தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டி!
சென்னை, ஜூலை 2– ஆளும் த.வெ.க. அரசின் தவறுகளை திசை திருப்பவே கழகத்தின் மீது பழி சுமத்தும் நோக்கில் வழக்கு தொடரப்பட்டுள்ளது என்றும் இதை பொய் என நிரூபிப்போம் என்றும் தி.மு.க. சட்டத்துறைச் செயலாளர் என்.ஆர்.இளங்கோ பேட்டியின் போது கூறினார்.
தி.மு.க.வின் மீது பழி சுமத்தும் நோக்கில் வழக்கு தொடர்ந்துள்ள தவெக அரசை கண்டித்து தி.மு.க. சட்டத்துறை செயலாளர் என்.ஆர்.இளங்கோ அளித்த பேட்டி வருமாறு:
குதிரை பேரம் மூலம் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களை பதவி விலகச் செய்ய வைத்து சட்டமன்றத்திலேயே த.வெ.க. கட்சியில் இணைக்கின்றனர். அதுபற்றி எல்லாம் லஞ்ச ஒழிப்புத் துறை, காவல்துறை விசாரிக்கவில்லையே ஏன்?
த.வெ.க. அரசின் மீதான அதிருப்தி, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து திசை திருப்பவே வழக்குப் பதிவு செய்துள்ளனர். இதை பொய் என நாங்கள் நிரூபிப்போம்.
லஞ்ச ஒழிப்பு துறை விசாரிக்க வேண்டிய புகாரை வழிமுறைகளை மாற்றி காவல்துறை விசாரிக்க வேண்டிய அவசியம் என்ன? அரசியல் கார ணங்களுக்காக தொடரப்பட்ட வழக்கை சட்டப்படி எதிர்கொண்டு முறியடிப்போம்.
த.வெ.க. கட்சியை சார்ந்த எம்.எல்.ஏ ஒருவர், சட்டப்பேரவைத் தலைவர் தேர்வின் போது மாற்றி வாக்களித்தால் ரூ. 35 கோடி தருவதாக ஒருவர் பேரம் பேசினார் என்றும், மிரட்டினார் என்றும் கடந்த 29 ஆம் தேதி புகார் அளிக்கப்பட்டு, அதன் மீது வழக்கு பதிவு செய்து 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கரூரை சேர்ந்த கார்த்திக் மற்றும் அவரது நண்பரையும் கைது செய்துள்ளனர். ஆனால் எங்கு வைத்துள்ளனர் என இதுவரை தெரியவில்லை.
லஞ்ச ஒழிப்பு துறைதான்
விசாரிக்க வேண்டும்!
விசாரிக்க வேண்டும்!
இந்த நேரத்தில் நீதிமன்றத்தில் மூன்று முக்கிய வாதங்களை நாங்கள் முன்வைத்தோம். அதில், லஞ்ச ஒழிப்புத் துறை தனி அமைப்பாக செயல்பட்டு வரும் போது அது தொடர்பான புகார்களை லஞ்ச ஒழிப்புத் துறைதான் விசாரிக்க வேண்டும். அப்படி அவர்கள் விசாரிக்க வேண்டிய ஒரு புகாரை வேறு காவல் பிரிவு விசாரிக்க வேண்டும் என்றால் அதற்கு அரசாங்க உத்தரவு பிறப்பிக்க வேண்டும்.
முன்னாள் முதலமைச்சர் அம்மையார் ஜெய லலிதா அவர்கள் மீதான மூன்று லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குகளை சிபிசிஅய்டி விசாரணை நடத்த தனிப்பட்ட அரசு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. ஆனால், இந்த வழக்கில் சென்னை காவல்துறை ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டு அந்த புகார் D5 திருவல்லிக்கேணி காவல் நிலையத்தில் பதியப்பட்டு உள்ளது. வழக்கு பதிவு செய்யும் போதே அது லஞ்ச ஒழிப்பு வழக்கு என காவல்துறையை சார்ந்த ஆணையர், துணை ஆணையர், ஆய்வாளர் என அனைவருக்கும் தெரிந்துள்ளது.
அப்படி இருந்தும் ஏன் இந்தப் புகாரை லஞ்ச ஒழிப்புத் துறைக்கு அனுப்பவில்லை என்றால் லஞ்ச ஒழிப்புத் துறைக்கு ஒரு புகார் சென்று அதை விசாரிக்கவேண்டும் என்றால் அதற்கு முறையான நடைமுறைகள் உள்ளன. அந்த நடைமுறைகளை பின்பற்றாமல் தவிர்க்க திருவல்லிக்கேணி காவல் நிலையம் மூலம் புகார் பெறப்பட்டுள்ளது.
ஆவணத்தில் முரண்பாடு!
அப்போது நாங்கள் நீதிமன்றத்தில் வைத்த வாதம், உச்ச நீதிமன்றம் வழிகாட்டல் படி குற்றம் சுமத்தபட்டவர்களுக்கு இரண்டு அடிப்படை உரிமைகள் உள்ளன. ஒன்று 7 ஆண்டுகளுக்கு குறைவாக தண்டனை பெற கூடிய குற்றம் சுமத்தப் பட்டவர்களுக்கு கைது செய்யும் முன் கட்டாயமாக அறிவிக்கை அனுப்பி விசாரணைக்கு அழைக்க வேண்டும். அவர் விசாரணைக்கு ஒத்துழைக்காத பட்சத்தில்தான் கைது செய்து விசாரிக்க வேண்டும். இரண்டாவது கைது செய்யப்பட்டதற்கான கார ணங்களை எழுத்து மூலமாக தர வேண்டும்.
இந்த இரண்டையும் செய்தது போல ஒரு ஆவணத்தை தாக்கல் செய்தனர். நீதிமன்றம் கேட்ட போது 30 ஆம் தேதி ஆஜராக அறிவிக்கை கொடுத்தோம் என்றனர். ஆனால் அவர்கள் கொடுத்த ஆவணத்தில் 29 ஆம் தேதியே அறிவிக்கை கொடுக்கப்பட்டுள்ளதாக இருந்தது. ஆனால் முதல் தகவல் அறிக்கை தயாரிக்கப்பட்டதே 30 ஆம் தேதி தான். 30 ஆம் தேதி பதிந்த வழக்கிற்கு 29 ஆம் தேதி எப்படி அறிவிக்கைகொடுத்தீர்கள் என நீதிமன்றம் கேள்வி கேட்டது. அதற்கு காவல்துறை தரப்பில் சரிவர பதில் அளிக்கப்படவில்லை.
ஏன் காவல்துறை நடவடிக்கை எடுக்கவில்லை?
இப்போது எம்.எல்.ஏ.க்கு பணம் கொடுக்க முயற்சித்ததாக கூறி இவ்வளவு விரைவாக செயல்படும் காவல்துறை, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.கள் தங்கள் எம்.எல்.ஏ. பதவியிலிருந்து விலகிவிட்டு சட்டமன்றத்திலேயே த.வெ.க. கட்சியில் இணைகி றார்களே அதை பார்த்தும் காவல்துறையும், லஞ்ச ஒழிப்புத் துறையும் ஏன் அமைதியாக இருக்கிறது. ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை என்ற வாதத்தையும் நீதிபதி முன்பு வைத்துள்ளோம்.
அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள், எம்.எல்.ஏ. பதவியிலி ருந்து விலகி, த.வெ.க.வில் இணைவதற்கு பின்னால் குதிரை பேரம் நடந்துள்ளது. த.வெ.க. செய்யும் குதிரை பேரத்தை ம.தி.மு.க. தலைவர் வைகோ அவர்களே வெளிப்படையாக கூறி உள்ளார். குற்றத்தை தடுக்கும் லஞ்ச ஒழிப்புத் துறை ஏன் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என எங்களது வாதங்களை வைத்துள்ளோம்.
பொய் என நிரூபிப்போம்!
மேலும் இனிவரும் நாட்களிலும் இதனை முன் வைப்போம். எங்களின் தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி அவர்கள் ஆளுநருக்கும், லஞ்ச ஒழிப்புத் துறைக்கும் இதுபற்றி ஏற்கெனவே கடிதம் எழுதி உள்ளார்.
இந்த ஆளும் அரசின் மீது மக்கள் வைத்துவரும் பல்வேறு குற்றச்சாட்டுகள், அரசின் தவறுகள், இயலாமை, அமைச்சர்கள் மீதான குற்றச்சாட்டுகளை மறைத்து திசை திருப்ப இதுபோன்ற வழக்குகளைப் பதிவு செய்கிறது இந்த அரசு.
இந்த வழக்கு என்பது அரசியல் காரணங்களுக்காக போடப்பட்ட வழக்கு. இதை பொய் என நாங்கள் நிரூபிப்போம்.
இவ்வாறு என்.ஆர்.இளங்கோ ேபட்டியளித்தார்.
