
சென்னை, ஜூன் 18 சிபிஅய் ஊழல் வழக்கில் சிக்கிய அரசு ஊழியரை அவசர அவசரமாகப் பணியில் இருந்து விடுவித்து, அவர் சட்டமன்ற உறுப்பினர் ஆவதற்கு வழிவகை செய்த புதுச்சேரி மாநில அரசுக்கு சென்னை உயர்நீதிமன்றம் கடுமையான கண்டனங்களைத் தெரிவித்துள்ளது.
ஊழல் வழக்கில் வழக்குப் பதிவு
புதுச்சேரி மாநில பஞ்சாயத்து துறையில் டேட்டா என்ட்ரி ஆபரேட்டராகப் பணியாற்றி வந்தவர் ரவிகுமாார். இவர் மீது வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சிபிஅய் வழக்குப்பதிவு செய்து, விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே, தன்னை அரசுப் பணியில் இருந்து விடுவிக்கக் கோரி ரவிகுமார் தொடர்ந்த வழக்கில், தனி நீதிபதி அவரை விடுவிக்குமாறு உத்தரவிட்டார். அந்த உத்தரவை ஏற்று புதுச்சேரி அரசு அவரை உடனடியாக பணியில் இருந்து விடுவித்தது. அதன் பிறகு, கடந்த புதுச்சேரி சட்டமன்றத் தேர்தலில் என்.ஆர். காங்கிரஸ் சார்பில் வில்லியனூர் தொகுதியில் போட்டியிட்டு ரவிகுமார் சட்டமன்ற உறுப்பினராக வெற்றி பெற்றார்.
நீதிமன்றத்தின் சரமாரி கேள்விகள்
தனி நீதிபதியின் இந்த உத்தரவை எதிர்த்து புதுச்சேரி அரசு மேல் முறையீடு செய்யவில்லை. இதனால், வில்லியனூர் தொகுதியைச் சேர்ந்த வாக்காளர் ஒருவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்தார்.
இந்த மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் என். செந்தில்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது புதுச்சேரி அரசின் செயல்பாட்டிற்கு நீதிபதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
சிபிஅய்-யால் குற்றம் சாட்டப் பட்ட ஒரு அரசு ஊழியரை, தனி நீதிபதியின் உத்தரவை மட்டும் காரணம் காட்டி ஏன் உடனடியாக விடுவித்தீர்கள்? அதை எதிர்த்து அரசு ஏன் மேல்முறையீடு செய்யவில்லை?
ரவிகுமாருக்கு அரசு காட்டிய இந்த அதீத சலுகையை, புதுச்சேரி மாநிலத்தில் உள்ள மற்ற அனைத்து அரசு ஊழியர்களுக்கும் வழங்க அரசு தயாராக இருக்கிறதா?
இத்தகைய கடுமையான குற்றச்சாட்டுகளை நீதிமன்றம் எப்படி சாதாரணமாக எடுத்துக்கொள்ள முடியும்?
நீதிபதிகளின் இந்த கடுமையான எச்சரிக்கையைத் தொடர்ந்து, இந்த மேல்முறையீட்டு வழக்கிற்குப் பதிலளிக்க தங்களுக்குக் கால அவகாசம் வேண்டும் என புதுச்சேரி அரசுத் தரப்பில் கோரப்பட்டது. அரசின் கோரிக்கையை ஏற்ற நீதி மன்றம், வழக்கை 2 வார காலத்திற்கு ஒத்திவைத்து உத்தரவிட்டுள்ளது.இந்த விவகாரம் புதுச்சேரி அரசியல் மற்றும் அரசு வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
