காந்திக்குப் பதில் ‘ராம்ஜி’ திட்டமா?

நாடு முழுவதும் எழுந்த எதிர்ப்பைப் பொருட்படுத்தாமல், மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தைத் தூக்கியெறிந்திருக்கிறது ஒன்றிய ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க. அரசு! காந்தியாரைக் கொன்றவர்கள், அவர் பெயரை நினைவுபடுத்திக் கொண்டிருந்த எளிய மக்களுக்கான திட்டத்தைக் கொன்றிருக்கிறார்கள்.

இந்திய ஒன்றியத்தைக் காங்கிரஸ் கட்சி தலைமையிலான அய்க்கிய முற்போக்குக் கூட்டணியின் பிரதமர் மன்மோகன் சிங் ஆட்சி செய்த காலகட்டத்தில் 2005-ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது தேசிய ஊரக வேலை உறுதிச் சட்டம் (National Rural Employment Guarantee Act) ஆகும்.

இதனடிப்படையில், கிராமப்புறங்களில் விவசாயக் கூலிகளாகவே இருக்கும் ஏழை, எளிய மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதே இதன் நோக்கம். ஆற்று நீர் பாசனமும், பெரும் நீர் ஆதாரங்களும் இல்லாத, வானம் பார்த்த பூமியாகப் பெரிதும் பருவ காலங்களில் மட்டும் விவசாயம் நடக்கும் இந்தியாவின் பெரும்பகுதியில், விவசாயம் நடைபெறாத நாள்களில் விவசாயக் கூலிகளின் உழைப்பும் நேரமும் வீணாவதுடன், அவர்களும் வறுமையில் வாடுகிறார்கள். அவர்களுக்கு வேலை வாய்ப்பை உருவாக்கு வதன் மூலம் அவர்களது பொருளாதாரத்தை மேம்படுத்துவதும், அவர்களின் உழைப்பைக் கொண்டே கிராமக் கட்டமைப்பை மேம்படுத்துவதும் இதன் செயல்முறையாக இருந்தது.

2009-ஆம் ஆண்டு இத் திட்டத்திற்கு மகாத்மா காந்தி ஊரக வேலை உறுதித் திட்டம் (MGNREGS) என்று பெயரிடப் பட்டு, விரிவுபடுத்தப்பட்டது. கிராமப்புறக் குடும்பங்களுக்கு ஒரு நிதியாண்டில் குறைந்தபட்சம் 100 நாட்களுக்கு ஊதியத்துடன் வேலைவாய்ப்பை உறுதிப்படுத்தியதன்மூலம் கிராமப்புற ஏழைகளின் பொருளாதார நலனை மேம்படுத்தி வாழ்வாதாரத்தைப் பாதுகாத்தது, ஒரே வேலைக்கு ஆண்களுக்கும் பெண்களுக்கும் சம ஊதியம் கிடைப்பதை உறுதி செய்தது, நீர் சேகரிப்பு, நில மேம்பாடு மற்றும் கிராமப்புற இணைப்பு போன்ற உழைப்பு தேவைப்படும் பணிகளில் கவனம் செலுத்துவது என்று இத் திட்டம் கொண்டு வந்த பலன்கள் ஏராளமானவை.

ஆனால், அத் திட்டத்தில் மாற்றங்கள் செய்வது என்னும் பெயரால், புதிதாகக் கொண்டு வரப்பட்ட சட்டத்தைத் திரும்பப் பெறுமாறு பல பொருளாதார நிபுணர்களும், சமூக விஞ்ஞானிகளும் ஒன்றிய அரசை வற்புறுத்தினர். நடைமுறையில் ஏற்ெகனவே இருந்த நல்ல திட்டத்தை பா.ஜ.க. அரசு ரத்து செய்வது மிகப்பெரிய வரலாற்றுப் பிழையாக நிலைத்து விடும் என்று பன்னாட்டுக் கல்வியாளர்கள் பலரும் கையொப்பமிட்டு எச்சரிக்கை விடுத்தனர்.

ஆர்.எஸ்.எஸ்.சின் எண்ணப்படி, காந்தியாரின் பெயரைத் திட்டமிட்டு நீக்கி, பா.ஜ.க.வின் அரசியல் மூலதனமான ராமனின் பெயரை நினைவூட்டும் வகையில், ‘விபி – ஜி ராம் ஜி’ என்று விநோதமாக ஆங்கிலத்தையும், சமஸ்கிருதத்தையும் கலந்து பெயர் வைத்தனர். அதற்கு அனைத்து எதிர்க்கட்சிகளும் எதிர்ப்பு தெரிவித்ததையும் ஒன்றிய பா.ஜ.க. அரசு கண்டு கொள்ளவில்லை.

மாநிலங்களுக்கு இதனால் நிதிச்சுமை அதிகரிக்கும். அது வரை ஒன்றிய அரசே செய்து வந்த செலவைப் பெருமளவில் மாநில அரசுகளின் தலையில் கட்டி, படிப்படியாக இத் திட்டத்தை ஒழிப்பதன் வாயிலாக மீண்டும் விவசாயக் கூலிகளைப் பண்ணையடிமைகளாக மாற்றுவதற்கு வழிவகுக்கும் என்று விடுக்கப்பட்ட எச்சரிக்கை, அத்தகைய பழைய நிலைமைக்கு வருவது பா.ஜ.க.வின் உயர்ஜாதிச் சார்பு அரசியலுக்கு வசதியாகவே இருப்பதால் புறக்கணிக்கப்பட்டது.

ஒன்றிய அரசு வகுத்துள்ள புதிய திட்டத்தின் படி, 100 நாள் என்பது 150 நாள் என்று மாற்றப்பட்டாலும், அதற்கு முன்பு இருந்ததைப் போல உறுதியில்லை. முந்தைய 100 நாள் வேலைத் திட்டத்தின் படி (MGNREGA), மொத்தக் கூலி செலவினத்தையும் ஒன்றிய அரசே செய்யும். தளவாடச் செலவுகளில் 75% பணத்தை ஒன்றிய அரசும், 25% பணத்தை மாநில அரசுகளும் வழங்கும்.

நிர்வாகச் செலவுகளில் 6% செலவை மட்டும் மாநில அரசுகள் ஏற்றால் போதும். எஞ்சியவற்றை ஒன்றிய அரசே செய்யும். ஆனால், இப்போது  மாநில அரசு மொத்த செலவி னங்களில் 40% பணத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டுமே தவிர, என்னென்ன பணிகள் நடைபெற வேண்டும் என்பதை ஒன்றிய அரசு தான் முடிவு செய்யுமாம். எடுத்துக்காட்டாக, இதன்படி, இத்திட்டத்திற்கான தமிழ்நாட்டின் ஆண்டுச் செலவு ரூ.629 கோடியிலிருந்து, ரூ..4356 கோடியாக உயரும். ஆந்திராவுக்கு ரூ.517 கோடியிலிருந்து, ரூ. 3301 கோடியாக உயரும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. மாநில அரசால் இத் தொகையைச் செலவு செய்ய முடியாவிட்டால், அவர்கள் கைவிட்டுவிடலாம்

இத்தனைப் பிரச்சினைகளுக்கு மத்தியிலும், விடாப்பிடியாக இத் திட்டத்தை நேற்று (ஜூலை 1) முதல் அமல்படுத்தியுள்ளது ஒன்றிய பா.ஜ.க. அரசு. இத் திட்டத்தைக் கடுமையாக எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, கருநாடகத்திலும், தெலங்கானாவிலும் இன்னும் அமல்படுத்தவில்லை என்று செய்தி வருகிறது. ஆனால், தமிழ்நாட்டில் ஆளும் புதிய த.வெ.க. முதலமைச்சர் புதுடில்லி சென்றிருந்தபோதே இத் திட்டத்தில் கையொப்பமிட்டுவிட்டார் என்று செய்திகள் வந்தன. நேற்று தமிழ்நாட்டிலும் அமல்படுத்திவிட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. நாடெங்கும் மகாத்மா காந்தி பெயரை ஒழித்துவிட்டார்கள் என்று போராடி, எதிர்க்கும் காங்கிரஸ் கட்சி, தமிழ்நாட்டிலும் த.வெ.க. கூட்டணியில் உள்ளது. தமிழ்நாடு அரசோ திட்டத்தை ஏற்றிருக்கிறது. காங்கிரஸ் கட்சிக்கு இதில் ஒப்புதல் உண்டா? அவர்களும் இணைந்தது தானே கேபினெட்! ஏதாவது எதிர்ப்பு தெரிவித்தார்களா? தமிழ்நாட்டின் நிதி நிலைமை மோசமாக இருக்கிறது என்று வெள்ளை அறிக்கை வெளியிட்ட த.வெ.க. அரசு, ஒன்றிய அரசு தரும் நிதி நெருக்கடிகளை மறந்தும் அதில் சொல்லவில்லை. மாறாக, புதிய நிதி நெருக்கடியைச் சுமக்கத் தயார் என்பது போல, திட்டத்தை ஏற்றுக் கொண்டு அறிவித்துவிட்டார்களே, தமிழ்நாட்டின் நிதி நிலைமை 50 நாட்களில் சரியாகிவிட்டதா?

இந்தப் பிரச்சினையில் தமிழ்நாடு அரசு எடுத்திருக்கும் முடிவு குறித்து இந்தத் திட்டத்தை எதிர்த்து வரும் கம்யூனிஸ்ட் கட்சிகளின் நிலைப்பாடு என்ன?

ஒன்றிய ஆர்.எஸ்.எஸ்.- பா.ஜ.க. அரசின் செயல்திட்டங்கள் ஒவ்வொன்றும் இந்தியாவின் மாநிலங்களை நசுக்கவும், ஒற்றையாட்சியைக் கொண்டு வரவும், மதவாத, ஜாதிய, வர்ணாசிரம ஆதிக்கத்த்தை நிறுவவும், சோசலிசத்திற்கு எதிராக முதலாளிகளுக்கு வால் பிடிக்கவுமே நடைமுறைப் படுத்தப்படுகின்றன. இவையெல்லாம் இணைந்த ஒன்று தான் விபி – ஜி ராம் ஜி! அதற்கு அடையாளமாகத்தான் மீண்டும் ஒருமுறை காந்தியாரை கொன்றிருக்கிறது ஆர்.எஸ்.எஸ்.!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *