத்தப்பட்டு மாயமாகியிருந்தது கண்டறியப்பட்டது.
தங்க முலாம் பூசும் இயந்திரம்: கோவில் வளாகத்திற்குள் சுவிட்சர்லாந்து தயாரிப்பான தங்க முலாம் பூசும் இயந்திரம் மற்றும் தங்கம் வெட்டும் இயந்திரம் ரகசியமாக வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அசல் தங்க நகைகளை வெளியே கடத்திவிட்டு, அதற்குப் பதிலாக போலி நகைகளை வைப்பதற்காக இது பயன்படுத்தப் பட்டிருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்தது. “முதல்பாடி அறைகள்” என்ற பூட்டப்பட்ட ரகசிய அறைகளில் நகைகள் பதுக்கப் பட்டிருந்தன. நகைகளை மணல் லாரிகளில் மணலோடு கலந்து வெளியே கடத்தியதாகக் கோவில் பணியாளர் ஒருவர் வாக்குமூலம் அளித்தார்.
தாக்குதல் சம்பவங்கள்: இந்த முறைகேடுகளைத் தட்டிக்கேட்ட அல்லது தடுக்க முயன்ற கோவில் ஊழியர் ஒருவர் மீது ஆசிட் வீசப்பட்ட சம்பவமும், மற்றொரு ஊழியர் கோவில் குளத்தில் மர்மமான முறையில் இறந்து கிடந்ததும் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டது.
இந்த அறிக்கையைத் தொடர்ந்து, கோவில் நிர்வாகத்தை மன்னர் குடும்பத்திடமிருந்து தற்காலிகமாக மாற்றி, மாவட்ட நீதிபதி தலைமையிலான 5 நபர் குழுவிடம் உச்ச நீதிமன்றம் ஒப்படைத்தது. மேலும், முன்னாள் தலைமை கணக்கு தணிக்கையாளர் (CAG) வினோத் ராய் தலைமையில் சிறப்பு தணிக்கைக்கும் உத்தரவிடப்பட்டது. (இதன் தொடர்ச்சியாக 2020இல் உச்ச நீதிமன்றம் கோவிலை நிர்வகிக்கும் உரிமையை மீண்டும் மன்னர் குடும்பத்தின் கட்டுப்பாட்டிலுள்ள குழுவிற்கே வழங்கியது குறிப்பிடத்தக்கது). அண்மையில், மே 2026இல் கேரள மாநில காவல்துறை தலைமை இயக்குநர் சமர்ப்பித்த ரகசிய உளவுத்துறை அறிக்கை, கோவிலின் பாதுகாப்பு மற்றும் நகைகள் குறித்து மீண்டும் ஒரு புதிய சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
பக்தர்கள் காணிக்கை மாயம்: பக்தர்கள் காணிக்கையாக வழங்கிய சுமார் 78 கிராம் எடையுள்ள தங்கக் கட்டிகள் மற்றும் நாணயங்கள் அண்மைய மாதங்களில் காணாமல் போயுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது.
வைர நாமம் மற்றும் தங்க விளக்கு: மூலவர் சிலைக்கு அணிவிக்கப்படும் வைரங்கள் பதிக்கப்பட்ட புனிதமான “வைர நாமம்” பழுதுபார்ப்பு என்ற பெயரில் கொண்டு செல்லப்பட்டு கடந்த 6 மாதங்களாகத் திரும்பக் கொண்டுவரப்படவில்லை என்றும், பல அடுக்குகள் கொண்ட தங்க விளக்கு ஒன்றுக்கு பதிலாக, கணக்கில் வராத வெள்ளி விளக்கு மாற்றீடு செய்யப்பட்டுள்ளதாகவும் காவல்துறை அறிக்கை குற்றம் சாட்டியுள்ளது.
பாதுகாப்பு விதிமீறல்கள்: ‘செம்பகத்தூமூடு’ நுழைவாயில் வழியாகச் சில முக்கிய நபர்கள், ஊழியர்கள் மற்றும் அரண்மனைக்கு நெருக்கமானவர்கள் எவ்வித முறையான பாதுகாப்பு சோதனைகளும் இன்றி அனுமதிக்கப்படுவதாகக் அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. உளவுத்துறையின் இந்த 2026-ஆம் ஆண்டு அறிக்கையை கோவில் நிர்வாகக் குழு முற்றிலும் மறுத்துள்ளது.
கோவில் முழுவதும் 24 மணி நேரமும் கண்காணிப்புப் படக்கருவி (CCTV) கண்காணிப்பில் உள்ளதால், தங்கம் திருடப்பட வாய்ப்பே இல்லை என்றும், இந்த அறிக்கை கோவிலின் புகழைக் கெடுக்க திட்டமிட்டு பரப்பப்படும் தவறான தகவல் என்றும் கூறி நீதிமன்றத்தை நாடப்போவதாகக் கோவில் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீரடி சாய்பாபா கோவில் (மகாராட்டிரா)
உலகின் மிக அதிக வருமானம் ஈட்டும் கோவில்களில் ஒன்றான சீரடி சாய்பாபா கோவில் அறக்கட்டளை மீதும் பலமுறைப் நிதி முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. கோவிலுக்கு வரும் கோடிக்கணக்கான ரூபாய் நன்கொடைகள், அறக்கட்டளை விதிகளுக்கு மாறாகப் பல்வேறு தனியார் நிறுவனங்களுக்கு முதலீடாகத் தரப்பட்டதாகப் புகார்கள் எழுந்தன.
தணிக்கை கோளாறுகள்: வருமான வரித்துறை நடத்திய ஆய்வில், பல கோடி ரூபாய் கணக்கில் காட்டப்படாமல் மறைக்கப்பட்டதும், அறக்கட்டளை நிர்வாகத்தில் இருந்தவர்கள் முறைகேடான முறையில் சொத்துக்களைக் குவித்ததும் அம்பலமானது. பிரபலமான கோவில் கொள்ளைகளில் சில கோவில்களில் நடந்த கொள்ளைகள் பற்றிய விவரங்களே இவையாகும்.
மலைக்க வைத்தவை திருப்பதி லட்டு ஊழல், ஆபரண ஊழல் மட்டுமா? ஜம்மு காஷ்மீர் வைஷ்ணவாதேவி கோவிலில் பக்தர்கள் வேண்டுதலாக செலுத்திய தூய தங்க, வெள்ளி நாணயங்கள் சுமார் 47 கிலோ எடையுள்ளவையை தணிக்கை வாரியம் ஆய்வு செய்தது. அவை அத்தனையும் போலியானவை என்று தெரிந்தது. இன்றுவரை தூய தங்கத்தைத் திருடி அதற்கு பதிலாகப் போலி முலாம் பூசிய நாணயத்தை வைத்தக் கோவில் பார்ப்பனர்கள் மீது யாரும் கேள்வி கூட எழுப்பவில்லை!
பூரி ஜெகநாதர் கோவில், உஜ்ஜைன் காலபைரவர் கோவில். கட்ராவில் உள்ள ஜ்வாலா முகி கோவில் எனப் பட்டியல்தான் நீண்டுகொண்டே போகிறது. அத்தனையிலும் விசாரணை ஏதுமின்றி ராமன் கோவில் கொள்ளைப் போன்றே செய்தி வந்த சில நாள் மட்டும் பரபரப்பாகப் பேசப்படும். பிறகு கோவில் நிர்வாகமே அப்படி எல்லாம் ஒன்றும் நடக்கவில்லை என்று விசாரணை அறிக்கை ஒன்றினைச் சமர்ப்பிக்கும். அத்தோடு முடித்து வைக்கப்பட்டு விடும்.
சுதந்திர இந்தியாவில் கோவில்களில் கொள்ளையடிக்கப் பட்டவைகளின் மதிப்பு ரூ.14 லட்சம் கோடிகளைத் தாண்டும் என்று ராமன் கோவில் கொள்ளை தொடர்பாக தனியாக புலனாய்வு நடத்தி வரும் பாரத் சமாச்சார் குத்துமதிப்பாகத் தெரிவிக்கிறது. எல்லாம் மக்களின் பணமே!
