நீட் தேர்வினால் தற்கொலை செய்துகொண்ட கோவை மாணவிக்கு நீதி கேட்டும் –
நீட் தேர்வை முற்றிலுமாக ரத்து செய்யக் கோரியும்
சென்னை, ஜூன் 19 நீட் தேர்வில் ஒன்றிய அரசால் ஏற்படுத்தப்பட்டுள்ள அநீதி காரணமாக, நேற்று முன்தினம் (17.06.2026) கோவை புதூரைச் சேர்ந்த 19 வயது அனுகீர்த்தனா தற்கொலை செய்து கொண்டார். அவரது இறப்புக்கு நீதி கேட்டும், ஒன்றிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் பதவி விலகக் கோரியும், நீட் தேர்வையே முற்றாக ஒழிக்க வேண்டும் என்றும் நேற்று (18.6.2026) வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகத்தினர் போராட்டம் நடத்தியதால் கைது செய்யப்பட்டனர்.
2017 அரியலூர் குழுமூர் அனிதா முதல் 2026 கோவை அனு கீர்த்தனா வரை தமிழ்நாடு தாண்டியும் ஏராளமான மாணவர்கள், பெற்றோர்கள் தற்கொலை செய்தும், இதயத்தாக்குதல் ஏற்பட்டும் உயிரிழக்கும் அவலங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. கடந்த 17.6.2026 அன்று கோவை புதூரைச் சேர்ந்த 19 வயது மாணவி அனு கீர்த்தனா, நீட் தேர்வு அச்சம் காரணமாக தற்கொலை செய்து கொண்டார்.
2017 முதலாகவே நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பல்வேறு வகையான போராட்டங்களை திராவிட மாணவர் கழகம் சார்பில், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வழிகாட்டலில், தமிழ்நாடு முழுவதுமாகவும் நடத்தி வருகிறது. அந்த வகையில் கோவை மாணவியின் தற்கொலை ஏற்படுத்திய தாக்கத்தால், வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழகத்தினர் நேற்று (18.06.2026) மாலை 4 மணிக்கு தன்னெழுச்சியாக, அண்ணாசாலையில் இருக்கும் தந்தை பெரியார் சிலையருகில் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். காவல் துறையினர் அவர்களைக் கைது செய்து சிந்தாதிரிப்பேட்டை சுவாமி நாயக்கன் சாலையில் உள்ள காமாட்சி மீனாட்சி மகாலில் இரவு 7.30 மணி வரையிலும் வைத்திருந்து, பிறகு விடுவித்தனர்.
மறியலின் போது,
‘‘ரத்து செய்! ரத்து செய்! நீட் தேர்வை ரத்து ரத்து செய்!
ஒழிப்போம் ஒழிப்போம் நீட் தேர்வை ஒழிப்போம்!
பதவி விலகு! பதவி விலகு! ஒன்றிய கல்வி அமைச்சரே…
தர்மேந்திர பிரதானே…
பதவி விலகு! பதவி விலகு!
எத்தனை பலிகள், எத்தனை பலிகள்
நீட் தேர்வால் எத்தனை பலிகள்!
அனிதா முதல் அனு கீர்த்தனா வரை எத்தனை பலிகள் எத்தனை பலிகள்!
ஓய மாட்டோம் ஓயமாட்டோம்
நீட் தேர்வை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம், ஓய மாட்டோம்!’’ என்று உணர்ச்சி மிகுந்த முழக்கங்களை மாணவர் கழகதத் தோழர்கள் எழுப்பினர். காவல்துறையினர் கழகத் தோழர்களை வலுக்கட்டாயமாக பிடித்துச் சென்று வாகனத்தில் ஏற்றினர். அதற்கும் முன்னதாக பத்திரிகை யாளர்களைச் சந்தித்து மறியல் போராட்டத்துக்கான காரணங்களை, தோழர் சஞ்சய் விளக்கினார்.
போராட்டத்தில், வடசென்னை மாவட்ட திராவிட மாணவர் கழக தலைவர் சஞ்சய், வெங்கடேசன், நிலவன், செ.பெ.தொண்டறம், தளபதி பாண்டியன், த.மரகதமணி ஆகியோர் கலந்துகொண்டு கைதானார்கள். துணைப் பொதுச் செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார், வழக்குரைஞர் துரை அருண், பெரியார் சுயமரியாதை திருமண நிலையத்தின் இயக்குநர் பசும்பொன் ஆகியோர் கைதான தோழர்களை மண்டபத்தில் வந்து சந்தித்தனர். இரவு 7.30 மணிக்கு அனைவரும் விடுவிக்கப்பட்டனர்.
