கடும் வெப்ப அலையைக் கட்டுப்படுத்த சீனாவின் புது தொழில்நுட்பம்!

3 Min Read

2026-ஆம் ஆண்டில் உலகம் முழுவதும் வெப்ப அலைகள் தீவிரமடைந்து வரும் நிலையில், நகர்ப்புற வெப்பத்தைக் குறைக்கச் சீனா புதிய ‘மிஸ்ட் கூலிங்’ (பனிமூட்டக் குளிர்விப்பு) தொழில்நுட்பத்தை அறிமுகப் படுத்தியுள்ளது.

உலகம் முழுவதும் 2026ஆம் ஆண்டில் வரலாறு காணாத அளவுக்கு கடுமையான வெப்ப அலைகள் வீசி வரும் நிலையில், தங்களது நகரங்களைக் குளிர்ச்சியாக வைத்திருக்க பல்வேறு நாடுகள் புதிய தீர்வுகளை ஆராயத் தொடங்கியுள்ளன. அந்த வகையில், தற்போது சீனா கையில் எடுத்து உள்ள அதிநவீன தொழில்நுட்பம் உலக நாடுகளின் கவனத்தை ஈர்த்துள்ளது. அதிகப்படியான வெயில் காலங்களில் வெளிப்புற வெப்பநிலையை குறைப்பதற்காக, அங்குள்ள வானளாவிய உயரமான கட்டடங்களின் கூரைகளில் ‘மிஸ்ட் கூலிங்’ அமைப்புகள் நிறுவப்பட்டு வருகின்றன.

பொதுவாக நாம் பயன்படுத்தும் ஏர் கண்டிஷனர்கள் வீட்டின் உட்புறக் காற்றை மட்டுமே குளிர்விக்கும். ஆனால், அதற்கு முற்றிலும் மாறாக, சீனாவின் இந்த ‘மிஸ்ட் கூலிங்’ தொழில்நுட்பம் வெளிப்புறச்சூழலில் உள்ள காற்றையே குளிர்விப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது. இதற்காக உயரமான கட்டடங்களின் உச்சியில் பிரத்யேக முனைகள் பொருத்தப்பட்டு, வெயில் அதிகமாக இருக்கும் நேரங்களில் அவற்றின் வழியே மிக நுண்ணிய நீர்த்துளிகள் பனிமூட்டம் போல வெளிப்புறக் காற்றில் தெளிக்கப்படுகின்றன.

கட்டடங்களின் உச்சியில் இருந்து தெளிக்கப்படும் அந்த மிக நுண்ணிய நீர்த்துளிகள், காற்றில் வெளிவந்த அடுத்த கணமே ஆவியாகி விடுகின்றன. இந்தச் செயல்முறைக்கு ‘ஆவியாதல் மூலம் குளிர்வித்தல்’ என்று பெயர். இது காற்றில் உள்ள வெப்ப ஆற்றலை உறிஞ்சிக்கொண்டு, அந்தப் பகுதியின் ஒட்டுமொத்த வெப்பநிலையைக் குறைக்கிறது. இந்த விசித்திரத் தொழில்நுட்பம் ஓர் எளிய இயற்பியல் விதியின் (Physical law) அடிப்படையில் செயல்படுகிறது. நீர்ம நிலையில் இருக்கும் தண்ணீர், வாயு நிலைக்கு மாறும் போது, அது தன் சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் வெப்ப ஆற்றலை எடுத்துக்கொள்கிறது.

இவ்வாறு தெளிக்கப்படும் நீர்த்துளிகள் தரையை வந்தடைவதற்கு முன்பே காற்றில் ஆவியாகிவிடுவதால், தரையோ அல்லது கட்டடங்களின் மேற்பரப்போ நனைவதில்லை (உலர்ந்தே இருக்கும்); ஆனால், குளிர்ச்சியான சூழல் மட்டும் உருவாகிறது. சாதகமான வானிலை நிலவும் காலங்களில், இந்த ‘மிஸ்ட் கூலிங் சிஸ்டம்’ மூலம் அந்தப் பகுதியின் உள்ளூர் வெப்பநிலையைச் சுமார் 1o C முதல் 3o C வரை குறைக்க முடியும்.

கடந்த சில ஆண்டுகளாகவே சீனாவில் வெப்ப அலையின் தாக்கம் மிகக் கடுமையாக அதிகரித்து வருகிறது. குறிப்பாக, அங்குள்ள பெரிய நகரங்களில் கட்டடங்கள் மிக நெருக்கமாகக் கட்டப்பட்டுள்ளதால் ‘நகர்ப்புற வெப்பத் தீவு’ (Urban heat island) என்ற விளைவு ஏற்படுகிறது. இது சுற்றியுள்ள கிராமப்புறப் பகுதிகளை விட, நகரங்களைச் சற்றும் எதிர்பாராத அளவுக்கு மிக அதிக வெப்பமானதாக மாற்றுகிறது. இதற்குத் தீர்வாகவே சீனா இந்த முறையைக் கையாண்டு வருகிறது. விஞ்ஞானிகளின் கூற்றுப்படி, இதை வெளிப்புற ஏசி என்று அழைப்பது ஒரு ஒப்புமைக்காகத்தானே தவிர, அது அறிவியல் பூர்வமான விளக்கம் அல்ல. ஒரு ஏசி அறை முழுவதையும் குளிர்விப்பதைப் போல, இந்த அமைப்பால் ஒரு முழுப் பகுதியையும் குளிர்வித்துவிட முடியாது.

அதற்குப் பதிலாக, இது ஆவியாதல் முறை மூலம் குறிப்பிட்ட அந்த கட்டடங்களைச் சுற்றியுள்ள பகுதிகளில் மட்டுமே தற்காலிகக் குளிர்ச்சியைத் தரும். மேலும், இதன் செயல்திறன் என்பது காற்றில் உள்ள ஈரப்பதம், காற்றின் வேகம் மற்றும் அப்போதைய வளிமண்டல வெப்பநிலை ஆகியவற்றைப் பொறுத்தே அமையும்.

புவி வெப்பமயமாதல் காரணமாக உலகம் முழுவதும் வெப்ப அலைகள் அதிகரித்து வரும் நிலையில், இதுபோன்ற ‘மிஸ்டிங் ரூஃப்’ உள்ளிட்ட நகர்ப்புறக் குளிர்விப்பு நுட்பங்கள், நமது நகரங்களைக் கடுமையான வானிலை பாதிப்புகளில் இருந்து பாதுகாப்பதற்கான சிறந்த தீர்வாகப் பார்க்கப்படுகிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *