எளிமை, தூய்மை, தொண்டறத்தைக் கடைப்பிடித்த சீரிய பகுத்தறிவாளர் செந்தமிழ்க் காவலர் க.திருமாறன் படத்தினைத் திறந்து வைத்து கழகத் தலைவர் ஆசிரியர் நினைவேந்தல் உரை

4 Min Read

பெரும்பாக்கம், ஜூன் 21- இனமானப் பேராசிரியர் க. அன்பழகன் அவர்களின் தம்பி செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் படத்திறப்பில் கழகத் தலைவர் ஆசிரியர் பங்கேற்று நினைவேந்தல் உரையாற்றினார்.

செந்தமிழ்க் காவலர் பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் படத்திறப்பு நிகழ்ச்சி நேற்று (20-06-2026) காலை 11 மணியளவில் பெரும்பாக்கம் இக்சோரா கிளப் அவுசில் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. விழா அரங்கிற்கு வருகை தந்த கழகத் தலைவர் ஆசிரியர் அவர்களுக்கு க.திருமாறன் குடும்பத்தினர் அனைவரும் பொன்னடை அணிவித்து வரவேற்று நிகழ்ச்சி நடைபெறும் மேடைக்கு அழைத்துச் சென்றனர்.

பழைய புகைப்படங்கள்

முகப்பில் வைக்கப்பட்டுள்ள பழைய புகைப்படங்களை பார்த்த ஆசிரியர் அவர்கள் அண்ணாமலை பல்கலைகக்கழகத்தில் எடுக்கப்பட்டு இருந்த பேராசிரியரின் படங்கள், நண் பர்கள் படங்களைக் கண்டு அவர்களின் பெயர்களையெல்லாம் குறிப்பிட்டு அவரது குடும்பத்தினரிடம் எடுத்துக் கூறினார்.

படத்திறப்பு நிகழ்ச்சிக்கு வருகைதந்த அனைவரையும் திருமதி மலர்விழி அரிஅரன் வரவேற்று உரையாற்றுகையில், நாங்கள் என்றைக்கும் நேசிக்கக் கூடிய ஒரு தலைவர் ஆசிரியர் அவர்கள்…

எங்கள் தந்தையார் இளமைக் காலம் முதலே திராவிடர் கழகத்தின் மீது பற்று கொண்டவர். தந்தை பெரியார் மீதும் ஆசிரியர் அய்யா மீதும் மிகுந்த மரியாதை கொண்டவர். இந்த நிகழ்ச்சிக்கு யாரை அழைப்பது என்று வரும்போது தெளிவாக அனைவரும் சொன்ன கருத்து ஆசிரியர் அவர்களைத் தான் அழைக்க வேண்டும் என்று கூறினார்கள். எங்களது தந்தையார் குடும்பத்தினர் அனைவரிடத்தும் மூடநம்பிக்கை அறவே ஒழிய வேண்டும் என்றும், அறிவியல் மனப்பான்மை போன்ற சிந்தனைகளை எங்களுக்கு ஊட்டியும் வளர்த்தவர். நேர்மையான சிந்தனைகளை வாழ்நாள் முழுவதும் கடைப்பிடிக்க எங்களுக்கு வலியுறுத்தியவர். எதிர்மறை சிந்தனைகள் எங்களுக்கு இல்லாதவாறு உருவாக்கியவர் என்று குறிப்பிட்டார். கடுமையான நேர நெருக்கடியிலும் எங்களுக்காக வருகை தந்து பெருமை சேர்த்த ஆசிரியர் அய்யா அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம் என குடும்பத்தின் சார்பில் நன்றி பெருக்குடன் உரையாற்றினார்.

பேராசிரியர் க.திருமாறன் அவர்களின் நினைவை போற்றக்கூடிய வகையில் கவிதை ஒன்றினை அவரது பேத்தி இசைமொழி பாடினார். பேரன் கலைவாணன் அவரது நினைவுகளை பகிர்ந்து கொண்டார்.

மருத்துவர் சொக்கலிங்கம் அவர்கள் நினைவேந்தல் உரையில் தமிழ், தமிழர்களை நேசித்து பயணம் செய்து வரும் ஒரு தலைவர் – ஆசிரியரை பார்த்ததில் மகிழ்ச்சி அளிக்கிறது. அனைவரும் பிறக்கிறோம் – மறைகிறோம். ஆனால் ஒவ்வொருவரும் நல்ல மனநிலை, உணவு, உடற்பயிற்சிகளை மேற்கொண்டால் பல்லாண்டு நல்ல ஆரோக்கியத்துடன் வாழலாம் என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

கழகத் தலைவர் நினைவேந்தல்

பேராசிரியர் க.திருமாறனார் அவர் களின் படத்தினை திறந்து வைத்து கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நினைவேந்தல் உரையாற்றினார். நாங்கள் வெளியூர் சுற்றுப்பயணத்தில் இருந்த போது மறைவுச் செய்தி அறிந்து துன்பம் அடைந்தோம்.

அய்யா திருமாறன் அவர்களின் குடும்பம் எடுத்துக்காட்டான ஒரு முற் போக்கான குடும்பம் இது… என்னுடைய இளமை காலம் முதலே நன்கு அறி வேன். நிறைவு வாழ்வு வாழ்ந்து மறைந் துள்ளார். நம் நெஞ்சங்களில் என்றும் வாழக்கூடியவர்.

விஜயவாடா மாநாடு

அய்யா திருமாறன், அம்மையார் பத்மா ஆகிய இருவரும் பகுத்தறிவாளர் கழக நிகழ்ச்சிகளில் எப்பொழுதும் கலந்து கொள்ளக் கூடியவர்கள். ஒரு முறை விஜயவாடாவில் ஒருங்கிணைக்கப்பட்டு இருந்த கருத்தரங்கம்-மாநாட்டிற்கு தனியாக வந்து அமர்ந்திருந்தது பார்த்து வியந்து போனோம். அது இன்றும் நம் நெஞ்சங்களில் நிழலாடுகிறது. வேர்களுக்கு விழுதுகள் நிகழ்ச்சியை ஒருங்கிணைத்துள்ளதும், அவர் போட்டு தந்த பாதையில் நடந்து அவர்களுக்கு பெருமை சேர்த்துள்ளனர். மகள்களும் சரி, மகனும் சரி சிறப்புடன் வளர்ந்து அவருக்கு செய்ய வேண்டிய அத்தனை கடமையையும் செய்து இருக்கிறார்கள். அவருடைய படத்தை திறந்து வைத்திருக் கிறோம் என்று சொன்னார்கள். அது வெறும் படம் அல்ல பாடம்! எளிமை, தூய்மை, தொண்டறத்தைக் கடைசி வரைக் கடைப்பிடித்து தன்னுடைய குடும்பத்திற்கே வழிகாட்டி இருக்கிறார்.

அவர்களுடைய பிள்ளைகள், குடும்பத்தினர் இன்றும், நாளையும் பகுத்தறிவாளர்களாக இருப்பார்கள் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை என்று குறிப்பிட்டு உரையாற்றினார்.

கழகத் தலைவர் ஆசிரியர் அவர்கள் அய்யா திருமாறன் அவர்களுக்கு புகழ் வணக்கம் செலுத்தி உரையை நிறைவு செய்தார்.

க.திருமாறன் குடும்பத்தினர்

நிகழ்ச்சியில் அம்மையார் பத்மா திருமாறன், மருத்துவர் சொக்கலிங்கம், செந்தாமரைச் சொக்கலிங்கம், பேராசிரியர் திருமாறனின் மகள்கள் மலர்விழி அரிஅரன், வளர்மதி வேலன், அல்லிவிழி தண்டபாணி, மகன் அறவள்ளுவன்-ரேவதி, பேரன்கள், பேத்திகள், சோழிங்கநல்லூர் மாவட்ட காப்பாளர் ஆர்.டி.வீரபத்திரன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வே.பாண்டு, தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், விருதுநகர் மாவட்ட காப்பாளர் நல்லதம்பி, தாம்பரம் மாவட்ட செயலாளர் கோ.நாத்திகன், கழக சொற்பொழிவாளர் என்னராசு பிராட்லா, மாணிக்கம், சுரேந்திரன், சு.மோகன்ராஜ், இரா.குணசேகரன், மற்றும் குடும்பத்தினர், கழகப் பொறுப்பாளர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

திருச்சி சிறுகனூரில் அமையவுள்ள பெரியார் உலகத்திற்கு நன்கொடை ரூ.25 ஆயிரத்திற்கான காசேலையைப் பேராசிரியர் க. திருமாறன் குடும்பத்தினர் சார்பில் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *