திருவண்ணாமலை மருத்துவமனையில் லஞ்சப் புகார் அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவை முற்றுகையிட்ட பொதுமக்கள்!

2 Min Read

திருவண்ணாமலை, ஜூன் 13–- திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் லஞ்சப் புகார்கள் மற்றும் மோசமான சுகாதார சீர்கேடுகள் குறித்து பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள், மாவட்ட பொறுப்பு அமைச்சரான ஆதவ் அர்ஜூனாவை முற்றுகையிட்டு சரமாரி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அமைச்சர் ஆய்வு – திடீர் முற்றுகை

திருவண்ணாமலை மாவட்ட பொறுப்பு அமைச்சராகவும், பொதுப்பணித்துறை அமைச்சராகவும் நியமிக்கப்பட்டுள்ள ஆதவ் அர்ஜூனா, நேற்று (12.6.2026) மாவட்டத்தில் நடைபெற்று வரும் பல்வேறு வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதன் ஒரு பகுதியாக, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் மருத்துவ மாணவர்களுடன் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் அவர் பங்கேற்றார்.

நிகழ்ச்சி முடிந்து அமைச்சர் தனது காரில் புறப்பட முயன்றபோது, அங்கு திரண்டிருந்த பொதுமக்கள் மற்றும் நோயாளிகளின் உறவினர்கள் திடீரென அவரது காரை முற்றுகையிட்டனர்.

அடுக்கடுக்கான புகார்கள்

அமைச்சரை முற்றுகையிட்ட பெண்கள் உள்ளிட்ட பொதுமக்கள், மருத்துவமனையின் அவல நிலை குறித்து அடுக்கடுக்கான புகார்களைக் கூறி காரசாரமாக வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்:

மருத்துவமனையில் சிகிச்சைக்கு வரும் நோயாளிகளிடம் ஊழியர்கள் தொடர்ந்து பணம் வசூலிப்பதாகக் குற்றம் சாட்டினர். குறிப்பாக, பிரசவ வார்டில் பச்சிளம் குழந்தைகளைப் பார்க்க ரூ.1,500 வரை கட்டாய லஞ்சம் கேட்கப்படுவதாகப் புகார் கூறினர்.

போதிய படுக்கை வசதிகள் இல்லாததால், பிரசவம் முடிந்த மறுநாளே தாயையும், பச்சிளம் குழந்தையையும் தரையில் படுக்க வைக்கும் கொடுமை நடப்பதாகப் ஆதங்கப்பட்டனர்.

மருத்துவமனை கழிப்பறைகளில் சொட்டுத் தண்ணீர் கூட இல்லை. இதனால் வேறு வழியின்றி மருத்துவமனைக்கு வெளியே திறந்தவெளிப் பகுதியைப் பயன்படுத்த வேண்டிய அவல நிலை ஏற்பட்டுள்ளது.

குடிப்பதற்கும் தண்ணீர் இல்லாததால், நோயாளிகளின் உறவினர்கள் வெளியில் காசு கொடுத்துதான் குடிநீர் வாங்க வேண்டியுள்ளது.

கழிப்பறையில் தண்ணீர் கூட இல்லை” என அங்கிருந்த பெண்கள் அமைச்சரிடம் நேரடியாகக் கூறி கண்ணீர் மல்க முறையிட்டனர்.

பதிலளிக்காத அமைச்சர்

பொதுமக்களின் இந்த திடீர் கோபத்தாலும், சரமாரி குற்றச்சாட்டுகளாலும் என்ன செய்வது என்று தெரியாமல் அமைச்சர் ஆதவ் அர்ஜூனா சில நிமிடங்கள் திகைத்துப் போனார். பின்னர் நிலைமையைச் சமாளிக்கும் விதமாக, “நான் மதியம் உடைகளை மாற்றிக்கொண்டு, மீண்டும் மருத்துவமனைக்கு வந்து விரிவான ஆய்வு மேற்கொள்கிறேன்” என்று கூறிவிட்டு அங்கிருந்து அவசரமாகப் புறப்பட்டுச் சென்றார். அரசு மருத்துவமனையில் அமைச்சரையே மக்கள் முற்றுகையிட்ட இந்தச் சம்பவம் திருவண்ணாமலையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *